மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்


மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
x

தேவதாசி முறையை ஒழிக்க அல்லும் பகலும் பாடுபட்டார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

திருவாருரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி -சின்னம்மாள் தம்பதிக்கு 1883-ம் ஆண்டு பிறந்தவர், ராமாமிர்தம் அம்மையார். இவர் ஓர் பெண் சீர்திருத்தவாதி, எழுத்தாளர். சென்னையில் இருந்த தேவதாசி முறையை ஒழிக்க கடுமையாக போராடியவர். 1936-ம் ஆண்டு இவரது சுயசரிதை நாவலான 'மதி பெற்ற மைனர்', தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. தனது முதல் போராட்டத்தை மயிலாடுதுறையில் தொடங்கினார். 1930-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் தேவதாசி முறை ஒழிப்பை சட்டமாக கொண்டு வர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போராடிய போது அவருக்கு உறுதுணையாக இருந்தார். ஆனால் அப்போது அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தேவதாசி முறையை ஒழிக்க அல்லும் பகலும் பாடுபட்டார். அவரது தொடர் போராட்டங்களுக்கு பிறகு சென்னை மாகாணத்தில் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் நிறைவேறியது. 1930-ம் ஆண்டு தொடங்கிய தேவதாசி ஒழிப்பு சட்டத்திற்கான போராட்டம் 1947-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக ராமாமிர்தம் அம்மையார் ஆறு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தீண்டாமை, குழந்தை திருமணம் ஆகிய சமூக சீர்கேடுகளை ஒழிப்பதில் தீவிரமாக இருந்தார். தன் வாழ்க்கையையே பெண்ணுரிமைக்காக அர்ப் பணித்த ராமாமிர்தம் அம்மையார் 27.6.1962 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். சமூகப் பணிகளில் மட்டுமல்லாமல் தேசிய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்ட அம்மையார், பெண்கள் பெருமளவில் தேசிய இயக்கத்தில் ஈடுபட ஊக்குவித்தார். இவரது அரிய உழைப்பையும் தியாகத்தையும் போற்றும் வகையில் தமிழக அரசு உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் என்ற பெயரில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.


Next Story