நல்ல எண்ணங்களின் வலிமை வெற்றியைத் தரும்


நல்ல எண்ணங்களின் வலிமை வெற்றியைத் தரும்
x

வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கு இதுவே தருணம். வாய்ப்புகளை பயன்படுத்துவதில் இருந்தே மேன்மை மேம்படும். ஒவ்வொரு முறையும் முயன்றால் தான் முடியும் என்ற எண்ணம் மனத்தில் வெற்றி நடைபோட வைக்கும்.

அந்த காலக்கட்டத்தில் போர் புரிந்த மன்னர்களும், வீரர்களும் வாகைப்பூ சூடி வெற்றியை கொண்டாடினார்கள். வாழ்வின் வசந்தத்தை நோக்கி வளமோடு வாழும் வாழ்வை பெறுவது வாழ்க்கையின் வெற்றி. விதைக்காமல் விளைச்சல் இல்லை. உழைக்காமல் உயர்வு இல்லை. மன அமைதி எண்ணத்திற்கு ஏற்றாற் போல அமையும் என்பர். எதிர்பாராமல் ஏற்படும் ஏமாற்றத்தை நம்பிக்கையோடு தாங்கி கொள்ளத்தான் வேண்டும். நேரமே முன்னேற்றத்தின் சாவி. மற்றவர்களை குற்றம் சாட்டுவதற்கு பயன்படும் நேரத்தை வளர்ச்சிக்காக பயன்படுத்துவது தான் நேரத்திற்கு நாம் தரும் மரியாதை.

நல்ல நண்பர்களில் இருந்தே நல்ல பக்குவம் தொடங்குகிறது. நெற்றியின் வழியில் எண்ணங்கள் அனைத்தும் மனத்தின் உள்ளே செல்லும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மனதில் நல்லதையே நிரப்பி வைப்போம். நல்ல நண்பர்களை தக்க வைப்போம். மனம் எவ்வளவு புண்படுகிறதோ அவ்வளவு பண்படும். எந்த ஒரு செயலையும் என்னால் செய்ய இயலாது எனும் சாக்குப்போக்கு வேண்டாம். முடியும் எனும் மனப்பாங்கு முடியாததை செய்ய வைக்கும். காலடியில் கிடக்கின்ற புல் கூட ஒரு நாள் நீண்டு வளர்ந்து விடுகிறது. தோல்வியை கண்டு தளர்ந்து விட வேண்டாம்.

பெற்றோர்கள் கண்டிப்புடன் இருப்பது எப்படியாவது இவன் வாழ்க்கையை சீரழித்து விட வேண்டும் என்பதற்காக அல்ல. இவன் வாழ்க்கை சீரழிந்து போய்விடக்கூடாது என்பதற்காக தான். அவர்களின் இடத்தில் நின்று சிந்தித்து பார்த்தால் முள் படுக்கையின் வலியை தெரிந்து கொள்ள முடியும். கண்டிப்பு, கவனமாக இருந்தால் தான் கவலைகள் அனைத்தும் கலைந்து செல்லும். இயற்கையும் கூட ஒரு சக்திக்கு கட்டுப்பட்டு தான் இயங்குகிறது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றார் இயேசு பிரான். அன்பின் அரவணைப்பு தான் கண்டிப்பு.

சில நேரம் சில பொழுது

சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழந்து

வானில் உன் பெயர் எழுது

என்றொரு பாடல் ரசித்திருப்பீர்கள். கனவுகளுக்கு உயிர் கொடுத்தாக வேண்டும். வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கு இதுவே தருணம். வாய்ப்புகளை பயன்படுத்துவதில் இருந்தே மேன்மை மேம்படும். ஒவ்வொரு முறையும் முயன்றால் தான் முடியும் என்ற எண்ணம் மனத்தில் வெற்றி நடைபோட வைக்கும். இலக்கு களை இழந்து விடாமல் அவற்றை இலக்கணப்படுத்த கற்றுக் கொண்டால் இன்பம் இயல்பாக வரும் என்பதே நிதர்சனம். சிறுதுளி பெருவெள்ளம் என்றொரு பழமொழி உண்டு. ஆம் சிந்தித்து பார்த்தால் சிறிய சிறிய தோல்விகளை சந்திக்கும் மனிதன் தான் பின்னாளில் சாதனையாளர்கள் வரிசையில் இடம்பிடிப்பான்.

ஒரு போரில் போர் வீரன் ஒருவன் தன் ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக நின்றால் கூட தன்னுடைய இரு கைகளை போர்வாளாக கொண்டு தன் உயிர்பிரியும் கடைசிநேரம் வரை துணிவோடு போரிடுவான். எந்த தருணத்திலும் வாய்ப்புகள் கிட்டும். அதை பயன்படுத்தி வெற்றி வாகைப்பூ சூடிக்கொள்ளுங்கள்.


Next Story