சுதேசி தலைவர் வ.உ.சிதம்பரனார்


சுதேசி தலைவர் வ.உ.சிதம்பரனார்
x

உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் என்னும் ஊரில், 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி பிறந்தவர் வ.உ.சிதம்பரனார். பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, சட்டப் படிப்பை பயின்றார். 19-ம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கியமான வக்கீல்களில் ஒருவராக மாறினார். ஏழை மக்களுக்காக இலவசமாகவே வாதாடுவார். தொழிற்சங்கங்கள் இல்லாத காலத்திலேயே, தூத்துக்குடி கோரல் நூற்பாலை தொழிலாளர்களுக்காக போராடி வெற்றிக் கண்டார். பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் ஆகியோரால் தேச விடுதலை நோக்கி ஈர்க்கப்பட்டார்.

வணிகத்துக்காக இந்தியா வந்த ஆங்கிலேயனை விரட்ட, அதே வணிகத்தை நாம் கையிலெடுக்க வேண்டும் என்று நினைத்தார். ஆங்கிலேய கப்பல் போக்குவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய அவர், 1906-ம் ஆண்டு `சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். சொந்தமாக கப்பல் வாங்கும் அளவுக்கு பணம் இல்லாத காரணத்தால், ஒரு கப்பல் கம்பெனியிலிருந்து வாடகைக்கு கப்பல் எடுத்தார். தூத்துக்குடிக்கும், இலங்கைக்கும் போக்குவரத்தை தொடங்கினார். இதனால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள் வாடகைக்கு கப்பல் கொடுத்த கம்பெனியை மிரட்டினர். அச்சமுற்ற அந்த கம்பெனி வ.உ.சிக்கு கப்பல் தர மறுத்தது. எதற்கும் அஞ்சாத அவர், கொழும்பிலிருந்து ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து போக்குவரத்தை தொடங்கினார்.

ஆனாலும் சொந்தமாக ஒரு கப்பலை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வட இந்தியா சென்றார். கப்பலுடன் திரும்பினார். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும், இலங்கைக்கும் கப்பலை ஓட்டி லாபம் பார்த்து வந்தனர். வ.உ.சி கப்பலானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற காரணத்தால், ஆங்கிலேயருக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது. போட்டியை சமாளிக்க முடியாமல் பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் கட்டணத்தை குறைக்க முன்வந்தது. அப்போதும் மக்கள் சுதேசி கப்பலுக்கே தங்கள் ஆதரவை அளித்தனர். அடுத்தபடியாக பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இலவச பயணம் என்று அறிவித்தது. ஆங்கிலேயர்களின் தொடர்ச்சியான சதிவேலைகள் காரணமாக சுதேசி கப்பல் நஷ்டத்தை சந்தித்தது.

ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தியதன் காரணமாக 1908-ம் ஆண்டு வ.உ.சி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர்.1912-ம் ஆண்டு விடுதலை அடைந்து வெளியில் வந்தபோது, வழக்கின் காரணமாக இவரின் வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது. பின்பு வ.உ.சி.க்கு `ஈ.எச்.வாலஸ்' என்ற ஆங்கிலேய அதிகாரி, வழக்கறிஞர் உரிமத்தை திரும்ப பெற்று தந்தார். அதற்கு நன்றி கடனாக தனது கடைசி மகனுக்கு 'வாலேஸ்வரன்' என்று பெயர் சூட்டினார். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு உடல் நலிவு, பொருளாதார இழப்பில் சிக்கிய சிதம்பரனார், 1936-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி மரணம் அடைந்தார்.


Next Story