உயிரினங்கள் வாழ்வதற்கு நிலவு உகந்ததா?


உயிரினங்கள் வாழ்வதற்கு நிலவு உகந்ததா?
x
தினத்தந்தி 16 Jun 2023 7:00 PM IST (Updated: 16 Jun 2023 7:01 PM IST)
t-max-icont-min-icon

பூமியை தவிர வேறு கோள்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று விஞ்ஞானிகள் வீறு கொண்டு வேலை செய்து வருகிறார்கள். அதற்காக புதிய செயற்கைக்கோள்களை நிலவுக்கு அனுப்பி சோதனைமேல் சோதனை செய்கிறார்கள்.

குறிப்பாக வளர்ந்த நாடுகள் நிலவை பங்கு போட துடிக்கிறது. அந்த அளவுக்கு நிலவில் கனிம வளங்கள் குவிந்து கிடக்கிறது. எதிர்காலத்தில் செவ்வாய்க்கு மனிதன் செல்ல நேர்ந்தால் போகும் வழியில் நிலவில் இறங்கி, இளைப்பாறி ஓரிருநாள் தங்கி அதன்பின்னர் செவ்வாய்க்கு பயணத்தை தொடரும் காலம் வரலாம். அந்த நிலவு பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 403 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த நிலவின் தன்மை குறித்து பார்க்கலாம்.....

நிலா என்பது புவியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள். இது சூரிய குடும்பத்தில் 5-வது மிகப்பெரிய துணைக்கோளும், இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும். நிலவு பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. ஈர்ப்பு விசை காரணமாக நிலவு புவியை நோக்கி எப்போதும் ஒரு பக்கத்தையே காட்டுகின்றது. அந்தப் பக்கத்தில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும், விண்கல் வீழ் பள்ளங்களுக்கும் இடையே பல எரிமலை மற்றும் சமநிலங்கள் உள்ளன.

புவியிலிருந்து நிலவு மிகத் தெளிவாகத் தெரிவதாலும், முறைதவறா பிறை சுழற்சியாலும் தொன்மைக் காலத்திலிருந்தே மனித சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் நிலவு மிகுந்த தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் ஓதங்களும் ஏற்படுகின்றன. புவியின் விட்டத்தைப் போல முப்பது மடங்கு தொலைவில் நிலவின் சுற்றுப்பாதை அமைந்திருப்பதால் வானத்தில் சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒரேபோல் காட்சியளிக்கின்றன.

புவியல்லாது மனிதர்கள் கால் பதித்த ஒரே வான்பொருள் நிலவாகும். சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டம் மனிதரில்லாத முதல் விண்கலத்தை 1959-ம் ஆண்டு நிலவில் இறக்கியது. இதுவரை மனிதன் செயல்படுத்திய திட்டங்களில் இயக்கிய ஒரே திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் அப்பல்லோ திட்டம் ஆகும்.

பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் அதிகம். ஆனால் நிலவின் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால் அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகம் குறைவு. நிலவில் நீரினை முதன்முதலில் இஸ்ரோவின் சந்திராயன்-1 விண்கலம் நாசாவின் கருவியைப் பயன்படுத்தி கண்டறிந்தது.1970-ம் ஆண்டில் அப்பல்லோ விண்வெளி பயணிகளால் கொண்டுவரப்பட்ட நிலவின் இரண்டு பாறையின் நீரினைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நிலவில் உள்ள பாறைகள் பெரும்பாலும் எரிமலை உமிழ்வின் போது புதைந்த கற்குழம்பு வேறு பரப்புக்கு தள்ளப்படுவதால் உண்டானதாக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது. பூமியை விட நிலவில் 6 மடங்கு ஈர்ப்பு விசை குறைவு என்பதால் பூமியில் 100 கிலோ இருந்தால் நிலவில் வெறும் 40 கிலோதான்.

நிலாவில் முதலில் கால்பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்டிராங். இவரின் கால்தடம் இன்றும் அங்கு அழியாமல் அங்கே அப்படியே உள்ளது. இதற்கான காரணம் நிலாவில் வளிமண்டலமும் கிடையாது. காற்றும் கிடையாது. இன்றுவரை நிலவின் ஒரு பகுதியை மட்டுமே காண்கிறோம். நிலவின் மற்றொரு பகுதியை நாம் பூமியில் இருந்து காண இயலாது. நிலா தானாக ஒளிவிடுவதில்லை. சூரியனிடம் இருந்த ஒளியை பிரதிபலிப்பதால்தான் நிலா இரவில் மிகவும் அழகாக தெரிகிறது.ஒவ்வொரு வருடமும் நிலவானது நம் பூமியை விட்டு 3.8 சென்டி மீட்டர் நகர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே சென்றால் நிலாவானது புவி ஈர்ப்பிலிருந்து விலகி நகர்ந்து சென்றுவிடும்.

நிலவிலும் நிலநடுக்கம் ஏற்படும். இது நம் பூமியை போல மிகப்பெரிய அளவில் இல்லாமல் மிகச்சிறிய அளவில் மட்டும் இருக்கும். இந்த நிலநடுக்கம் ஏற்பட காரணம் நம் பூமியின் அதிக ஈர்ப்புவிசைதான். நிலவில் நீர் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இது நிலவின் மேற்பரப்பில் இல்லாமல் நிலவின் அடிப்பகுதியில் உறைபனியாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞானிகளின் முயற்சியால் வரும் காலத்தில் நிலவில் குடியேறலாமோ?


Next Story