உலக தந்தையர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கள் தந்தையை உணர்ச்சி, மன ரீதியாக புரிந்து கொள்ளவும், குடும்பத்தில் தந்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும் இந்த தினம் வழிகாட்டுகிறது.
வாஷிங்டனை சேர்ந்த 'சோனோரா ஸ்மார்ட் டோட்' என்ற பெண்மணி,1909-ம் ஆண்டில் ஒருநாள் தேவாலயத்தில் அன்னையர் தின போதனையை கேட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தந்தையர் தினத்தை பற்றிய யோசனை தோன்றியது. தாய் இல்லாததால் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அன்னையர் தினத்திற்கு சமமான அதிகாரப்பூர்வ தினத்தை தந்தைக்கு நிறுவ விரும்பினார். அதன்பின் அதிகாரப்பூர்வ தந்தையர் தினத்தை கடைப்பிடித்து தந்தையர்களை கவுரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் முன்மொழிந்தார். 1910-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி, முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1913-ம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1966-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி 'லிண்டன் பி.ஜான்சன்' ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகக் கொண்டாடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தந்தையர் தினத்திற்கான நாள் ஒவ்வொரு நாடுகளுக்கும் வேறுபடுகிறது. போர்ச்சுகல், இத்தாலி, குரோஷியா போன்ற பல நாடுகள் மார்ச் 19-ந் தேதியை தந்தையர் தினமாக கொண்டாடுகின்றனர். தந்தையர் தினம் 1972-ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் தென்கொரியாவில் தந்தையர் தினத்தை பெற்றோர் தினமாக அனுசரிக்கின்றனர்.
தந்தையர்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். குழந்தைகள் தந்தையர்களை முன்மாதிரியாக கருதுகின்றனர். அவரைப் போல தாங்களும் ஆக வேண்டும் என விரும்புகிறார்கள். குடும்பத்தின் வாழ்வுக்காகவும், அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் இரவு, பகல் பாராமல் உழைக்கும் குடும்பத்தின் தூண்கள் தந்தையர்கள். எந்தவொரு குழந்தைக்கும், அவரின் தந்தை தான் முதல் ஹீரோ. ஒரு தந்தை நம் வாழ்க்கையில் செய்யும் பங்களிப்புகளுக்கும்,தியாகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பை இந்த நாள் அளிக்கிறது.