திரைத்துறையின் ஆளுமையாகத் திகழ்ந்த ஏ.எல்.சீனிவாசன்


திரைத்துறையின் ஆளுமையாகத் திகழ்ந்த ஏ.எல்.சீனிவாசன்
x

1923-ம் ஆண்டு பிறந்த ஏ.எல்.சீனிவாசனுக்கு, இது நூற்றாண்டு என்பதால், அவரை கொஞ்சம் நினைவுகூர்வோம்.

தென்மாவட்டத்தின் சிறு கிராமத்தில் இருந்து வந்து, தன்னம்பிக்கையாலும், தனித் திறமையினாலும் தனித்து நின்று, இந்திய திரையுலகின் அனைத்து துறைகளிலும் கோலோச்சியவர், ஏ.எல்.எஸ். என்னும் ஏ.எல்.சீனிவாசன். சினிமா உலகில் 60, 70-ம் ஆண்டுகளில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக பரிணமித்தவர்.

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் சாத்தப்ப செட்டியாருக்கும், விசாலாட்சிக்கும், 1923-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி பிறந்தார், ஏ.எல்.எஸ். இவருடன் பிறந்தவர்கள் 6 சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். மூத்த சகோதரர் கண்ணப்ப செட்டியார். இவர் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான பஞ்சு அருணாசலத்தின் தந்தை ஆவார். இளைய சகோதரர், காலத்தால் அழிக்க முடியாத பல பாடல் வரிகளை நம்மிடம் விதைத்துச் சென்ற கவியரசர் கண்ணதாசன்.

ஏ.எல்.சீனிவாசனின் தாத்தா வெள்ளையப்ப செட்டியார், மணியாச்சி அருகே நூற்பு ஆலை நடத்தியவர். செல்வாக்குடன் வாழ்ந்த ஜமீன்தார் அவர். தாத்தாவின் மீது கொண்ட அபிமானத்தால், தன் தந்தையின் பெயருக்குப் பதிலாக தாத்தாவின் மற்றொரு பெயரான அழகப்பன் என்பதை தனது இனிஷியலாகக் கொண்டு 'அழ.சீனிவாசன் (ஏ.எல்.சீனிவாசன்) என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

தாத்தா காலத்திற்குப்பின் செல்வம் கரைந்து, ஏ.எல்.எஸ். குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொண்டது. இதனால் பள்ளி இறுதியை முடிக்கும் முன்பே ஏ.எல்.எஸ். சென்னைக்கு பணிக்காக புறப்பட வேண்டியதாயிற்று. அவருடன் கண்ணதாசனும் சென்றார். தந்தை கொடுத்தனுப்பிய கடிதத்துடன் சென்னையில் ஏ.எம்.எம். குழுமத்தின் தலைவரை சந்தித்து வேலையில் சேர்ந்தனர். அங்கு ஏ.எல்.சீனிவாசனின் சம்பளம் மாதம் ரூ.30.

சிறுவயதில் இருந்து கலையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக அவரால், சென்னையில் நீண்டநாட்கள் பணியாற்ற முடியவில்லை. அண்ணனும், தம்பியுமாக சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். அதில் ஏ.எல்.எஸ்., சில காலத்திலேயே கலைக்கனவின் காரணமாக கோவைக்கு புறப்பட்டார். அப்போது அவருக்கு வயது 20. அங்கு சினிமா விநியோகஸ்தரின் பிரதிநிதியாக பணியாற்றினார். அதுதான் கலைத்துறையில் அவரது முதல் பயணம். அங்குதான் டி.ஆர்.மகாலிங்கம், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற நடிகர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

1942-ம் ஆண்டு சில நண்பர்களுடன் இணைந்து 'கோயம்புத்தூர் பிக்சர்ஸ்' என்ற பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம் மூலமாக முதல் படமாக ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த அறிஞர் அண்ணாவின் 'வேலைக்காரி' படத்தை வாங்கி வெளியிட்டனர். அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றதால், அவர்களுக்கு பணமும், புகழும் சேர்ந்தது. 'வேலைக்காரி' படத்தின் 100-வது நாள் விழா, கோவை உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. அந்த விழாவில் அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.





