கிழக்கு தொடர்ச்சி மலையின் எல்லைகள்


கிழக்கு தொடர்ச்சி மலையின் எல்லைகள்
x

தீபகற்ப இந்தியாவின் கிழக்கு அரணாகத் திகழ்வது, கிழக்கு மலைத்தொடர்.

பொதுவாகவே அதிக கவனம் பெறாத இந்த மலைத்தொடர், சர்வதேச அளவில் பிரபலமான இமயமலைத் தொடரையும் மேற்கு மலைத்தொடரையும்விட புவியியல் அடிப்படையில் மிகவும் பழமையானது என்பது ஆச்சரியமானதுதான். ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் ஊடே பரவிக் காணப்படும் கிழக்கு மலைத்தொடர் நீலகிரிக்கு அருகிலுள்ள மாயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கு மலைத்தொடருடன் கிட்டத்தட்ட இணைகிறது.

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி போன்ற நதிகள் பாய்வதன் காரணமாக மேற்கு மலைத்தொடரைப் போன்று தொடர்ச்சியாக இல்லாமல், இந்த மலைத்தொடர் அதிக இடைவெளிகளைக் கொண்டுள்ளது. மலைகள், பெருங்குன்றுகள், சிறுகுன்றுகள், குறுங்குன்றுகள், பாறை குவியல்கள் என ஏறத்தாழ 6,500 புவியியல் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இந்த மலைத்தொடரை உருவாக்கியுள்ளன. இந்த மலைத்தொடரில் மொத்தமுள்ள 138 பெரிய மலைகளில் 29 தமிழகத்தில் உள்ளன.

கிழக்கு மலைத்தொடரின் மொத்த நீளம் 1,750 கி.மீ., இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி ஆந்திரத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 25 சதவீதம் தமிழகத்தில் இருக்கிறது. தமிழகத்தில் அதிகம் சிதறிக் காணப்படுவதால் மொத்த நீளத்தைக் கணக்கிடுவதில் சிக்கல்கள் உள்ளன. கிழக்கு மலைத்தொடரின் வடக்கு எல்லை எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதே நேரம் பெரும்பாலானார் ஏற்றுக்கொண்டது சிமிலிபால்தான்.

இந்த மலைத்தொடரின் தென்மேற்கு எல்லையாகக் கர்நாடகத்தின் சாம்ராஜ் நகருக்கு அருகிலுள்ள பிலிகிரிரங்கன் மலையும், தெற்கு எல்லையாகத் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றங்கரையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


Next Story