மனதை மயக்கும் 'மார்னிங்டன்'


மனதை மயக்கும் மார்னிங்டன்
x
தினத்தந்தி 14 July 2023 8:00 PM IST (Updated: 14 July 2023 8:00 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள மார்னிங்டன் மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் தரைப்பகுதியுடனும் தொடர்புடைய பூமி. அழகு பிரதேசமாக ஜொலிக்கும் இந்த இடம் ஒரு சொர்க்கபுரி.

ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக விக்டோரியா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கோடை காலத்தில் இங்கே குவிகின்றனர். இங்கு 25-க்கும் அதிகமான கடற்கரைகள் உள்ளன. ஒவ்வொரு கடற்கரையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது. நார்வே போன்ற நாடுகளில் இரவில் வானத்தில் தெரியும் வண்ண ஜாலங்களை இங்கு இருள் சூழ்ந்த உடனேயே ரசிக்கலாம் என்பது 'ஹைலைட்'.

ஏராளமான மலைகளும், கடற்கரைகளும் உள்ளதால் மலை ஏறுபவர்களும், கடலில் பலவித சாகச விளையாட்டில் ஈடுபடுபவர்களும் குவிகின்றனர். மூச்சுவிட உதவும் கருவிகளைப் பொருத்திக்கொண்டு, கடலுக்குள் நீந்துவது இங்கு பிரபலம். எந்த கடற்கரையில் வேண்டுமானாலும் தங்கி ஓய்வெடுத்துச் செல்லலாம். அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உண்டு. படகு சார்ந்த விளையாட்டுக்களுக்கு தனி திருவிழாவே நடப்பது தனிச்சிறப்பு. இதுபோக தேசிய பூங்காவும் உள்ளது.

இங்கு வென்னீர் ஊற்றும் அமைந்துள்ளது. இது, வியாதிகளை குணமாக்குவதாக நம்பப்படுகிறது. இதனால் அதில் குளிக்க மக்கள் குவிகின்றனர். 1830-ல் மெல்போர்ன் நகரம் பிறந்தது. அதற்கு முன்பே இங்கு ஆஸ்திரேலியாவின் பழங்குடிகள் வசித்து வந்தனர். இன்றும் உள்ளனர். இங்கே கோடையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமிருக்கும்.

மார்னிங்டனில் ஹரால்ட் என்றஆஸ்திரேலிய பிரதமர் உயிரை விட்டுள்ளார். 1967-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி, சுற்றுலாப் பயணம் வந்தவர், கடலில் இறங்கி நீந்தினார். அப்போது மூழ்கிப் போனார். இரண்டு நாள் தேடியும் உடல் கிடைக்காததால் டிசம்பர் 19-ந் தேதி, இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.


Next Story