மேதைகள் பலரை மேடையில் கண்ட ஏ.எல்.எஸ்.க்கு, தானும் சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் சினிமா விநியோகம் மட்டுமின்றி, சினிமாத் துறை சார்ந்த பல தொழில் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு, 1950-ம் ஆண்டு கோவையில் இருந்து, சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

1951-ம் ஆண்டு, 'மெட்ராஸ் பிக்சர்ஸ்' என்ற பெயரில் சொந்தமாக விநியோகம் மற்றும் படங்களை தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்தப் பெயர்தான் பின்னாளில் 'ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ்' என்று மாறியது. மெட்ராஸ் பிக்சர்ஸ் தொடங்கிய நேரத்தில் டி.ஆர்.மகாலிங்கம் தயாரித்து இயக்கிய 'மோகனசுந்தரம்' படத்தின் நெகட்டிவ் உரிமைகளை, அப்படியே விலைக்கு வாங்கிக் கொண்டார். அதில் ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைத்தது.

இதையடுத்து 1952-ம் ஆண்டு ஏ.எல்.எஸ். தயாரித்த முதல் படம், 'பணம்'. பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் நடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், இந்தப் படத்திலும் நடித்தார். பராசக்திக்கு வசனம் எழுதிய கருணாநிதிதான், 'பணம்' படத்திற்கும் திரைக்கதை, வசனம் எழுதினார். இந்தப் படத்தை இயக்கியவர், என்.எஸ்.கிருஷ்ணன். 'பராசக்தி' வெளிவந்த 31-வது நாளில், 'பணம்' திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதில் தொடங்கிய சிவாஜி-பத்மினி, அதன்பிறகு சுமார் 60 படங்களில் இைணந்து நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்து வெளியான முதல் படம் என்ற பெருமையும், 'பணம்' படத்தையே சாரும்.

ஏ.எல்.சீனிவாசன் துணிச்சலாக செய்த புதுமையில் ஒன்றுதான், திரைப்படத்தின் 'நெகட்டிவ் உரிமை'யை விலைக்கு வாங்கும் வியாபார முறை. படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு விலையை தந்து விட்டு, படத்தின் முழு உரிமையைப் பெற்று, அதை வியாபாரம் செய்து லாப-நஷ்டங்களை தாங்கள் ஏற்பதே, 'நெகட்டிவ் வியாபார' முறையின் அடிப்படையாகும். இந்த முறையை தொடங்கி வைத்தவர், ஏ.எல்.எஸ். தான். அதற்கு முன்பு ஏரியாக்களை, தயாரிப்பாளர்களே நேரடியாக விற்கும் முறைதான் வழக்கத்தில் இருந்தது.

தொடக்க காலங்களில் புராண, சரித்திரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரை, 'திருடாதே' என்ற படத்தின் மூலமாக சமூகப் படங்களுக்குள் நுழைத்தவர் ஏ.எல்.எஸ். தான். நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கவிஞர்கள், நடன இயக்குனர்கள், உடை வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை, தனது சொந்த நிறுவனத்தில் தயாரித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் விநியோகஸ்தராக இருந்த ஏ.எல்.சீனிவாசன், அதன்பின் தயாரிப்பாளராக ஆனார். திரைத்துறைக்கு இவர் செய்த பணிகள் ஏராளம். இதன் பயனாக, திரைத்துறையில் மாநில அளவிலும், தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் பல முக்கிய பொறுப்புகளையும், கவுரவப் பதவிகளையும் வகித்தவர், ஏ.எல்.சீனிவாசன்.

இவற்றில் சவுத் இந்தியன் பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராக, போட்டியில்லாமல் 13 ஆண்டுகள் பதவி வகித்தார். இந்த வாய்ப்பு வேறு எந்த சினிமா பிரபலத்திற்கும் கிடைக்காத ஒன்று ஆகும். மேலும் அவா் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சம்மேளத்தின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் இருந்தவா்.

மும்பையில் உள்ள ஆல் இந்தியா பிலிம் புரொட்யூசர்ஸ் கவுன்சில் நிறுவனர் மற்றும் தலைவர், சவுத் இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் ஸ்டூடியோ அசோசியேஷன் தலைவர், மும்பையில் உள்ள இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் எக்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் இயக்குனர், இந்திய அரசால் நிர்மானிக்கப்பட்ட மும்பையில் உள்ள பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் இயக்குனர் போன்ற பதவிகளையும் வகித்திருக்கிறார்.

'தமிழ்நாடு தியேட்டர் கார்ப்பரேஷன் லிமிெடட், மெட்ராஸ்' என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் செயல்பட்டவர்.

இது தவிர பூனாவில் உள்ள தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், மத்திய திரைப்பட தணிக்கைக்குழு, திரைத்துறையின் தேசிய ராணுவ நிதிக்குழு, சர்வதேச திரைப்பட விழாக்குழு, இந்திய அரசின் திரைப்பட விருதுக்குழு போன்ற பல முக்கிய அமைப்புகளிலும் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்து தனது பங்களிப்பை வழங்கியவர்.

