தமிழர் சிந்தையில் மலரும் 'நிலவு'


தமிழர் சிந்தையில் மலரும் நிலவு
x

நிலவு பற்றிய புனைவுக் கதைகள் தமிழர் வாழ்வியலோடு ஒன்றிப் போயுள்ளது.

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ....

அந்த நிலாவைத்தான் கையிலே புடிச்சேன்....

சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா.... என்றெல்லாம் தமிழ் திரை இசைப் பாடல்கள் இங்கே ஒலித்ததுண்டு.

நிலவைக் காட்டிச் சோறு ஊட்டிய வரலாறும் நம்மிடையே உண்டு.

'நிலாவில் பாட்டி வடை சுடுகிறாள்' போன்ற புனைவுக் கதைகள் தமிழர் வாழ்வியலோடு ஒன்றிப் போயுள்ளது.

இத்தகு பெருமைக்குரிய புவியின் துணைக்கோளான, சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கின்ற நிலவின் பெயர்களாக இலக்கியங்கள் அம்புலி, அல்லோன், உடுவேந்தன், கலாநிதி, களங்கன், சந்திரன், தண்சுடர், தன்னவன், திங்கள், நிலா, மதி, வெண்கதிர், மண்டிலம் என்றெல்லாம் குறிப்பிடுகிறது.

உலக மானிட இனத்தின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது திங்கள். சரி அதில் என்னதான் இருக்கிறது? இருக்கும்? என்று ஆய்வதற்கு வேண்டி முதன் முதலில் ரஷியா எடுத்த முயற்சியால் அந்நாட்டு விண்கலங்கள் நிலவில் தரையிறங்கின.

இதைக்கண்டதும் எங்கே நிலவு ரஷியாவிற்கு சொந்தமானதாக மாறிவிடுமோ என்ற எண்ணம் அமெரிக்க அரசிடம் ஏற்பட்டது. அதன் விளைவாக நிலவு குறித்து பொது சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் அமெரிக்கா அப்போலோ விண்கலத்தை விண்ணில் செலுத்தி 1969-ம் ஆண்டில் நிலவில் கால் பதித்தது.

நிலவில் முதலில் காலடி வைத்த அமெரிக்கர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் ஆவர். விண்கலத்திலேயே இருந்தவர் எட்வின் ஆல்ட்ரின் ஆவார். இப்பெருமை உலகெங்கும் அன்றைய நாளில் கொண்டாடப்பெற்றது. இன்றும் அந்த நாள் அங்கே ஆண்டு தோறும் நினைவு கூரப்படுகிறது.

அது முதல் உலகின் பல்வேறு நாடுகளும் தங்களால் இயன்றவரையில் நிலவைத் தொடும் முயற்சியில் ஈடுபட்டுத்தான் வருகின்றன. அவ்வகையில் இன்று நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலத்தைச் செலுத்தி வெற்றிபெற்றிருக்கிறது நம்நாடு. இந்த சந்திரயான்-3 ன் வெற்றிப் பயணத்திற்கு வித்திட்ட பெருமை நம் தமிழருக்கும், தமிழ் மண்ணுக்கும் உண்டு.

ஆம்! ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நம் சங்க இலக்கியம் தொடங்கி, அண்மைக்கால திரைப்பட பாடல்கள் வரை நிலவு பேசுபடு பொருளாகவே தமிழர்களுக்கு இருந்து வருகிறது.

இதைத்தான் மகாகவி பாரதியும் "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்று பாடினான். அவன் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது.

இனி இலக்கியம் கூறுவதைப் பார்ப்போம்.

கலித்தொகையில் தலைவி, பரத்தையிடம் சென்று திரும்பி வந்துள்ள தலைவன் வெளியே நிற்பதை உணர்ந்து, தன் மகனுக்குக் கூறுகிறாள், தனக்கு இனியது எது? அல்லாதது எது? என்று..

ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை

அம்புலி காட்டல் இனிது, இன்னாதே (18-19)

"திங்களாகிய குழந்தையே, நீ இவனுடன் விளையாட வருவாயாக" என்று கூறி, "அத்திங்களுக்கு உன்னைக் காட்டி மகிழ்வது எனக்கு இனிது" என்கிறாள்.

மதுரைக் காஞ்சியில் நீர் பொருந்திய அகலமான கடலில் எழுந்த நிலவொளியைப் போன்ற மணல் உடைய கரை,

புலவு நீர் வியன் பௌவத்து

நிலவுக் கானல்…… (113-114)

நிலவின் ஒளி போன்ற வெண்மையான மணல் பரப்பு என்கின்றது.

நெடுநல்வாடையில், நிலவின் பயனை மன்னன் துய்க்கும் வெண்மையான நிலா முற்றத்தில் உள்ள மகரவாய் போன்று பகுக்கப்பட்ட வாயையுடைய நீர்ப் பந்தல் நிறைவதால் வழிந்து விழும் என்கிறது.

நிலவுப் பயன்கொள்ளும் நெடுவெண் முற்றத்து - (95)

மன்னன் நிலவு ஒளியின் பயனை துய்க்கும் என்கின்றது.

தலைவியைக் காண ஒவ்வொரு நாள் இரவிலும் தலைவன் வருகிறான். அவன் வரும்போதெல்லாம் காவலர் நடமாட்டமும், நாய் குரைப்பதும், செவிலியானவள் விழித்துக் கொள்வதும், நிலவு எரித்தலாலும் தலைவியைக் காண முடியவில்லை. இதனை..

நீதுயில் எழினும் நிலவு வெளிப்படினும் - (241)

என்று கூறி வருந்துகிறாள்.

