அழியும் உயிரினங்களுக்கு ஓவியத்தால் உயிரூட்டும் ஓவியர்


அழியும் உயிரினங்களுக்கு ஓவியத்தால் உயிரூட்டும் ஓவியர்
x

இயற்கை அன்னை நமக்கு அளித்தகொடையில் மிக முக்கியமானது மேற்கு தொடர்ச்சி மலை.

மேற்கு தொடர்ச்சி மலை ஏராளமான விலங்குகள், பறவைகள், தாவரங்கள் உள்ளன. அரிய வகை உயிரினங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை பலர் வெளியே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாம் பார்த்திராத உயிரினங்களும் இங்கு உண்டு. அதில் சில வகை வன விலங்குகள், தாவரங்கள், பறவைகள் அழிந்து வருகின்றன. அவற்றை வெளி உலகத்துக்கு கொண்டு வந்து அழிந்து போவதை தடுக்கும் நோக்கத்திலும், அந்த உயிரினங்கள் குறித்து இன்றைய சமுதாயத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கோவையை சேர்ந்த ஓவியர் ஒருவர் முயற்சி எடுத்து வருகிறார்.

அங்குள்ள பி.என்.புதூரை சேர்ந்த அவரது பெயர் சுரேஷ் ராகவன். 59 வயதாகும் இவர் கோவையில் உள்ள இந்திய தாவரவியல் ஆய்வு மையத்தில் ஓவியராக பணியாற்றி வருகிறார். அத்துடன் அரிய வகையை சேர்ந்த உயிரினங்கள், அழிந்து வரும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் ஆகியவற்றுக்கு தனது ஓவியம் மூலம் உயிர் கொடுத்து வருகிறார்.

அதாவது அழியும் நிலையில் இருக்கும் வனவிலங்குகள், பறவைகள், தாவரங்களை தேர்வு செய்து, அவற்றை ஓவியமாக வரைந்து உள்ளார். அவருடைய முயற்சிக்கு பெரும் பலன் கிடைத்து உள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஓவியர் சுரேஷ் ராகவனை பாராட்டி இருக்கிறார். அந்த பாராட்டு சுரேஷ் ராகவனுக்கு இன்னும் அதிகமாக ஓவியம் வரைய தூண்டும் புத்துணர்வை கொடுத்துள்ளது.

இதுபோன்ற ஓவியத்தை தேர்வு செய்தது ஏன்? இந்த ஓவியத்தை வரைந்தது எப்படி? என்பது குறித்து ஓவியர் சுரேஷ் ராகவன் விவரிக்கிறார்.

அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்கள்

''மேற்கு தொடர்ச்சி மலையில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் அதிகம். இது நமது நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. இந்த மலையில்தான் உலகத்தில் இல்லாத உயிரினங்கள் கூட அதிகம் உள்ளன. ஆனால் வன விலங்குகள், பறவைகள், தாவரங்கள், செடிகள், கொடிகள் என்று பல உயிரினங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன. அதில் அழியும் நிலையில் இருக்கும் 30 அரியவகை பறவைகள், 18 வனவிலங்குகள், 128 தாவரங்களை நான் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அதை புகைப்படம் எடுத்து, அதன் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து உள்ளேன்.

அழிந்து வரும் பறவைகள்

ஒரு பறவையோ, விலங்கோ அல்லது தாவரமோ வரைய வேண்டும் என்றால் முதலில் ஓவியம் வரைவதற்கு முன்பு பென்சிலால் அந்த உயிரினத்தை வரைந்து, அதன் உருவம் சரியாக இருக்கிறதா என்பதை வனத்துறையிடம் காண்பித்து சரிபார்த்த பின்னர்தான் நீர் ஓவியம் (வாட்டர் கலர்) மூலம் ஓவியத்தை வரைந்து இருக்கிறேன்.

நமது நாட்டில் அரிய வகையை சேர்ந்த 50 வகையான பறவைகள், 46 வகையான வனவிலங்குகள், அந்தமான் நிகோபார் தீவில் உள்ள 28 அரியவகையான தாவரங்கள் ஆகியவற்றை ஓவியமாக வரைந்து இருக்கிறேன். அத்துடன் அழிந்து வரும் 12 வகையான பறவை களையும் வரைந்து உள்ளேன்.

