தனிமையை விரும்பும் 'ஹைனான் கிப்பன்'
ஹைனான் கிப்பன் குரங்குகள் வேறுபட்ட தனித்துவமான பழக்கவழக்கங்கள் கொண்டவையாகும்.
சீனாவின் மழைக்காடுகளில் வாழும் ஹைனான் கிப்பன் (Nomascus hainanus) எனும் வாலில்லாத குரங்கினம், மிகவும் அரிதாகவே தென்படுகின்றன. ஏனெனில் இதன் மொத்த எண்ணிக்கை, வெறும் 26 என்கிறார்கள்.
தென் சீனாவின் கடல்புறத்தில் உள்ள ஹைனான் பகுதியில் மட்டுமே இந்த குரங்குகள் வாழ்கின்றன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹைனான் கிப்பன் வகை குரங்குகள் வாழ்ந்து வந்த இடம்தான் அது என்றாலும் காடுகள் அழிவதாலும், தொடர் வேட்டையாலும் இவை எண்ணிக்கையில் சொற்பமாகிவிட்டன.
கிப்பன் குரங்கினத்தில் மொத்தம் 17 வகைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்திலும் ஹைனான் கிப்பன் குரங்குகள் வேறுபட்ட தனித்துவமான பழக்கவழக்கங்கள் கொண்டவையாகும். பொதுவாக கிப்பன் குரங்கினம் ஆண், பெண், நிறைய குட்டிகள் என குடும்பத்தோடு வாழும். ஆனால் இந்த ஹைனான் கிப்பன் வகை குரங்கினம் ஒரு ஆண் குரங்கு, நிறைய பெண் குரங்குகளை துணைவியாகக் கொண்டிருக்கும்.
மற்ற குரங்குகளை விட வேறுபட்டு அமைந்த இந்தக் குடும்ப வாழ்வு அமைப்பும் இதன் எண்ணிக்கை குறைவுக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.