அன்றைய திரைப்பட விருது குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே தென்னிந்தியர் ஏ.எல்.எஸ். மட்டும்தான். இவர் காலத்தில் தான் எம்.ஜி.ஆர். நடித்த 'ரிக்ஷாக்காரன்' திரைப்படத்திற்கு விருது கிடைத்தது.

இறுதி காலங்களில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஏ.எல்.எஸ், 1977-ம் ஆண்டு ஜூலை 30-ம் நாள், தன்னுடைய 53-வது வயதில் இயற்கை எய்தினார். தொழில்திறன் மிகுந்தவர், மனிதநேயம் மிக்கவர், நிர்வாகத்தில் சிறந்தவர் என்று பன்முக திறன்களுடன் விளங்கிய ஏ.எல்.எஸ்., சினிமாத் துறையில் கால் பதித்த 27 ஆண்டுகளில், பல சாதனைகளைப் படைத்து, இந்திய திரையுலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்தார் என்பதை மறுப்பார் எவருமில்லை.

'சாரதா' தந்த வெற்றி

புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் ஏ.எல்.எஸ். முக்கியமானவர். அப்படி அவரிடம் வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை இயக்குனராக அறிமுகம் செய்து, 'சாரதா' படத்தை தயாரித்தார். அந்தப் படம் மாநில அரசின் விருதையும், ஜனாதிபதி விருதையும் பெற்றது. 'சாரதா' படத்தின் மிகப்பெரிய வெற்றியின் நினைவாக, தன் இல்லத்திற்கும், அலுவலகத்திற்கும் 'சாரதா' என்று பெயர் வைத்தார். 1964-ம் ஆண்டு ஆற்காடு சாலையில் 11 ஏக்கர் நிலம் வாங்கி, சாரதா ஸ்டூடியோவை நிர்மாணித்தார்.

நிறைவேறாத ஆசை

ஏ.எல்.சீனிவாசன், படத் தயாரிப்புடன், விநியோக உரிமையையும் பெற்று, பல படங்களை வெளியிட்டு வந்தார். அவற்றுள் ஒன்றுதான் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான 'சக்கரவர்த்தி திருமகள்'. இந்தப் படம் வெளியானபோதே, அந்தப் படத்தின் தாக்கத்தால் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதை உரிமையையும் ஏ.எல்.எஸ். வாங்கி வைத்திருந்தார். எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டு அந்தப் படத்தை எடுக்க நினைத்திருந்தார். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.

மனிதநேய செயல்

ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் பேனரில் சிவாஜி, பத்மினி நடிப்பில் 'அம்பிகாபதி' என்ற படத்தை தயாரித்தார், ஏ.எல்.சீனிவாசன். அந்தப் படத்திற்கு பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். இசைக்காகவும், பாடல்களுக்காகவும் பெயர்பெற்ற அந்தப் படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில் மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கலைவாணர், ஆகஸ்டு 30-ந் தேதி உடல்நிலை மோசமாகி மரணித்தார்.

அந்தச் செய்தி ஏ.எல்.சீனிவாசனை பேரிடியாக தாக்கியது. 'அம்பிகாபதி' படத்தில் கலைவாணர் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் மீதமிருந்தன. ஆனால் அதற்காக ஏ.எல்.எஸ். கவலைப்படவில்லை. நல்ல நண்பரை இழந்ததை எண்ணி வருந்தினார். மறைந்த கலைவாணருக்கு ஒரு சிலை அமைத்து ஊர் மக்கள் அவரை வணங்குவது போன்ற ஒரு காட்சியை 'அம்பிகாபதி' படத்திலேயே ஏ.எல்.எஸ். தந்திருப்பார்.

என்.எஸ்.கிருஷ்ணன், ஏ.எல்.சீனிவாசனுக்கு அந்த நேரத்தில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் என்ற கணக்கில் பணம் கொடுக்க வேண்டியதிருந்தது. கலைவாணர் இறந்த பிறகு, அந்தப் பணத்தை தள்ளுபடி செய்து உதவும்படி தென்னிந்திய நடிகர் சங்கம், ஏ.எல்.சீனிவாசனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்த கடிதம் கிடைத்த மறுநிமிடமே, 'காலஞ்சென்ற திரு என்.எஸ்.கிருஷ்ணனிடம் இருந்து எங்களுக்கு வரவேண்டிய தொகை முழுவதையும் தள்ளுபடி செய்து கணக்கை நேர் செய்துவிட்டோம் என்பதை இதன்மூலம் அறிவிக்கிறோம்' என்று மறுகடிதம் எழுதி அனுப்பிய மனிதநேய பண்பாளர் ஏ.எல்.சீனிவாசன்.


Next Story