புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்த இளம் விஞ்ஞானி


புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்த இளம் விஞ்ஞானி
x

கீமோதெரபி போன்ற பல தற்போதைய புற்றுநோய் சிகிச்சை முறைகளை விட ஏஞ்சலா ஜாங்கின் மருந்து விநியோக முறை மிகப் பெரிய நன்மை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தவொரு பக்கவிளைவுகளும் இன்றி புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் சிகிச்சை முறையை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ உலகம் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. உலகளவில் பல்வேறு விஞ்ஞானிகளும், மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் இந்த பணியில் முழுமூச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களுள் தனி கவனம் பெறுகிறார், ஏஞ்சலா ஜாங். 29 வயதாகும் இவர் அமெரிக்காவை சேர்ந்த இளம் விஞ்ஞானியாக அறியப்படுகிறார். தனது 17-ம் வயதிலேயே புற்றுநோய்க்கு சாத்தியமான சிகிச்சை முறையை கண்டறிந்தார்.

இவருடைய கண்டுபிடிப்பானது நானோ துகளுடன் இணைந்துள்ள பாலிமரில் (குமிழி) புற்றுநோய் மருந்தை வைத்து, புற்றுநோய் கட்டிகள் இருக்கும் இடத்தில் ஒரு அகச்சிகப்பு ஒளியை செலுத்துவதாகும். இது பாலிமரை உருக்கி மருந்தை கட்டிகள் மீது சரியாக படும்படி செய்யும். இதனால் ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்படாமல் புற்றுநோய் செல்கள் மட்டுமே அழிக்கப்படும்.

கீமோதெரபி போன்ற பல தற்போதைய புற்றுநோய் சிகிச்சை முறைகளை விட ஏஞ்சலா ஜாங்கின் மருந்து விநியோக முறை மிகப் பெரிய நன்மை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையை எலிகள் மீது சோதித்தபோது சரியான முடிவுகள் கிடைத்துள்ளன. மனிதர்கள் மீது சோதனை செய்வதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றாலும் முடிவுகள் நம்பிக்கைக்குரியதாக இருக்கும் என்கிறார், ஏஞ்சலா ஜாங்.

இவரது உறவினர் ஒருவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகி இறந்தார். அவரது எதிர்பாராத மரணம் ஏஞ்சலா ஜாங்கை உலுக்கிவிட்டது. புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வளிக்கும் மருந்து கண்டுபிடிக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்தது. தனது பதினான்காம் வயதில் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி பணியை தொடங்கினார். 16-ம் வயதில் ஜாங்கின் ஆராய்ச்சியானது பல்வேறு போட்டிகளில் இடம்பெற்று பரிசை வென்றது.

தனது பதினான்காம் வயதில் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். இவருடைய முக்கியமான கண்டுபிடிப்புகளில் முதன்மையானது இரும்பு ஆக்சைடு, தங்க நானோ துகள்கள் மூலம் புற்றுநோய் சிகிச்சை பற்றிய ஆராய்ச்சியாகும். இது அனைவரது கவனத்தையும் பெற்றது.

2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நானோ துகள்கள் பற்றிய தனது ஆராய்ச்சியை அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் விளக்கினார்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் தனது உயர் நிலைப்பள்ளி படிப்பின்போதே இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தனது ஆராய்ச்சி இன்னும் 25 ஆண்டுகளில் நோயாளிகளுக்கு உதவக்கூடும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். அதற்கு முன்னரே பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் முழுமூச்சாக செயல்பட்டு வருகிறார்.


Next Story