டாக்டர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் தொழில்முனைவோராகி சாதனை


டாக்டர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் தொழில்முனைவோராகி சாதனை
x

டாக்டர் ஆக வேண்டும் அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பதுதான் பலருடைய பெருங்கனவாக இருக்கும். அந்த கனவை நிஜமாக்குவதற்கு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு இரவு-பகல் பாராமல் விடாமுயற்சியுடன் படிப்பை தொடர்வார்கள்.

இந்த இரு தேர்வுகளுமே கடினமான போட்டித்தேர்வுகளாக அமைந்திருக்கின்றன. இவற்றில் ஒன்றில் சாதிப்பதே சவாலான விஷயமாக இருக்கையில், இரண்டிலும் தேர்ச்சி பெற்று டாக்டராகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் மாறிவிட்டார், ரோமன் சைனி.

ரோமன் சைனி

ஆனாலும் அவரது மனம் திருப்தி அடையவில்லை. அடுத்தக்கட்டத்தை பற்றி சிந்தித்தவர், இன்று பிரபல தொழில் முனைவோராக தன்னை செதுக்கிக்கொண்டுவிட்டார். போட்டித்தேர்வின்போது, தான் எதிர்கொண்ட சவாலான விஷயங்களை இன்றைய தலைமுறையினர் எளிமையாக புரிந்து கொண்டு வெற்றிவாகை சூடி, விரும்பிய துறைக்குள் நுழைவதற்கு வழிகாட்டுகிறார்.

இதற்காக தனது நண்பர் கவுரவ் முஞ்ஜாலுடன் கைகோர்த்து ஆன்லைன் பயிற்சி தளத்தை உருவாக்கினார். இன்று அது ஜே.இ.இ., நீட், யு.பி.எஸ்.சி, கேட், இயூட் உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகளை எழுதும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் இந்தியாவின் சிறந்த கல்வி - தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக செயல்படுகிறது.

ரோமன் சைனியின் பூர்வீகம் ராஜஸ்தான். சிறு வயது முதலே படிப்பில் படுசுட்டியாக விளங்கியவர், 16 வயதிலேயே கடினமான எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். 21 வயதில் பட்டம் பெற்று மருத்துவராகிவிட்டார்.

எய்ம்சில் உள்ள மருந்து சார்ந்த சிகிச்சை மையத்தில் 6 மாதங்கள் பணிபுரியவும் செய்தார். ஆனால் அதற்குள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடவே, யு.பி.எஸ்.சி தேர்வு எழுதினார். அதிலும் தேர்ச்சி பெற்று 22 வயதிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் ஆகிவிட்டார்.

நாட்டின் இளம் வயது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுள் ஒருவராகவும் அறியப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கலெக்டராகவும் நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில் யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்கு பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க இளைஞர்கள் பலரும் பெருந்தொகை செலவிடுவதை அறிந்தவர் என்ஜினீயரிங் படித்த தனது நண்பர் கவுரவ் முஞ்ஜாலுடன் ஆலோசித்தார். கவுரவ் யூடியூப் தளங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்ததால், அதையே முதலீடாக வைத்து ஆன்லைன் வழியாக, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டத் தொடங்கினார்.

கவுரவ் முஞ்ஜாலுடன்..

அதற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவே ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து விலகி, நண்பருடன் சேர்ந்து அகாடமி ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதன் இணை நிறுவனராக மாறியவர் இன்று 30 வயதில் பிரபல தொழில்முனைவோராக மாறிவிட்டார்.

2022-ம் ஆண்டில் தனது நிறுவனம் மூலம் ரோமன் சைனி ரூ. 88 லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறார். இளம் வயதில் சுயதொழில் தொடங்க ஆர்வம் காட்டுபவர்களுக்கு முன்னோடியாகவும் விளங்குகிறார்.


Next Story