பூதங்கண்ணனார் பாடிய நற்றிணை செய்யுளில்

பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்

நெடுஞ்சினைப் புன்னை….. (9-10)

இதன் பொருள்: பல நாடுகளில் இருந்து வந்த மரக்கலங்களில் கொண்டு வரப்பெற்று இறக்கப்பெற்ற பண்டங்கள் கடல் மணல் பரப்பிலே பரந்து கிடக்கிறது. இந்த மணல் பரப்பு நிலவை ஒத்து இருந்ததாக கூறுகின்றது. கடல் கடந்து பல நாடுகளுடன் தமிழகம் வணிகம் செய்த செய்தி இதன் வழி தெரிகின்றது.

நற்றிணையின் 140-ம் பாடலில், நெடிய தேர் செல்லும் மணல் பரப்பு நிலவு போன்று இருந்ததாக சொல்கின்றது. நற்றிணையின் வேறு சில செய்யுட்களும் கடலின் மணல் பரப்பு போன்றது நிலவு என்றும், நீல நிற வானத்தில் வெண்ணிறமான பல கதிர்களையும் பரப்பி பால் நிறைந்த கடல் போல பரந்து பட்டது நிலவு என்றும் பலவாறாக வர்ணிக்கிறது.

ஐங்குறுநூற்றின் 443-ம் செய்யுளில் தலைவியின் ஒளி பொருந்திய நெற்றி பிறைத் திங்கள் போன்று இருந்ததாகக் கூறுகிறது.

இலங்கு நிலவின் இளம்பிறை போலக்

காண்குவெம் தில்ல இவள் கவின்பெறு சுடர்நுதல் (2-3)

இங்கு நெற்றியினைப் பிறை போன்றது என்று உவமித்துக் காட்டுகிறது.

ஐங்குறுநூற்றின் 454-ம் செய்யுள்

நிலவின் அன்ன நேரரும்பு பேணி (2)

என்கிறது. முல்லை அரும்பு வெண்ணிறம் உடையது. அதனால் நிலவின் அன்ன என்று நிலவோடு அரும்பு ஒப்புமைப்படுத்தி பார்க்கப்படுகிறது.

கலித்தொகை 119-ம் செய்யுள் பகல் பொழுதில் போர் செய்து முடித்ததும் அதாவது சூரியன் மறையும் வேளையில் சக்கரப் படையினை உடைய திருமாலின் நிறத்தைப் போன்று இயல்பான இருள் பரவும். அந்த இருளை பொறுக்கமாட்டாது தன் நிலவொளியால் ஓட்டிப் புறங்காண்பாரைப் போல் அழகு மிகுந்த நிலவு தோன்றும் என்கிறது.

புறநானூற்றில் முழு நிலவின் வடிவத்தை ஒத்த வெண்மையான குடை போன்ற மணற்பரப்பு என்றும், நிலவு போன்ற மணலுடைய அகலமான கடற்கரை என்றும், சிவந்த சூரியன் இடத்திடம் நிலவொளி உண்டாக வேண்டும் என்று விரும்பினாலும் நிலவின் இடத்தில் வெயில் உண்டாக வேண்டும் என்று விரும்பினாலும் அவ்வாறே உண்டாக்கும் வன்மை உடையவன் நீ என்று சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளி வளவன் போற்றப்பெறுகிறான். அதே போன்று நிலவு போல் ஒளி வீசக்கூடியது முத்து மாலை என்றும், மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் என்று நிறைமதி போன்ற வெண்கொற்றக் குடையை உடையவன் அதியர் தலைவன் அதியமான் பொகுட்டெழினி என்றும் போற்றப்பெறுகின்றான்.

சங்க காலம் தொடங்கி சங்க நூல்கள் மட்டுமில்லாது அதன் பிறகு எழுந்த பக்தி இலக்கியங்கள், பிற்காலத்தே தோன்றிய சிற்றிலக்கியங்கள், அதன் பின்னே எழுந்த திரையிசைப் பாடல்கள் என அனைத்திலும் நிலவு பேசுபடு பொருளாகவே இருந்து தமிழர்கள் உள்ளத்தில் ஒன்றியிருந்த நிலையில் தான், இன்றைய தமிழர்கள் வானியல் துறையில் கோலோச்சவும், திட்ட இயக்குநர்களாக இருந்து நிலவினை எட்டும் இயக்குநர்களாக பணியாற்றுவதற்கும் காலம் காலமாக நம் மனதில் தொடரும் நிலவு குறித்த எண்ணமே காரணமெனில் மிகையன்று.

-முனைவர் மணி. மாறன், தஞ்சாவூர்.

மன்னனின் வெற்றியைப் பாடும்போது அவனுடைய வேல் படையின் சிறப்பு பற்றி பாடுதல் மரபு. அதனால் வெள்வேல் பாடினாள் பாடினி என பதிற்றுப்பத்து (61-16) பாடுகிறது. போர் நிறைவு பெற்ற நிலையில் வேலில் படிந்துள்ள ரத்தம் தோய்ந்த கறை கழுவப்பெற்று அராவி நெய் பூசப்பெற்ற வேல், நிலவின் ஒளி போல் காணப்படுகிறதாம்.

வைகையைப் பற்றி பாடும் பரிபாடலில் வளர் பருவத்தை உடைய பிறைத்திங்கள் ஒளி எங்கும் பரவி இருப்பதைப் போல் வைகை ஆறு எங்கும் தன் நீரைப் பரப்பி உலகிற்கு பயன் அளித்தது. அது, தான் தேய்பிறை பருவத்து திங்களைப் போல சிலபோது வற்றினாலும், அமாவாசைப் போல முற்றும் குறைவதில்லை என்று நிலவு வைகை ஆற்றுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது.


Next Story