உழைப்பே சிறந்த மூலதனம்
ஆசைக்கும், வெற்றிக்கும் இடையில் உழைப்பு என்ற பாலம் இருக்கிறது.
உழைப்புக்கு சரியான உதாரணம் கெடிகாரம். கொஞ்சம் வினாடி, சிறிது காலம் வேலை செய்யாமல் இருப்போமே என்று அது நினைத்தால் கோபுரத்தில் இருக்காது. குப்பைத் தொட்டிக்கு போய்விடும். ஊரே மதிக்க வேண்டும், உலகமே வியக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் கடும் உழைப்பை மூலதனமாக போட வேண்டும். ஆம், எந்த ஒரு சிறு உழைப்பும் இல்லாது உலகில் இருந்து பலவற்றை பெற நினைப்பது நல்ல பழக்கம் அல்ல. கண்டிக்கத்தக்கதும் கூட, அமெரிக்க தொழில் அதிபர் ராக்பெல்லரிடம் உங்கள் முன்னேற்றத்தின் ரகசியம் என்னவென்று கேட்டபோது அறிவு உடன் கூடிய உழைப்பு என்றார். கடுமையான உழைப்பு என்பதைவிட திறமையான உழைப்பு வெற்றிக்கான வித்து. இன்றைக்கு ஆகாய விமான சேவை சர்வசாதாரணமாக அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இறக்கையை கட்டிக் கொண்டு ஜன்னலில் இருந்து பறந்து அடிபட்டு கீழே விழுந்த ரைட் சகோதரர்கள் எழாமல் இருந்திருந்தால் விமானம் வந்திருக்குமா?
தெண்டுல்கர் போல், டோனி போல் கிரிக்கெட்டில் ஜொலிக்க வேண்டும் என்று பலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்களை போல களத்தில் இறங்கி அடிபட்டு பயிற்சி மேற்கொண்டு பாடுபட வேண்டும், பாடுபடாமல் முன்னேற முடியுமா? நல்ல வேலைக்கு சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று ஏகப்பட்ட ஆசைகளை உடையவர்கள் இன்னும் எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் இருந்தால் ஆசை அரங்கேறுமா?
ஆசைக்கும், வெற்றிக்கும் இடையில் உழைப்பு என்ற பாலம் இருக்கிறது. தோல்வி என்ற வெள்ளத்தில் இருந்து மீள அந்த பாலத்தை கடக்க வேண்டாமா, கனவு காணக்கூட தயாராகாதவர்கள் கனவு மட்டுமே காண்பவர்கள் என்பதையும் தாண்டி அதற்கான உழைப்பும், வேலைத் திட்டமும், முயற்சியும் உடையவர்களே வெற்றி பெறுகிறார்கள். சோம்பேறிகளுக்கு சோறுபோடுவது சமூகத்தின் வேலை அல்ல. கை, கால் இழந்தவர்கள் பலர் இன்று எத்தனையோ நம்ப முடியாத சாதனைகளை நடத்தி காட்டி இருக்கிறார்கள். அவர்களும் உழைத்து வாழ வேண்டும் என்று பல தொழில்களை செய்து திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் பல துறைகளில் சாதனை படைத்து உழைப்பே வாழ்க்கையின் சிறந்த மூலதனம் என்று நிரூபித்து வருகின்றனர். உனக்கெல்லாம் எதற்கு விளையாட்டு என்று ஏளன பேச்சுக்களை எல்லாம் கடந்தவர்தான் சானியாமிர்சா பல தோல்விகளுக்கு பிறகே வெற்றியை நிலை நாட்டினார். உற்சாகமாய் உழையுங்கள் வயது இளமையாக வாய்ப்பு இருக்கிறது. மாணவர்களே நீங்கள் இதை புரிந்துகொண்டால் உங்கள் வாழ்க்கை இனியதாக அமையும்.