பாரம்பரிய கருவிகளை காட்சிப்படுத்தி அசத்தும் விவசாயி


பாரம்பரிய கருவிகளை காட்சிப்படுத்தி அசத்தும் விவசாயி
x
தினத்தந்தி 23 July 2023 1:29 AM GMT (Updated: 23 July 2023 1:45 AM GMT)

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழமொழி. பல ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருந்தாலும் அது பசிக்கு உணவாக முடியாது.

மனிதன் உயிர்வாழ தேவையான உணவுப்பொருட்களை படைக்கும் விவசாயிதான் சமூகத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுபவராக விளங்குகிறார்.

கற்காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த விவசாயத் தொழில், தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்பவும், விஞ்ஞான வளர்ச்சிக்கு தகுந்தவாறும் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது உண்மை. முன்பு விதை விதைக்க, களை பறிக்க, நாற்று நட, கதிர் அறுக்க என அனைத்தும் மனித சக்தி மூலம்தான் நடைபெற்றது. கால்நடைகளுக்கும் இந்த தொழிலில் அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால் தற்போது வயலில் தொழி கலக்குவது முதல் கதிர் அறுப்பது வரை அனைத்துமே எந்திரமயமாகி விட்டன. அதேசமயம் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்த பழங்கால பொருட்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப மெதுவாக அழிந்து வருகிறது. ஆனால் பழங்கால விவசாயிகள் சிலர் இன்னமும் தங்களது கிராமங்களில் பழங்கால முறைப்படி விவசாய சாதனங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்களுக்குப்பிறகு இந்த வேளாண் சாதனங்கள் பயன்பாட்டில் இருக்குமா? என்பது சந்தேகமே.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் துவரங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயியான செண்பக சேகர பிள்ளை, 50 ஆண்டு களுக்கு மேலாக வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்த வேளாண்மை சார்ந்த சாதனங்களை சேகரித்தும், பாதுகாத்தும் வருவதுடன், இளைய தலைமுறையினருக்கு அந்த வேளாண் கருவிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவற்றை பார்வையிடுபவர்கள் ஆச்சரியத்தோடு பார்ப்பதோடு அதன் பயன்பாடுகளை கேட்டு அதிசயித்தும் போகிறார்கள். இதனால் செண்பகசேகர பிள்ளையின் பழங்கால வேளாண் சாதனங்கள் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் குமரி மண்ணுக்கு அவர் பெருமை சேர்த்து வருகிறார்.

''முன்னோர்களின் தொடர்ச்சியாக, நானும் விவசாயத் தொழிலை செய்து வருகிறேன். காலங்காலமாக உலகுக்கு உணவு அளிக்கக்கூடியது இந்த விவசாயத் தொழில்தான். இந்த விவசாயத் தொழிலை தொடர்ந்து செய்து வருவதில் மனதிருப்தியும், ஆத்ம திருப்தியும் ஏற்படுகிறது. காலமாற்றத்தின் காரணமாக பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து நவீன விவசாயத்துக்கு மாறிவிட்டோம். பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, உயர்விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்த பழகி விட்டோம்.

சமீப காலங்களாக விவசாயம் விஞ்ஞானப்பூர்வமாக மாறிவிட்டது. நாற்றுப்பாவுவது முதல் அறுவடை வரைக்கும் புதிய, புதிய எந்திரங்கள் வந்து விட்டது. பாரம்பரிய விவசாயம் இதனுடன் போட்டிபோட முடியாது. காலத்தின் கட்டாயமாக புதிய எந்திரங்கள், புதிய தொழில்நுட்பங்களுக்கு செல்லும்போது காலம், காலமாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த விவசாயக் கருவிகளின் பயன்பாடு குறைந்து விட்டது. பயன்பாடு குறைந்ததால் அதன் முக்கியத்துவம் குறைந்து விடவே, அவை அரங்கிலும், வீட்டிலும் பூஜைப் பொருளாக மாறிவிட்டன.

இந்நிலையில் அரசு பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்து நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தியதும், நானும் எங்கள் வீட்டிலும் இருந்த விவசாய கருவிகளை பாதுகாக்க ஆரம்பித்தேன். இது நல்ல காரியம்தான் என்று பலரும் கூறி என்னை உற்சாகப்படுத்தினர்'' என்று பாரம்பரிய கருவிகளை மீட்டெடுத்த சந்தோஷத்துடன் பேசுபவர், அதை இளையதலைமுறைக்கு காட்சிப்படுத்தி விழிப்புணர்வு உண்டாக்குவதையும் பகிர்ந்து கொண்டார்.

''இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாரம்பரிய விவசாய கருவிகள் மற்றும் பொருட்களைப் பற்றி தெரியவில்லை. நான் பாதுகாத்து வரும் விவசாய கருவிகளை, பொருட்களை எல்லாம் பார்த்துவிட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அது எனக்கு பெரிய உந்து சக்தியாக இருந்தது. எனவே நான் சேகரித்து வைத்திருந்த விவசாய பொருட்கள் மற்றும் கருவிகளை எல்லாம் காட்சிப்படுத்த தொடங்கினேன். வேளாண்மைத்துறை உதவியோடு விவசாயிகள் கூடும் இடங்கள், வேளாண்மை கண்காட்சி போன்றவற்றில் காட்சிக்கு வைக்கும்போது அதற்கு பெருத்த ஆதரவும், அமோக வரவேற்பும் இருந்தது.

