மரபணு மாற்றம் அவசியமா? அத்துமீறலா?


மரபணு மாற்றம் அவசியமா? அத்துமீறலா?
x
தினத்தந்தி 21 April 2023 1:15 PM GMT (Updated: 21 April 2023 1:16 PM GMT)

பாரம்பரிய சாகுபடி முறையை விட மரபணு மாற்றம் செய்யும் தொழில்நுட்பம் மூலம் சாகுபடியை பல மடங்கு அதிகரிக்க முடியும்.

இந்த பூமி மனிதனுக்கானது மட்டுமல்ல, மனிதனால் படைக்கப்பட்டதும் அல்ல. இன்னும் சொல்லப் போனால் இந்த பூமியில் பல்வேறு உயிரினங்கள் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகே மனித இனம் தோன்றியது. ஆனால் தனது ஆறாவது அறிவால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றலையும், சக்தியையும் மனிதன் பெற்றுள்ளான். இயற்கையாக நிகழும் பல்வேறு நிகழ்வுகளைக் கூட கட்டுப்படுத்தவோ, தள்ளிப்போடவோ, தடுக்கவோ முடியும் என்ற அளவிற்கு நவீன கால மனிதனின் அறிவியல் அறிவும் ஆற்றலும் வளர்ந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

இத்தனை ஆற்றலை மனிதன் பெற்றாலும், இயற்கை நியதியை அவன் மீற எத்தனிக்கும் போது அதனால் வரும் நிகழ்வுகளால் இந்த புவியில் வாழ்வியல் அமைப்பும், இயற்கை சமநிலையும் தவறுகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இதில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சி. ஒவ்வொரு உயிரினத்தின் தோற்றத்திலும் மிக முக்கியப் பங்கு வகிப்பது அதன் மரபணுக்கள்தான். விலங்கோ, தாவரமோ அல்லது மனித இனமோ எதுவாக இருந்தாலும் சரி, அதன் குணநலன்கள், பண்புகள், பரம்பரை பழக்க வழக்கங்கள், நோய்கள் உள்பட அனைத்தும் இந்த மரபணுக்கள் மூலமே தீர்மானிக்கப்படுகிறது.

மரபணு ஆராய்ச்சி

இதனால் மரபணு ஆராய்ச்சி குறித்த பார்வை அனைத்து உலக நாடுகளிலும் தீவிரமாக நடைபெறத் தொடங்கியது. முதலில் தாவரங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது ஒரு விதையின் அடிப்படை பண்புகளை மாற்றாமல் மூலக்கூறுகளில் சில மாற்றங்களைச் செய்து அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதே மரபணு மாற்ற தொழில்நுட்பம். பாரம்பரிய சாகுபடி முறையை விட மரபணு மாற்றம் செய்யும் தொழில்நுட்பம் மூலம் சாகுபடியை பல மடங்கு அதிகரிக்க முடியும்.

குறிப்பாக, இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கத்தரிக்காய் செடிகள் பூச்சியின் தாக்குதலுக்கு உள்ளாகாத வண்ணம் மரபணு மாற்றம் செய்யப்பட்டது. மராட்டியத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டு ஏராளமான விவசாயிகள் சாகுபடியும் செய்தனர்.

ஆனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் மற்றும் பருத்தி செடிகளால் மனிதர்களுக்கும், இயற்கை சூழலை பாதுகாக்கும் பல்லுயிர்களுக்கும் நோய்கள் உருவாகுவதாகவும், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இதேபோல் வரிசையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளி, கடுகு போன்றவை அறிமுகம் செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் சூழலியலாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. தக்காளி எளிதில் அழுகும் தன்மை உடையது. இதனால் ஆர்டிக் குளிரைத் தாங்கும் ஒரு மீனின் மரபணுவை எடுத்து அதில் வைத்தால், தக்காளி பல நாட்கள் அழுகாமல் அப்படியே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த தக்காளி, கடுகு போன்றவற்றால் தயாரிக்கும் உணவுகளை உண்ணும் போது நமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் காலப்போக்கில் இவற்றின் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

அடுத்த கட்டம்

ஆனால் இப்போது மரபணு மாற்றம் குறித்த தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டத் தொடங்கி உள்ளது. அதாவது விலங்குகள், தாவரங்களை வைத்து பரிசோதித்த ஆய்வாளர்கள் இப்போது மனிதனின் மரபணுவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க தொடங்கி உள்ளனர். மனிதர்களின் மரபணு பரிசோதனை மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோயால் பாதிக்கப்படுவதற்கும் அவரவரின் மரபணுக்களே முக்கிய காரணம். அதேபோல் ஒருவரின் நல்ல, கெட்ட குணநலன்களை தீர்மானிப்பதும் மரபணுக்கள் தான். மனித உடலில் எண்ணற்ற செல்கள் உள்ளன. செல்லின் உட்கருவுக்குள் 46 குரோமோசோம்கள் 23 ஜோடிகளாக உள்ளன.

