எந்த வயதுக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?


எந்த வயதுக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
x

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை நெருங்கவிடாமல் தற்காத்துக்கொள்ளலாம். சில நாள்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனால் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? வயதுக்கு ஏற்ப நடக்கும் தூரம் மாறுபடுமா? வயதானவர்கள் குறைந்த தூரம் நடந்தால் போதுமா? என்ற கேள்வி நிறைய பேரிடம் எழுகிறது. டெல்லியை சேர்ந்த மருத்துவ நிபுணர் சஞ்சஜ் கல்ராவின் கருத்துப்படி, ஒவ்வொருவரும் தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலடிகளாவது எடுத்து வைத்து நடக்க வேண்டும். 10 ஆயிரம் காலடிகள் என்பது சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடப்பதற்கு சமமானது. அப்படி நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், உடல் பருமன், மனச்சோர்வு, மார்பக புற்றுநோய் தொடர்பான நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும். தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்து வைத்து நடக்க முடியாவிட்டாலும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் காலடிகளாவது நடப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும். இருப்பினும் வயதுக்கு ஏற்ப நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளை பொறுத்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்வது சாத்தியமில்லாதது. அவர்களை நடக்க சொல்லி கட்டாயப்படுத்துவதை விட ஓடியாடி விளையாட அனுமதித்தாலே போதுமானது. வழக்கமான விளையாட்டுகளுடன் குதித்தல், மெதுவாக ஓடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வைக்க வேண்டும். பெரியவர்களை பொறுத்தவரை தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்துவைத்து நடப்பது சிரமமானது. அவர்களால் 8 கிலோ மீட்டர் தூரம் நடக்க முடியாது. அதற்கு உடலும் ஒத்துழைக்காது.

வயது அடிப்படையில் எந்தெந்த வயதினர் எவ்வளவு தூரம் நடக்கலாம் என்பது பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன் முடிவு உங்கள் பார்வைக்கு...

1. 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லது.

2. 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகள் நடப்பதை இலக்காக கொள்ளலாம்.

3. 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 10 ஆயிரம் காலடிகள் நடக்கலாம்.

4. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 8 ஆயிரம் காலடிகள் வரை நடக்கலாம்.

5. 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பதற்கு முயற்சி செய்யலாம்.

6. 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகள் வரை நடக்கலாம்.

7. உடல் எடையை குறைக்கும் நோக்கில் நடைப்பயிற்சி செய்பவர்கள் நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

8. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 12 ஆயிரம் அடிக்கு மேலும் நடப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.


Next Story