மிகப்பெரிய சொகுசு ஓய்வறை


மிகப்பெரிய சொகுசு ஓய்வறை
x

முதல் வகுப்பு பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இது ஆடம்பரமான வசதிகளையும், உலகத்தரமிக்க கட்டமைப்புகளையும் கொண்டது. தற்போது 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது.

விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு காத்திருக்கும் ஓய்வறை கட்டமைப்பில் டெல்லி விமான நிலையம் தனித்துவமிக்க அம்சங்களை கொண்டதாக மாறியுள்ளது. அங்குள்ள 3-வது முனையத்தில் 'என்கால்ம் லாஞ்ச்' என்ற பிரத்யேக சொகுசு ஓய்வறை சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலைய ஓய்வறை என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ஓய்வறை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்டிருக்கும். அப்போது ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலைய ஓய்வறை கொண்ட இடமாக மாறும்.

ஏற்கனவே டெல்லி விமான நிலையத்தில் இரண்டு ஓய்வறைகள் உள்ள நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த 3-வது ஓய்வறை பிரமாண்டமான கட்டமைப்புகளுடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பயணிகளுக்கு இனிமையான அனுபவத்தை வழங்கும் வகையிலான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விசாலமான உணவகம், பார், வணிக மையம் என பயணிகளுக்கு சவுகரியமான வசதிகளை வழங்குகிறது. குடும்பத்துடன் பயணிக்கும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்காக பிரத்யேக விளையாட்டு கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகப்பிரியர்களை ஈர்க்கும் விதமாக பலதரப்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகளுடன் மினி நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற ஓய்வறைகளை விட இந்த 'என்கால்ம் லாஞ்ச்' சொகுசு ஓய்வறை மாறுபட்ட சூழலை கொடுக்கும் என்கிறார்கள், விமான நிலைய அதிகாரிகள்.

1 More update

Next Story