சிலர் அவர்களிடம் உள்ள பழங்கால விவசாயக் கருவிகள், விவசாய பொருட்களை என்னிடம் தர ஆரம்பித்தார்கள். அதையும் வாங்கி பத்திரப்படுத்தினேன். விவசாய கல்லூரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தில் குமரி மாவட்டத்துக்கு வரும்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வரும் மாணவ-மாணவிகள் நான் வைத்திருக்கும் பழங்கால கருவிகளை பார்த்து அதிசயிப்பார்கள்'' என்று கூறி நம்மை ஆச்சரியப்படுத்தினார்.

''முன்னோர்கள் உருவாக்கிய ஒவ்வொரு விவசாய கருவிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. உழவுத்தொழிலுக்கான தேவையை நன்கு உணர்ந்துதான், விவசாய கருவிகளை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே இந்த கருவிகள் காலம், காலமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை. இதில் இருந்துதான் பல நவீன கருவிகள் உருவாகியிருக்கிறது. அதனால் நான் பாதுகாத்து வருகிறேன்.

மேலும் நகர்ப்புறங்களில் இதைப்பற்றி தெரியாத விவசாய நண்பர்களுக்காக, உலக காந்தி பவுண்டேசன் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், பெரம்பலூர், கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளிலும் காட்சிப்படுத்தி வருகிறேன்.

முன்பெல்லாம், மாடுகள் தண்ணீர் குடிக்க பயன்படும் கல்தொட்டிகள் நிறைய இருந்தது. அந்த கல்தொட்டிகளை ஒட்டகங்களுக்கு தண்ணீர் வைக்க உபயோகப்படுத்தும் வகையில் அரபு நாட்டிற்கு வாங்கி சென்றுவிட்டார்கள். இருந்தபோதிலும் என்னிடம் 5 கல் தொட்டிகள் உள்ளன'' என்பவர், தான் வைத்திருக்கும் பழங்கால பொருட்களை அரசு எடுத்துக்கொள்ள முன்வந்தால் அதை மகிழ்ச்சியாக ஒப்படைக்க தயாராக இருப்பதாக கூறினார்.

''நான் பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களை எனது பிள்ளைகள் பாதுகாப்பார்களா..? என்பது கேள்விகுறியாகவே இருக்கிறது. அவர்களுக்கு இந்த பொருட்கள் குப்பைகளாக தோன்றலாம். ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகை அன்று நான் வைத்திருக்கும் பழங்கால வேளாண் பொருட்களை எல்லாம் சுத்தப்படுத்தி, பூஜை வைத்து பொங்கலிடுவேன். காட்சிக்கு வைத்த இந்த பழங்கால வேளாண் பொருட்களை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, குமரி மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் பார்வையிட்டு வியந்தனர். அவற்றை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்கள். நானும் நிச்சயம் பாதுகாப்பேன்'' என்ற கருத்துடன் விடைபெற்றார்.

''இன்றைய இளைய தலைமுறையினருக்கு இந்த கருவிகளின் பயன்பாடே தெரியவில்லை. காட்சிப்படுத்தி விளக்கி சொல்லும்போது ஆர்வமாக கேட்கிறார்கள்'' என்பவர், நமக்கு விளக்கினார்.

* மரக்கால்கள்

பொலி அளவு மரக்கால்: இது நாஞ்சில் நாட்டில் தானியம் (நெல்) அளவீடு செய்ய பயன்படுத்தும் உபகரணமாகும். இது 7 படி கொள்ளளவு கொண்டது.

பாட்ட மரக்கால்: இது குத்தகைதாரர்களிடம் இருந்து பாட்டம் நெல்லை வாங்கும்போது அளவீடு செய்ய பயன்படுத்தும் உபகரணம். இது 8 படி கொள்ளளவு கொண்டது.

சீட்டு மரக்கால்: பண்டமாற்று முறை வழக்கம் இருந்த காலத்தில் கிராமங்களில் சீட்டு போடும்போது பணத்துக்கு பதிலாக தானியங்களை கொடுப்பார்கள். இந்த சீட்டுக்கு வழங்கப்படும் தானியங்களை அளவீடு செய்வதற்கு பயன்படுத்தும் உபரகணம்தான் சீட்டு மரக்கால்.

கொத்து மரக்கால்: பண்டைய காலங்களில் வயல்வேலைக்கு வரும் கூலியாட்களுக்கு தானியங்களைத் தான் கூலியாக கொடுப்பார்கள். கூலிக்காக தானியங்களை அளக்க பயன்படுத்தும் உபகரணம்தான் கொத்து மரக்கால். இது 5½ படி கொள்ளளவு கொண்டது.

