நீண்ட பாதங்கள் கொண்ட சிறுமி ரூபி லாபுஷெவ்ஸ்கி


நீண்ட பாதங்கள் கொண்ட சிறுமி ரூபி லாபுஷெவ்ஸ்கி
x

ரூபி லாபுஷெவ்ஸ்கி என்ற 10 வயது சிறுமி, சிறு வயதில் பெரிய பாதங்களை கொண்டவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.

உடல் அமைப்பை மையப்படுத்தியும் பல்வேறு உலக சாதனைகள் படைக்கப்படுகின்றன. அதில் சிறுவர்-சிறுமிகளும் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். ரூபி லாபுஷெவ்ஸ்கி என்ற 10 வயது சிறுமி, சிறு வயதில் பெரிய பாதங்களை கொண்டவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் இருக்கும் ஜோன்ஸ்வில்லே நகரத்தில் வசிக்கும் இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

4 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகளின் சாதனைகளை அங்கீகரிக்கும் 'கிட்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' என்ற அமைப்பு சிறுமி ரூபி லாபுஷெவ்ஸ்கிக்கு சான்றிதழும், விருதும் வழங்கி சாதனை பட்டியலில் இணைத்திருக்கிறது.

7 முதல் 9 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ரூபிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. சாதனைக்கு சமர்ப்பிப்பதற்காக அளவிட்டபோது ரூபியின் கால் பாதங்கள் 10.5 அங்குலம் நீளம் கொண்டிருந்தன. அதுவே இவரது வயது பிரிவில் உலகிலேயே நீண்ட பாதங்கள் கொண்டவராக திகழ வைத்துள்ளது. எனினும் சமீபத்தில் ரூபிக்கு 10 வயதாகிவிட்டது. நீண்ட பாதங்கள் கொண்ட சாதனையாளராக அங்கீகரிக்கப்பட்ட சில மாதங்களிலேயே 9 வயதுக்குட்பட்டவர்களுக்கான சாதனை பட்டியலில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

ஆனாலும் அந்த வயதுக்குள் நீண்ட பாதங்கள் கொண்ட நபர்கள் யாரும் சாதனைக்கு விண்ணப்பிக்காததால் ரூபியே சாதனையாளராக நீடிக்கிறார். தற்போது 10 வயது பிரிவில் சாதனை படைத்தவர் 10.5 அளவு கொண்ட காலணி அணிகிறார். ஆனால் ரூபியின் காலணி அளவு 11 என்ற அளவில் உள்ளன. அதனால் இந்த சாதனை பிரிவிலும் தனக்கு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.

''இதுநாள் வரை பாதங்கள் நீளமாக இருந்ததால் பலரின் கேலி-கிண்டலுக்கு ஆளானாள். இப்போது அவளது பாதங்களை பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். சாதனை படைத்த சிறுமியாக அங்கீ கரித்திருக்கிறார்கள். என் மகளை விட பெரிய பாதங்கள் கொண்ட சிறுமிகள் உலகின் ஏதாவதொரு பகுதியில் வசிக்கலாம். ஆனால் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்பதால் என் மகள் சாதனையாளராக பார்க்கப்படுகிறாள். கிட்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் படி, பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில் ரூபியின் கால்கள் உலகிலேயே மிகப்பெரியது. அவள் அதைப் பற்றி பெருமிதம் கொள்கிறாள்'' என்கிறார் ரூபியின் தாயார், ஹன்னா மாத்தேனி.

''ரூபியின் அப்பா 13 எண் கொண்ட காலணி அணிகிறார். நான் 11 அளவுள்ள காலணி அணிகிறேன். எங்கள் இருவருக்கும் போட்டியாக ரூபி காலணியை தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் அவளுக்கு பொருத்தமான காலணிகள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது'' என்றும் சொல்கிறார்.


Next Story