ஒவ்வொரு குரோமோசோமும் டி.என்.ஏ. மற்றும் ஹிஸ்டன் என்ற புரதத்தால் உருவாக்கப்படுகிறது. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் புரதமே மிகவும் முக்கியம். ஒவ்வொரு டி.என்.ஏ.வுக்குள்ளும் 30 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. குழந்தைகள் பெற்றோரின் குணநலன்களை பெறுவதற்கு முக்கிய காரணம் இந்த ஜீன்கள் தான். ஒவ்வொரு மரபணுவும் ஒவ்வொரு விதமான பண்புகளை குழந்தைகளுக்கு எடுத்துச் செல்கிறது. அதேபோல் பரம்பரை நோய்கள் எனப்படும் மரபணு நோய்களுக்கும் ஜீன்களே காரணம்.

ஜீன் எடிட்டிங்

இந்த பரம்பரை நோய்களில் இருந்து மனிதர்களை எப்படி பாதுகாப்பது என்பதில்தான் மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சி வேகமெடுத்துள்ளது. அதாவது, ஒரு உயிரின் மரபணுவை நீக்குவது அல்லது மற்றொரு மரபணுவோடு சேர்ப்பது போன்ற தொழில்நுட்பம் 'ஜீன் எடிட்டிங்' அல்லது 'ஜீன் என்ஜினீயரிங்' என்று அழைக்கப்படுகிறது.

இதன் மூலம் நல்ல பண்புகளுக்கு காரணமான ஜீன்களை ஒருங்கிணைத்து புதிய கருவை உருவாக்க முடியும் என்கிறார்கள் மரபணு ஆராய்ச்சியாளர்கள். இதனால் நாம் விரும்பும் நல்ல பண்புகளை உடைய குழந்தைகளை உருவாக்குவது சாத்தியம் என்கிறார்கள்.

தாவரம் அல்லது விலங்கின் செல்களில் நோய் உருவாகுவதற்கு காரணமான மரபணுவை அடையாளம் கண்டு அதை மாற்றி அமைப்பதன் மூலம் அந்த உயிரினத்தை மரபணு நோயில் இருந்து பாதுகாக்க முடியும் என்பதே ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பமாகும். விலங்கு, தாவரம் மட்டுமல்ல, மனிதனுக்கும் இது சாத்தியம் என்கிறது நவீன மரபணு ஆராய்ச்சி. இதன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் பரம்பரை நோய்கள், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வராமலேயே தடுக்க முடியும் என்கிறார்கள், ஆய்வாளர்கள். அதாவது, நோய்க்கு காரணமான மரபணுவை மாற்றம் செய்வதன் மூலம் இந்த நோய்கள் வராமலேயே தடுக்க முடியும்.

இயற்கைக்கு மாறான ஆராய்ச்சி

சீனாவைச் சேர்ந்த மருத்துவர் ஹீஜியாங் இதுபோன்று இரட்டை பெண் குழந்தைகளை எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க அவர்களுக்கு மரபணு மாற்றம் செய்ததாகவும், அவர்கள் நோய் தாக்குதல் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த சம்பவம் உறுதி செய்யப்படவே, இது இயற்கைக்கு மாறான ஆராய்ச்சி என தெரிவித்த சீன அரசு அந்த மருத்து வரையும், அவருக்கு உதவியாக இருந்தவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. காரணம், மனிதர்களில் மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.

இதுபோன்ற ஆராய்ச்சிகளை ஆய்வாளர்கள் குழந்தை உருவாக்க பயன்படுத்தாத செயற்கை கருத்தரித்தல் முறையில் உருவாக்கப்படும் கரு முட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆராய்ச்சிக்குப் பிறகு அந்த கரு முட்டைகளை அழித்து விட வேண்டும் என்ற விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

காரணம், மனிதர்களின் மரபணு மாற்றம் என்பது இயற்கை நியதியை தாண்டிய விஷயமாகும். இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் எப்படிப்பட்ட குழந்தைகள் வேண்டும் என ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும் என்ற அளவிற்கு வளர்ந்துள்ளது.

