மார்பு வலிக்கான அறிகுறிகள்


மார்பு வலிக்கான அறிகுறிகள்
x

பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்கும் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பின் அறிகுறிகள். இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன.

பரம்பரை காரணம், அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலை, உயரமான இடங்களுக்குச் செல்வது, அதிகமாக உணர்ச்சி வசப்படுவது போன்றவற்றை குறிப்பிடலாம். புகைப்பவர்கள், மதுகுடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.

நிமோனியா எனும் நுரையீரல் அழற்சி, நுரையீரல் உறைக்காற்று நோய், நுரையீரல் உறை அழற்சி, கடுமையான காச நோய் ஆகியவற்றாலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும்.

நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். நீண்டகாலமாக படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள் ஆகியோருக்கும் ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். குடல் புண் நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.


Next Story