மாம்பழம் தரும் அழகு


மாம்பழம் தரும் அழகு
x

மாம்பழங்களை கொண்டு ஏராளமான ரெசிபிகள் தயாரித்து சாப்பிடலாம். சரும அழகை பிரகாசிக்க செய்வதற்கும் பயன்படுத்தலாம்

மாம்பழ சீசனில் மாம்பழங்களை வெறுமனே ருசித்து சாப்பிட்டால் மட்டும் போதாது. அதனை பல்வேறு வகைகளில் உபயோகப்படுத்தலாம். மாங்காய்கள், மாம்பழங்களை கொண்டு ஏராளமான ரெசிபிகள் தயாரித்து சாப்பிடலாம். சரும அழகை பிரகாசிக்க செய்வதற்கும் பயன்படுத்தலாம். சருமத்தின் நிறத்தை சீராக பராமரிப்பதற்கு மாம்பழக் கூழ் உதவும்.

* மாம்பழத்தின் தோல், கொட்டை பகுதிகளை நீக்கிவிட்டு மிக்சியில் போட்டு கூழாக அரைத்து சருமத்தில் பூசினால் போதுமானது. 5 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். இந்த பழக்கத்தை சீரான இடைவெளியில் பின்பற்றி வந்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.

* மாம்பழக்கூழுடன் கடலை மாவு, தேன், பாதாம் கலந்தும் சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம். அகன்ற கிண்ணத்தில் மாம்பழக்கூழை கொட்டி, அதனுடன் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் தேன் கலந்து நன்றாக குழைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் பாதாமை பொடித்து சேர்த்து, முகத்தில் பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சரும நிறத்தில் நல்ல மாற்றம் தென்படும். எண்ணெய் பசைத்தன்மை சருமம் கொண்டவர்கள் மாம்பழக்கூழுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் பூசி வரலாம்.

* முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம். மாம்பழத்தின் தோலை உலரவைத்து பொடித்து, அதனுடன் முட்டை வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

* கூந்தல் வலுவாக இருப்பதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம். மாம்பழக்கூழுடன் தயிர், முட்டை வெள்ளைக்கருவை சேர்த்து குழைத்து தலையில் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு ஷாம்பு போட்டு குளிக்கலாம். கூந்தல் வலுவடைவதுடன் பளபளப்பாகவும் காட்சி அளிக்கும்.


Next Story