ஆரோக்கியமான குழந்தை

மரபணுவில் உள்ள மைட்டோகாண்டிரியா எனப்படும் இழை மணியில் கோளாறு இருந்தால் குழந்தைகள் நோயால் பாதிக்கப்படுகின்றன. எனவே கருத்தரிக்கும் போதே இந்த மரபணு குறைபாட்டை தடுக்க ஆரோக்கியமான பெண்ணின் சினை முட்டையில் இருக்கும் கரு மையப் பகுதியை, குறைபாடுள்ள பெண்ணின் சினை முட்டையில் பொருத்தி கருவுறச் செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதுசம்பந்தமாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, மனிதர்களுக்கும் செய்யலாமா? என விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த மருத்துவ தொழில்நுட்பம் காரணமாக பிறக்கும் குழந்தையின் உடலில் 2 தாய் மற்றும் ஒரு தந்தையின் மரபணுக்கள் இடம் பெறும். பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் அதன் இழைமணியில் செய்யப்பட்ட திருத்தம் அதன் சந்ததிகளிடமும் தொடரும். மைட்டோகாண்ட்ரியா திருத்தம் ஒருமுறை நிகழ்ந்தால் அடுத்தடுத்து வழி, வழியாக வந்து கொண்டே இருக்கும்.

இயற்கைக்கு மீறிய செயலாக இது இருந்தாலும், ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இருப்பினும் இந்த வகை மரபணு மாற்றத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து பிரசவத்தை அறுவை சிகிச்சை மூலம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பழக்கம் இப்போது பரவலாக இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

அதேபோல் எனக்கு சிவப்பாக உள்ள குழந்தை வேண்டும், எனக்கு அறிவான குழந்தை வேண்டும், எனக்கு விளையாட்டுத் திறமை உள்ள குழந்தை வேண்டும் என பொருட்களை ஆர்டர் செய்வது போல் குழந்தைகளையும் மருத்துவர்களிடம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் நிலை எதிர்காலத்தில் உருவானாலும் ஆச்சரியமில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

குளோனிங் குழந்தைகள்

மரபணு மாற்றம் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானிகள் எப்படி வியத்தகு சாதனைகள் படைத்து வருகிறார்களோ, இதே போல் குளோனிங் தொழில்நுட்பத்திலும் பல்வேறு புரட்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆண், பெண் செக்ஸ் செல்களுக்கு பதில் உடல் செல்லை (stem cell) வைத்து புதிய உயிர்களை உருவாக்குவதற்கு பெயர்தான் குளோனிங்.

இந்த முறையில் விலங்குகள் மற்றும் தாவரங்களை உருவாக்கிய விஞ்ஞானிகள் இப்போது மனிதர்களையும் உருவாக்க தொடங்கி உள்ளனர். முதன் முதலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர்ஜான் குர்டான் என்பவர் 1962-ம் ஆண்டு 'ஜெனோபாஸ்' என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து ஒரு புதிய தவளையை உருவாக்கினார். பிறகு டாலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டி குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பூனை, நாய், எலி, குரங்கு மற்றும் ஓநாய் போன்ற விலங்குகள் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டது. குளோனிங் தொழில் நுட்பத்தின் உச்சமாக அமெரிக்காவில் குளோன் எய்ட் ஆராய்ச்சி மையத்தில் முதன் முதலில் குளோனிங் முறையில் குழந்தை உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி பாஸ் செல்லியர் என்பவர் தலைமையிலான மருத்துவ ஆராய்ச்சிக்குழு இந்த சாதனையை நிகழ்த்தியது.

முதன் முதலில் உருவாக்கப்பட்ட இந்த குளோனிங் குழந்தை தாயின் செல்லில் இருந்து உருவாக்கப்பட்டது. தாயின் செல்லை எடுத்து கரு முட்டைக்குள் செலுத்தி கரு உருவாக்கம் செய்யப்பட்டது. பிறகு, அந்த கரு பெண்ணின் கரு முட்டைக்குள் வைத்து வளரச் செய்து குளோனிங் குழந்தை உருவாக்கப்பட்டது.

இந்த முறையில் பிறக்கும் குழந்தைகள் யாருடைய செல்லை எடுத்து கரு முட்டையில் செலுத்துகிறோமோ, அந்த நபரின் ஜெராக்ஸ் போல் உருவம் மற்றும் குணநலன்கள் இருக்கும். உருவத்தில் இரட்டையர்கள் ஒரே மாதிரி இருந்தாலும் குணநலன்களில் வேறுபடுவார்கள். ஆனால் குளோனிங் குழந்தைகள் அப்படி இல்லை, யாரின் செல்லில் இருந்து குளோனிங் செய்யப்படுகிறார்களோ அவரின் நகலாகவே இருப்பதுதான் இதில் சிறப்பு அம்சம்.


Next Story