நூற்றாண்டு விளக்கு


நூற்றாண்டு விளக்கு
x

கலிபோர்னியாவின் லிவர்மோர் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நூற்றாண்டை தாண்டியும் ஒரு மின் விளக்கு எரிந்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டில் உள்ள மின்விளக்குகளை மாற்ற வேண்டியிருக்கும் நிலையில், கலிபோர்னியாவின் லிவர்மோர் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நூற்றாண்டை தாண்டியும் ஒரு மின் விளக்கு எரிந்து வருகிறது. 1901-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 122 ஆண்டுகளாக இந்த மின் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! ஆம்.. இந்த நூற்றாண்டு விளக்கு ஒரு காலத்தில் 30 வாட் 'பல்ப்'பாக இருந்தது. ஆனால் தற்போது விளக்கிலிருந்து 4 வாட் ஒளியை மட்டுமே வெளிப்படுத்தினாலும், அது முற்றிலுமாக தன்னுடைய சேவையை நிறுத்திவிடவில்லை. இன்றும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. இந்த விளக்கு `சென்டென்னியல் விளக்கு' என்று அழைக்கப்படுகிறது.

இது 1890-ம் ஆண்டு பிற்பகுதியில் 'ஷெல்பி' என்ற மின்சாதன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு,1901-ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு துறைக்கு வழங்கப்பட்டது. அப்போது தன்னுடைய சேவையை தொடங்கிய இந்த மின்சார விளக்கு, இப்போதுவரை ஒளியை இழக்காமல், நூற்றாண்டை கடந்தும் ஒளிர்ந்து கொண்டுள்ளது. உலகின் மிக நீண்ட கால ஒளிரும் விளக்காக இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

1972-ம் ஆண்டு மைக் டன்ஸ்டன் என்ற நிருபர் முதன் முதலில் அதன் ஆயுளை கணக்கிடுவதற்காக அங்கு வாழ்ந்த மக்களிடம் ஆராய்ச்சி செய்து விட்டு, இதுவே உலகின் நீண்ட கால ஒளிரும் விளக்கு எனப் பதிவு செய்தார். 1901-ம் ஆண்டு முதல் எரிந்து கொண்டிருக்கும் இந்த மின்சார விளக்கு, மின் தடையின் போது மட்டுமே தன்னுடைய சேவையை நிறுத்தியிருப்பதையும் அவர் உறுதி செய்திருக்கிறார். தீயணைப்பு துறைக்காக வழங்கப்பட்ட இந்த விளக்கு 1976-ம் ஆண்டில், ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றப்பட்டது. அப்போது 22 நிமிடங்கள் மட்டுமே அணைந்த இந்த விளக்கை அவிழ்த்தால் அது சேதமடையும் என்ற பயத்தில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பெட்டியின் உதவியுடன் விளக்கு மாற்றப்பட்டது. 2001-ம் ஆண்டில் தன் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய சென்டென்னியல் விளக்கு, தொடர்ந்து எரிகிறதா? என்பதை பார்க்க, 2013-ம் ஆண்டில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. லிவர்மோர் தீயணைப்புத் துறை, லிவர்மோர் பணிமனை, லாரன்ஸ் லிவர்மோர் போன்ற தேசிய ஆய்வகங்கள் மற்றும் சாண்டியா நேஷனல் ஆய்வகம் ஆகியவை அடங்கிய ஒரு குழு, இந்த விளக்கை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story