`புளூடூத்' பெயர் காரணமும், செயல்படும் விதமும்


`புளூடூத் பெயர் காரணமும், செயல்படும் விதமும்
x

புளூடூத் என்பது தகவல் பரிமாற்றத்திற்கான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்களுக்கிடையில் தரவை இணைக்கவும், பகிரவும் பயன்படுத்தப்படும் குறுகிய தூர தொடர்பு தொழில்நுட்பமாகும்.

நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான மின்னணு சாதனங்களிலும் `புளூடூத்' என்ற தொழில்நுட்பம் உள்ளது. கணினி, ஹெட்போன்கள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டி.வி, ஏன் இன்று நாம் பயன்படுத்தும் `ஸ்மார்ட் வாட்ச்' வரையிலும் இந்த தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இவற்றை எல்லாம் பயன்படுத்தும் நாம், புளூடூத் எவ்வாறு செயல்படுகிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா?.

புளூடூத் பெயருக்கும், 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால அரசனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஆம், 10-ம் நூற்றாண்டில் டேனிஷ் அரசரான `ஹரால்ட் புளூடூத் கோர்ம்சம்' என்ற அரசன் பல டேனிசு பழங்குடியினரை ஒரே பேரரசின் கீழ் கொண்டு வந்து இணைத்தார். இதை போலவே புளுடூத் தொழில்நுட்பம் பல நெறிமுறைகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் இந்த தொழில்நுட்பம் `புளூடூத்' என்று அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. 1994-ம் ஆண்டு எரிக்சன் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த டச்சு மின் பொறியியலாளர் `சாப் ஆர்சன்' இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். பின்னர் புளூடூத் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக 1999-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

புளூடூத் என்பது தகவல் பரிமாற்றத்திற்கான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்களுக்கிடையில் தரவை இணைக்கவும், பகிரவும் பயன்படுத்தப்படும் குறுகிய தூர தொடர்பு தொழில்நுட்பமாகும். அதிகபட்சமாக பத்து மீட்டர் வரை மட்டுமே செயல்படும். புளூடூத்தில் 3 முதல் 8 சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், ஒன்றுக்கொன்று குறுக்கீடு இல்லாமல் இருப்பதற்கு அதிர்வெண் துள்ளல் பரவல் ஸ்பெக்ட்ரம் (FHSS) எனப்படும் நுட்பம் பயன்படுகிறது. புளூடூத் அமைப்பானது 2.45GHZ-ஐ மையமாக கொண்ட அலைவரிசையில், 79 வெவ்வேறு அதிர்வெண்களைத் தோராயமாகத் தேர்ந்தெடுத்து, வினாடிக்கு 1600 முறை அதிர்வெண்ணை மாற்றுவதால் இரண்டு மின்சாதனங்கள் ஒரே புளூடூத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும் குறுக்கீடுகள் இல்லாமல் உபயோகப்படுத்த முடியும். அதனால் தான் ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், ஸ்பீக்கர் போன்ற மின் சாதனங்களை ஒரே நேரத்தில் எந்தவித குறுக்கிடும் இல்லாமல் நம்மால் இணைத்து பயன்படுத்த முடிகிறது.


Next Story