பாலிவுட் சகோதரிகளின் பான் இந்தியா படங்கள்


பாலிவுட் சகோதரிகளின் பான் இந்தியா படங்கள்
x

ஒரே குடும்பத்தில் இருந்து சினிமாத் துறைக்குள் நுழைந்தவர்கள்தான், நடிகை கீர்த்தி சனோன், நுபுர் சனோன்.

ஒரே குடும்பத்தில் இருந்து இரண்டு, மூன்று நடிகர்- நடிகைகள் சினிமாத் துறைக்குள் வருவது, பாலிவுட்டில் புதிது அல்ல. பல ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்தான். அந்த வகையில் ஒரே குடும்பத்தில் இருந்து சினிமாத் துறைக்குள் நுழைந்தவர்கள்தான், நடிகை கீர்த்தி சனோன், நுபுர் சனோன்.

இவர்களில் கீர்த்தி சனோன் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாத் துறையில் இருந்து வருகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தாலும், இவர் அறிமுகமானது ஒரு தெலுங்கு சினிமாவில்தான். 2014-ம் ஆண்டு 'நேனொக்கடினே' என்ற படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஜோடியாக அறிமுகமானார். அந்தப் படம் பெரியதாக கைகொடுக்காத நிலையில், அதே வருடம் வெளியான 'ஹீரோபண்டி' என்ற பாலிவுட் படம் அவருக்கு முகவரி கொடுத்தது.

தொடர்ந்து ஷாருக்கான், அக்ஷய்குமார், அர்ஜூன் கபூர், டைகர் ஷெராப் உள்பட பல நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சனோன், 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் ஜோடியாக நடித்த 'ஆதிபுருஷ்' திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. பான் இந்தியா மூவியாக வெளியான இந்தப் படத்தில் சீதாதேவி கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன் நடித்திருந்தார். இந்தப் படம் பெரிய தோல்வியை சந்தித்திருந்தாலும், இதில் நடித்த கீர்த்தி சனோன் நடிப்பு பேசப்பட்டது.

இந்த நிலையில் டைகர் ஷெராப் ஜோடியாக இவர் நடித்துள்ள 'கணாபத்' என்ற திரைப்படம் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தசரா திருவிழாவை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ரூ.200 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் இந்தி மொழி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

கீர்த்தி சனோன் நடிப்பில் 'கணாபத்' திரைப்படம் வெளியாகும் அதே நாளில், அவரது தங்கை நுபுர் சனோன் நடித்த 'டைகர் நாகேஸ்வரராவ்' என்ற படமும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான ரவிதேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். தவிர பாலிவுட் நடிகர் அனுபம்கெரும் இதில் இருக்கிறார். ரூ.50 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், 1970-களில் நடைபெறும் ஒரு கொள்ளையனைப் பற்றிய சுவாரசியமான திருப்பம் கொண்ட திரைப்படமாகும்.

சகோதரி கீர்த்தி சனோனைப் பின்பற்றி, சினிமாவுக்கு நுழைய நினைத்த நுபுர் சனோனுக்கு அவ்வளவு எளிதில் பட வாய்ப்பு கிடைத்து விடவில்லை. பல ஆண்டுகளாக முயற்சி செய்தும், 2019-ம் ஆண்டு அக்ஷய்குமார் ஜோடியான ஒரு இசை ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. அதன்பிறகு 2022-ம் ஆண்டு 'பாப் கவுன்' என்ற நகைச்சுவை நாடகத்தில் நடித்தார். அந்த தொடரின் மூலம் நடிப்பை மெருகேற்றிக் கொண்ட நுபுர் சனோனுக்கு 2023-ம் ஆண்டுதான் கனவு நிறைவேறி இருக்கிறது.

ரவிதேஜாவுடன் நுபுர் சனோன் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' தான், அவருக்கு அறிமுக சினிமா. அந்த வகையில் தன் சகோதரி கீர்த்தி சனோனைப் போலவே, நுபுர் சனோனும் தெலுங்கு சினிமாவின் மூலமாக சினிமாத்துறைக்கு அடியெடுத்து வைக்கிறார். கீர்த்தி சனோன் நடித்துள்ள 'கணாபத்', நுபு சனோன் நடித்துள்ள 'டைகர் நாகேஸ்வரராவ்' ஆகிய இரண்டு படங்களுமே பான் இந்தியா மூவியாக வெளியாகின்றன. அதோடு இந்த இரண்டு படங்களுமே வருகிற 20-ந் தேதி வெளியாகிறது என்பது கூடுதல் சிறப்பு.

தமிழில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கிய நடிகை அம்பிகா, ராதா இருவரும் சகோதரிகள். இவர்கள் இருவரின் படங்களும், பல நேரங்களில் ஒரே நாளில் திரையரங்கில் வெளியாகி இருக்கின்றன. இவர்களைத் தவிர்த்து, சகோதரிகள் இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது என்பது, கீர்த்தி சனோன், நுபுர் சனோன் இருவரின் படங்களாகத்தான் இருக்கும்.

கீர்த்தி சனோன் தனக்கென பாலிவுட்டில் தனி இடத்தைப் பிடித்து விட்டார். ஆனால் தற்போதுதான் சினிமாவிற்குள் நுழைந்திருக்கும் அவரது தங்கை நுபுர் சனோன் சினிமாவை ஆட்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Next Story