உலக அதிசயங்களை பார்வையிடுவதில் சாதனை


உலக அதிசயங்களை பார்வையிடுவதில் சாதனை
x

உலக சுற்றுப்பயணங்களை மேற்கொள்பவர்கள் உலக அதிசயங்களை பார்வையிடுவதற்கு தவறமாட்டார்கள். தங்கள் பயணங்களை உலக அதிசயங்கள் அமைந்திருக்கும் இடங்களை சூழ்ந்திருக்கும் நாடுகளில் திட்டமிடுவார்கள்.

ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஒன்றிரண்டு உலக அதிசயங்களை பார்வையிட்டு திரும்புவார்கள். ஒரே சமயத்தில் 7 உலக அதிசயங்களையும் பார்வையிடும் வகையில் பயணங்களை திட்டமிடுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பயணங்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தை சார்ந்ததாகவே இருக்கும்.

அட்வெஞ்சர்மேன் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜேமி மெக்டொனால்ட் என்பவர் உலக அதிசயங்களை பார்வையிடுவதில் கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார். இவர் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தி 7 நாட்களுக்குள் உலக அதிசயங்கள் அனைத்தையும் பார்வையிட்டு இருக்கிறார். ஒரு சில சமயங்களில் மட்டுமே டாக்சியை பயன்படுத்தி இருக்கிறார்.

ஜேமியின் சாகச பயணம் சீனப்பெருஞ்சுவரில் இருந்து தொடங்கி இருக்கிறது. அங்கிருந்து இந்தியாவிற்குள் நுழைந்து தாஜ்மஹாலை பார்வையிட்டிருக்கிறார். பின்பு ஜோர்டனுக்கு சென்று அங்குள்ள பழமையான நகரமான பெட்ராவை பஸ்சில் சுற்றிப்பார்த்திருக்கிறார். அங்கிருந்து ரோம் சென்றவர் கொலோசியத்தை பார்வையிட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து மற்றொரு உலக அதிசயமான கிறிஸ்ட் தி ரிடீமரின் எனும் கிறிஸ்து சிலையை காண பிரேசில் சென்றுள்ளார். அதனை பார்வையிட்டு விட்டு பெருவில் உள்ள மச்சு பிச்சு மற்றும் மெக்சிகோவில் சிச்சென் இட்சா போன்ற உலக அதிசயங்களை கண்டு களித்திருக்கிறார்.

இந்த உலக அதிசயங்கள் அமைந்திருக்கும் இடங்களுக்கான பயணத்தை 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் முடித்திருக்கிறார். பொது போக்குவரத்தை பயன்படுத்தியே குறுகிய காலத்தில் உலக அதிசயங்களை பார்வையிட்டது கின்னஸ் உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது.

ஜேமி மெக்டோனால்ட் ஏற்கனவே பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். சைக்கிள் சவாரி செய்வதில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். 13 விமானங்கள், 16 டாக்ஸி சவாரிகள், 9 பஸ் பயணங்கள், 4 ரெயில் பயணங்கள் என பல்வேறு வகையான போக்குவரத்தை பயன்படுத்தி சுமார் 22,856 மைல்கள் தூரம் சென்றதும் சாதனையாக அமைந்திருக்கிறது. இதில் 4 கண்டங்களையும், 9 நாடுகளையும் கடந்து சென்றதும் அடங்கும்.


Next Story