சுதந்திர போராட்டத்தில் காமராஜர்


சுதந்திர போராட்டத்தில் காமராஜர்
x

காலத்தாலும், நீராலும், நெருப்பாலும் அழியாதது கல்வி. அத்தகைய உயரிய கல்வியை அனைவருக்கும் இலவசமாய் வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் படிப்பும், இளமைப்பருவமும் குறித்து காண்போம்.

1903-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி காமராஜர் விருதுநகரில் பிறந்தார். அவரது தகப்பனார் குமாரசாமி நாடார். அவரது தாயார் சிவகாமி அம்மையார். அவரது இயற்பெயர் காமாட்சி. அவரது தாயார் அவரை ராஜா என்று அழைத்ததால் அவரது பெயர் காமராஜர் என்று மாறியது. 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த காமராஜர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு தனது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். செய்தித்தாள்கள் வாயிலாக சுதந்திர போராட்டம் குறித்து அறிந்து கொண்டார்.

1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1930-ஆம் ஆண்டு நடந்த உப்பு சத்தியாகிரகம், 1940-ம் ஆண்டு நடந்த ஆகஸ்டு புரட்சியில் கலந்து கொண்டு 9 ஆண்டுகள் அவரது வாழ்நாளில் சிறைவாசம் அனுபவித்தார்.

1931-ம் ஆண்டு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரானார். 1936-ம் ஆண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆனார். 1937-ம் ஆண்டு சாத்தூர் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். காங்கிரஸ் கமிட்டி தலைவராக 14 ஆண்டுகள் இருந்தார்.

1953-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் ஆனார். மொத்தம் 9 ஆண்டுகள் தமிழக முதல்-அமைச்சராக இருந்தார். 12 ஆயிரம் பள்ளிகளை புதிதாக தமிழகத்தில் திறந்தார். இலவச சீருடை, இலவச படிப்பு, இலவச மதிய உணவு திட்டங்களால் படிப்பின் தரத்தை உயர்த்தினார்.

நீர் மேலாண்மை, விவசாயம், தொழில்துறை என அனைத்திலும் கவனம் செலுத்தியதோடு, இந்தியாவின் "கிங்மேக்கராகவும்" இருந்தார். கருப்பு காந்தி, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் தனது 73-வது வயதில் 1975-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி அன்று இறந்தார்.

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. "வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை" என்ற வரிகளுக்கிணங்க நாட்டிற்காக வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜரை வாழ்த்தி வணங்குகிறேன்.


Next Story