படிப்பதற்கு வயது தடை அல்ல; 56 வயதில் சாதித்த பெண்மணி


படிப்பதற்கு வயது தடை அல்ல; 56 வயதில் சாதித்த பெண்மணி
x

படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர்தான், தனம். 56 வயதாகும் இவர், 10-ம் வகுப்பு தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

30 வயதை கடந்தாலோ, அதுவும் திருமணம் ஆகிவிட்டது என்றாலோ இனிமேல் நம்மால் படிக்க முடியாது என்பதுதான் பல பெண்களின் எண்ண ஓட்டமாக இருக்கும். அந்த நிலையை மாற்றும் முனைப்போடு தங்களையே முன் மாதிரியாக கொண்டு களம் இறங்கி சாதிக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர்தான், தனம். 56 வயதாகும் இவர், 10-ம் வகுப்பு தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தனம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பழைய போலீஸ் நிலையம் தெருவை சேர்ந்தவர். இவர் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொண்டார். 500-க்கு 247 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று உள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-65, ஆங்கிலம்-48, கணிதம் -44, அறிவியல்-46, சமூக அறிவியல்-44.

தனம் இந்த வயதிலும் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. 10-ம் வகுப்பு தேர்வு எழுத ஆர்வம் ஏற்பட என்ன காரணம் என்ற கேள்வியோடு தனத்தை அணுகினோம்.

''நான் கடந்த 1980-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்தேன். அதற்கு பிறகு படிக்க ஆர்வம் இருந்தும், குடும்ப சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை. எப்படியாவது மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன்.

ஆனால் குடும்ப நிலைமையை புரிந்து கொண்டு ஆசையை என்னோடு புதைத்து கொண்டேன். இதற்கிடையே எனக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர். நானும் வேறு வழியின்றி குடும்ப வாழ்க்கையை ஏற்றுக்கொண்டேன்'' என்பவர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்டிருக்கிறார். அதற்கான தீர்வை தேடியபோது படிப்பு ஆர்வம் மேலோங்க தொடங்கி இருக்கிறது.

''கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திடீரென முதுகுவலி ஏற்பட்டது. நானும் பல்வேறு இடங்களில் சிகிச்சைக்கு சென்றேன். ஆனாலும் முதுகுவலி குணமாகவில்லை.

எனது உறவினர் ஒருவர் யோகா செய்தால், முதுகுவலி மறையும். உடல்நிலையும் மேம்படும் என்றார். இதையடுத்து மனவளக்கலை மன்றத்திற்கு சென்று யோகா, எளிமையான உடற்பயிற்சி, காயகல்பம், தியானம் ஆகியவற்றை கற்றுக்கொண்டேன். அதற்கு பிறகு முதுகுவலி பிரச்சினை அடியோடு மறைந்து போனது. யோகாதான் முதுகுவலியை போக்கியதோடு மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க காரணமானது'' என்பவர் யோகா சம்பந்தப்பட்ட படிப்பை படிப்பதற்கு ஆர்வம் காட்டி இருக்கிறார்.

''தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதும் என்கிற அளவில் யோகாவில் டிப்ளமோ கோர்ஸ் ஒன்றை முடித்தேன். அதைத்தொடர்ந்து யோகாவில் மேல்படிப்பு ஒன்றை படிக்க முடிவு செய்தேன். அதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம் என்றார்கள். எப்படியாவது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பள்ளி புத்தகத்தை கையில் தூக்கினேன்.

எனது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் எனக்கு ஊக்கம் அளித்தனர். எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் டியூசன் சென்டர் ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் சேர்ந்து படிக்க தொடங்கினேன்'' என்பவர் படிப்பின்போது சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார். ஆனாலும் வெற்றியை மட்டுமே இலக்காக நிர்ணயித்து படித்ததால் எதிர்கொண்ட சோதனைகள் சாதனையாக மாறி இருக்கிறது.

''பொதுவாக 40, 50 வயதை கடந்த பெண்களுக்கு குடும்ப சூழ்நிலை தடையாக இருக்கும். நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இருப்பினும் பயிற்சி, முயற்சி மற்றும் உழைப்பு இருந்தால் சாதிக்க முடியும் என பெரியவர்கள் சொல்வார்கள். அதையே தாரக மந்திரமாக கொண்டு படித்தேன். படிப்புக்கு இடையே பலருக்கும் யோகா கற்றுக்கொடுத்தும் வந்தேன். இப்போதும் தொடர்கிறேன்.

படிப்பு, யோகா பயிற்சி, குடும்ப நிர்வாகம் மூன்றையும் நிர்வகிப்பதற்கு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் அணையாமல் பிரகாசித்ததால் படிப்புக்கு எதுவும் தடையாக அமையவில்லை. ஆர்வமாக படித்தேன். தற்போது வெற்றியும் பெற்று உள்ளேன். விரைவில் நான் விரும்பிய யோகா மேல்படிப்பையும் தொடர உள்ளேன்.

பெண்கள் தன்னம்பிக்கையுடன், ஆர்வமாக செயல்பட்டால் எந்த துறையிலும் சாதிக்கலாம். என்னை பொறுத்த வரையில் கல்வி கற்க வயது தடையில்லை. கல்வியின் மீது ஆர்வத்தை வளர்த்து கொண்டால் வெற்றிபெற முடியும்'' என்கிறார்.

தனத்திற்கு தமிழ்மணி என்கிற கணவரும், பொன்குருசாமி, வெயில்ராஜ் என்கிற 2 மகன்களும், ஒரு பேரன் மற்றும் 3 பேத்திகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story