பகிர்வு மரக்கால்: விவசாயிகள் தானியங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள பயன்படுத்திய உபகரணம்தான் பகிர்வு மரக்கால்.

* கதிர் அரிவாள்

பறை: பெருவாரியான நெல்லை அளக்கப் பயன்படும் உபகரணம். இது இரும்பு உபகரணம். இதிலேயே மரத்தால் செய்யப்பட்ட பறை என்ற உபகரணமும் உள்ளது. பக்கா, நாழி (படி), கால் பக்கா, உழக்கு, ஆளாக்கு போன்றவையும் தானிய அளவீடு செய்யும் உபகரணங்களாகும்.

கொம்பு குப்பி: பந்தய காளை மாடுகளின் கொம்பில் அழகுக்காக அணிவிக்கப்படும் உலோக சாதனம்.

பாதாள கரண்டி: தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் அறுந்து விழும் வாளிகளை தேடி எடுக்க பயன்படும் சாதனம்.

புல் அரிவாள்: கால்நடைகளுக்கு தேவையான பசும்புல் தீவனங்களை அறுக்க பயன்படும் அரிவாள்.

கதிர் அரிவாள்: விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய பயன்படுத்தும் உபகரணம்.

* கொட்டம்

கத்தி: பயிர்களுக்கு தேவையான பசுந்தாள், இலை தழை களை வெட்ட பயன்படும் உபகரணம்.

காளை மணி: காளை மாடுகளின் கழுத்தில் அணியக்கூடியது. அதன் வருகையையும், அது நிற்கும் இடத்தையும் மணியோசை மூலம் அறிந்து கொள்ள இந்த மணிகள் காளைகளுக்கு அணிவிக்கப்படுகிறது.

பாக்கு வெட்டி: வெற்றிலை போடுவதற்கு பயன்படும் பாக்குகளை வெட்ட பயன்படும் கருவி.

கொட்டம்: காளை, எருமை, பசு, கன்றுகளுக்கு மருந்து கொடுக்க பயன்படுத்தும் சாதனம், மூங்கில்களால் ஆனது.

பாக்கு நசுக்கி: பல் இல்லாதவர்கள் தாம்பூலம் (வெற்றிலை) போடும்போது பாக்கு, வெற்றிலையை நசுக்கி சாப்பிட பயன்படக்கூடியது.

* கால்நடை ஆபரணம்

சுண்ணாம்பு கரண்டம்: வெற்றிலை போடுவதற்கு தேவையான சுண்ணாம்பை சேமித்து வைக்க பயன்படுத்தியது.

குறுங்கா வளையம்: நிலத்தை சமன்படுத்தும்போது மரத்தையும், வள்ள கையையும் இணைக்க உதவும் உபகரணம்.

கவுண்: சோளக்காட்டில் தானியங்களை திண்ணவரும் பறவைகளை விரட்ட பயன்படும் சாதனம்.

தாளை வெட்டி: பாசன கால்வாய்களில் உள்ள தாளடிகளை வெட்ட பயன்படும் உபகரணம்.

கழியல்: இளம் காளைகளை உழவுக்கு பழக்க பயன்படும் உபகரணம்.

சங்கு கட்டி: கால்நடைகளுக்கு நோய் வராமல் இருக்க கழுத்தில் கட்டும் ஆபரணம்.

* பிள்ளைக்கம்பு

ஓலை எறவட்டி: குளங்களில் இருந்து பயிருக்கு தண்ணீர் இறைக்க பயன்படுத்தும் பனை ஓலையால் ஆனது.

இரும்பு எறவட்டி: தண்ணீர் இறைக்க பயன்படும் உபகரணம்.

காக்கட்டை: காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் எடுக்க பயன்படுத்தியது.

கவை: காட்டில் தனி ஆளாய் முள்வெட்டி ஊருக்கு எடுத்துவர பயன்பட்ட உபகரணம்.

பிள்ளைக்கம்பு: வயல்களில் வேலைசெய்யும் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளை தூங்க வைக்க தொட்டில் கட்ட பயன்படுத்தும் உபகரணம்.

* மண் குலுக்கை

வட்டம் சுற்று வெட்டி: தானியங்களை பிரித்தெடுக்க சூடு அடிக்கும்போது வைக்கோலை வெட்டி எடுக்க பயன்படும் உபகரணம்.

துறண்டி: கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை கிண்டி காய வைக்க பயன்படும் கருவி.

ஊடுமண்வெட்டி: விதைத்த வயல்களில் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க அடர்ந்த பகுதியில் இருந்து பயிர் இல்லாத பகுதியில் இட்டு நிரப்ப பயன்படக்கூடியது.

மண் குலுக்கை: தானியங்களை சேமிக்க உதவும் சாதனம்.

ராந்தல் (அரிக்கேன்) விளக்கு, சிம்னி விளக்கு, பனைத் தொழிலாளர்கள் மரம் ஏற பயன்படுத்தும் சாதனங்கள் போன்ற 60 வகையான வேளாண் சாதனங்களை காட்சிப்படுத்தி அசத்தி வருகிறார்... விவசாயி செண்பகசேகர பிள்ளை.


Next Story