கானமயில் பறவை

குறிப்பாக சங்க இலக்கியத்தில் கானமயில் என்ற பறவை பல இடங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த பறவை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த பறவை அந்தப்பகுதியில் இல்லை. இந்த கான மயில் பார்ப்பதற்கு பெண் மயில் போன்ற தோற்றம் கொண்டிருக்கும். பறவையிலேயே அதிக எடை கொண்டது இதுதான். அதிகபட்சமாக 15 கிலோ வரை எடை இருக்கும்.

வனத்துறையிடம் அனுமதி

தற்போது இந்த கானமயில் பறவை ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும்தான் உள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேல் அதன் எண்ணிக்கை இருந்த காலம் மாறி தற்போது விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மிகக்குறைவான எண்ணிக்கையில் இருப்பது வேதனைக்குரியது. எனவே இதுபோன்ற பறவையை இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டு அவற்றை ஓவியமாக வரைந்து இருக்கிறேன்'' என்பவர் ஓவியம் வரைவதற்கான முயற்சியை 2016-ம் ஆண்டே தொடங்கி இருக்கிறார்.

ஆனால் உயிரினங்களை வகைப்படுத்தி, அவற்றை அடையாளம் கண்டுபிடிக்கவே ஒரு வருடம் ஆகி இருக்கிறது. பின்னர் அவற்றை ஓவியமாக வரைய வனத்துறையிடம் அனுமதி பெற்று வரைய தொடங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு இறுதியில்தான் வரைந்து முடித்திருக்கிறார்.

3 வகை தாவரங்கள்

''ஒவ்வொரு ஓவியத்தையும் 11-க்கு 16 என்ற அளவில் வரைந்து உள்ளேன். அந்த ஓவியத்தில் என்ன உயிரினம் என்று குறிப்பிட்டு உள்ளதுடன், அதன் தமிழ் பெயர், அறிவியல் பெயர், எந்த பகுதியில் இருக்கும், அது குறித்த முழு விவரமும் தெரிவித்து உள்ளேன்.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் தரையில் வளர்வது, மரத்தில் வளர்வது, பாறையில் வளர்வது என்று 3 வகையான தாவரங்கள் உள்ளன. அந்த தாவரங்கள் எந்த நேரத்தில் பூக்கும்? என்பது குறித்த முழு தகவலும் எனது ஓவியத்தில் இடம் பெற்று உள்ளது.

3 நாட்கள்

நமது மாநிலத்தில் பழனி மலைப்பகுதியில் கருப்பு ஆரஞ்சு ஈ பிடிப்பான் என்ற வகை பறவை இருக்கிறது. அந்த பறவை தற்போது மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறது. அந்த பறவையை வரைந்ததுடன், அதன் இயல்புகள், அந்த பறவையின் செயல்பாடுகள் குறித்தும் தெரிவித்து இருக்கிறேன்.

அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கவும், அவை குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவும்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டேன். ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க குறைந்தது 3 நாள் ஆனது. மொத்தம் 380 ஓவியங்கள் வரைந்து உள்ளேன்.

ஓவிய காட்சி

சில தாவரங்கள் 5 செ.மீட்டர் உயரம்தான் இருக்கும். அதன் விதை ஒரு மி.மீட்டர் அளவுதான் இருக்கும். அதையும் கண்டுபிடித்து அந்த தாவரத்தின் விதை குறித்தும் குறிப்பிட்டு இருக்கிறேன்'' என்பவர் கடந்த ஆண்டு கோவை கொடிசியாவில் நடந்த புத்தக கண்காட்சியில் தான் வரைந்த ஓவியத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார்.

அவற்றுள் பல இதுவரை பார்த்திராத அபூர்வ இனங்களாக இருந்ததால் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டிருக்கிறார்கள். 'நமது நாட்டில் இப்படி எல்லாம் உயிரினங்கள் இருக்கிறதா?' என்று சுரேஷ் ராகவனிடம் ஆச்சரியத்துடன் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

விழிப்புணர்வு

''இந்த ஓவியங்களை நான் விற்பனை செய்ய வரையவில்லை. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் வரைந்து உள்ளேன். எனது ஓவியத்தை பிரதமர் மோடி பாராட்டி பேசி இருப்பது எனக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. நான் வரைந்த ஓவியங்களை குறிப்பாக மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக காட்சிப்படுத்த உள்ளேன்'' என்கிறார்.


Next Story