திறன் பேசி பற்றி பார்ப்போம்...


திறன் பேசி பற்றி பார்ப்போம்...
x

தொலைதூரங்களுக்கு கூட அவசர செய்திகளை நிமிடத்தில் பரிமாற கூடியதாக பயன்படும் ஓர் அற்புத கருவி திறன்பேசி தான்.

நமது காலத்தின் அறிவியல் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. அதில் தற்காலத்தில் வேகமாக வளர்ந்த ஒன்று திறன்பேசி தான். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரின் கைகளிலும் காணப்படுபவை என்றால் அது திறன்பேசி எனலாம். அதில் பல நன்மைகளும் உண்டு. பல தீமைகளும் உண்டு. அவற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

திறன்பேசியும் குழந்தைகளும்:

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு நம் தாய்மார்கள் எல்லாம் இரவு உணவை பிள்ளைகளுக்கு நிலாவின் ஒளியில் அழகான நிலாப்பாடலை பாடிக்கொண்டு உணவூட்டுவார்கள். இக்காலத்தின் அம்மாக்கள் எல்லாம் தன் குழந்தைக்கு மூன்று வேளையும் நிலாவை காட்டும் தன்மை கொண்டவர்கள் எப்படி? திறன் பேசியின் மூலம் தான் அழகாக அவர்களை உக்காரவைத்து திறன்பேசியில் நிலாப்பாடலை இணையத்தின் வழியாக வைத்துவிட்டு அருமையாக ஊட்டுகிறார்கள். குழந்தைகளும் தன் கண்களை கூட சிமிட்டால் உற்றுப்பார்க்கிறார்கள். அதன் விளைவை பெற்றோர்கள் அறிந்து செயல்படுகிறார்களா, இல்லை அறியாது செயல்படுகிறார்களா? என்பது கேள்விக்குறி தான்?

தேவையான சேவைகள்:

தொலைதூரங்களுக்கு கூட அவசர செய்திகளை நிமிடத்தில் பரிமாற கூடியதாக பயன்படும் ஓர் அற்புத கருவி திறன்பேசி தான். தம் முன்னோர் காலத்தில் நல்லது, கெட்டது ,எதை தெரிவிக்க வேண்டுமானாலும் தபால், தந்தி என தெரிவிப்பதற்குள் ஒரு வழி ஆகிவிடுவார்கள். தற்போது அந்த தொல்லை இங்கில்லை. ஒரு செய்தியை கூறுவதற்கு ஒரு வினாடி போதும் தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, லண்டன் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து செய்திகளை பரிமாறுவதற்கு உகந்த கருவியானது திறன்பேசி.

வலைத்தள பாடங்கள்:

கொரோனா என்னும் மாபெரும் கிருமி உலகை ஆட்டிவைத்தன. அப்போது உலகில் உள்ள மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பாடங்கள் படிப்பதற்கு இயலாமல் சிரமப்பட்டன. தமிழகம் ஒரு சிறப்பான வழியை உருவாக்கின. இணையவழி கல்வி என்று அதை உருவாக்கியதற்கு முக்கிய காரணம் திறன்பேசி தான். கொரோனா காலத்தில் மாணவர்கள் வீட்டிலேயே கல்வி பயின்றதன் காரணம் திறன்பேசி தான். அக்காலத்தில் திறன்பேசி புத்தகமாய் அமைந்துள்ளன.

தீங்கு விளைவிக்கும் திறன்பேசி:

பள்ளிப்படிப்பிலேயே குழந்தைகளுக்கு திறன்பேசியை வாங்கிக்கொடுத்துவிடுகிறார்கள் பெற்றோர்கள், அதுவும் இந்த கொரோனாவின் விளைவே. அவர்கள் படிப்பதற்கு வாங்கி தருகிறார்கள். பிள்ளைகள் அதை படிப்பதற்கு மட்டும் உபயோகப்படுத்தாமல் பல தீய செயல்களுக்கு அடிமையாகி உள்ளனர். நன்மை உள்ளது என்றாலும் தீமையும் உள்ளது. அல்லவா? இணையதள விளையாட்டுகளுக்கு பிள்ளைகள் அடிமையாகி உள்ளனர். அதுமட்டுமின்றி 15 முதல் 18 வரை உள்ள பெண்களுக்கு இணையதளத்தின் மூலம் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அது அவர்களின் கல்வியை கெடுக்கும் விதம் அமைகிறது.

ஆபத்தான கருவி:

திறன்பேசி சிறிது ஆபத்தானதே. ஒரு சில மாதத்திற்கு முன் ஒருவரின் சட்டைப்பையில் இருந்த திறன்பேசி திடீரென பற்றி எரிந்ததாம். அதிர்ஷ்டவசமாக அம்மனிதன் உயிர்தப்பினார். அதேபோல் திறன்பேசியில் வெகுநேரம் இசையை கேட்டுக்கொண்டிருந்த ஒரு வாலிபன் உடல் வெடித்து உயிர் இழந்தான். அதிர்ஷ்டம் அவனை காக்கவில்லை. எனவே திறன்பேசியானது அளவுக்கு மீறினால் ஆபத்தையே விளைவிக்கும்.

திறன்பேசியினால் பாதிக்கப்படும் உறுப்புகள்:

திறன்பேசி யின் அதிக பயன்பாட்டினால் நமது கண்தான் முதலில் பாதிப்படைகிறது. இக்காலத்தில் பிறந்து ஒரு வயதிலேயே குழந்தைகள் திறன்பேசியை காண தொடங்குகிறது. அதன் விளைவு அப்பிள்ளை 1 அல்லது 2-ம் வகுப்பு படிக்கும் போதே கண்ணாடி அணிவது தான். பின்னர் பிரசவகாலத்தில் பெண்கள் திறன்பேசியை அதிகமாக உபயோகப்படுத்துவதால் அதிலிருந்து வெளிவரும் ஆபத்தான கதிர்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளை பாதிக்கும். அதிக நேரம் திறன்பேசியை பயன்படுத்துபவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். திறன்பேசிக்கு அடிமையாவது என்பது மதுபோன்ற போதைபொருட்களுக்கு அடிமையாவதற்கு சமமாகும்.

பயன்படுத்தும் முறை:

தேவையான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்துதல் நல்லது. அதிக நேர உபயோகத்தை சிறிது சிறிதாக குறைத்தல் வேண்டும். தேவையில்லாத இணைய கேள்விகளுக்கு பதிலளித்தல், தெரியாதவரின் அழைப்பை ஏற்றல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். திறன்பேசியை தொடர்ச்சியாக பலமணி நேரம் உபயோகிப்பதை தவிர்த்தல் வேண்டும். சமூக வலைதளங்களை நிதானமாக கையாளுதல் வேண்டும். பெண் பிள்ளை தன் புகைப்படங்களை வலைதளத்தில் பகிர்வதை தவிர்க்கவும். திறன்பேசியின் சேவை உலகிற்கு தேவை. ஆனால் அவற்றை பார்த்து கையாள வேண்டும். இல்லாவிடில் முதல் கோணல் முற்றிலும் கோணல் என ஆகிவிடும் . எனவே தொடக்கத்தில் இருந்து நன்முறையில் பயன்படுத்துதல் அவசியம்.

முடிவுரை:

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு பழமொழி உண்டு. அதேபோல் திறன்பேசியை நாம் அளவாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில் நஞ்சையே விளைக்கும். திறன்பேசி என்பது நல்ல கருவியா. தீய கருவியா என்பது அதை உபயோகப்படுத்துபவரை சார்ந்துள்ளன.


Next Story