எலும்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தும் விஷயங்கள்


எலும்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தும் விஷயங்கள்
x

நடைப்பயிற்சி, ஓட்டம், ஜாகிங் போன்ற உடல் செயல்பாடுகளை தொடர்வதன் மூலம் எலும்புகள் வலுவிழப்பது தடுக்கப்படும்.

நம்முடைய உடலில் எலும்புகள் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. அவற்றுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காவிட்டால் வயதாகும்போது பலவீனமடைந்துவிடும். பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வைத்துவிடும்.

எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் சில விஷயங்களை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும். குளிர்பானங்களில் சர்க்கரை, காபின், பாஸ்பாரிக் அமிலம் போன்றவை உள்ளடங்கி உள்ளன. அவற்றை அதிகமாக பருகும்போது எலும்புகள் வலுவிழக்கக்கூடும். விலங்கு இறைச்சிகளில் இருக்கும் புரதத்தை அதிகமாக உட்கொள்வதன் மூலம் கால்சியம் இழப்பு ஏற்படக்கூடும். அதனால் எலும்புகள் பலவீனமடையும். டீ, கோகோ, சாக்லேட் மற்றும் காபியில் உள்ள காபின் போன்றவை உடலில் இருந்து கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்கச்செய்யும்.

எலும்புகளுக்கு போதுமான கால்சியம் கிடைக்காத நிலையை ஏற்படுத்திவிடும். உப்பு மற்றும் சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதன் மூலமும் கால்சியம் வெளியேறக்கூடும். புகைபிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதல் ஆகியவையும் கால்சியத்தின் வீரியத்தை குறைத்துவிடும். அதில் இருக்கும் நிகோடின் கால்சியம் உறிஞ்சப்படுவதை பாதிக்கும்.

உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருக்கும் வாழ்க்கை முறையும் உடலில் கால்சியம் சேமிப்புக்கு தடையாக அமையும். நடைப்பயிற்சி, ஓட்டம், ஜாகிங் போன்ற உடல் செயல்பாடுகளை தொடர்வதன் மூலம் எலும்புகள் வலுவிழப்பது தடுக்கப்படும்.

ஊட்டச்சத்து நிபுணரான அஞ்சலி முகர்ஜி, ''கால்சியம் எளிதில் உறிஞ்சப்படுவதில்லை. நாம் உட்கொள்ளும் மொத்த கால்சியத்தில் 20 முதல் 30 சதவீதம் மட்டுமே உறிஞ்சப்படும். சில உணவுகள் கால்சியம் உறிஞ்சுதலை தடுக்கின்றன. அதனால் எலும்புகள் செயல் இழக்கின்றன.

கால்சியத்துடன் மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி, டி ஆகியவை உள்ளடங்கிய உணவுப்பொருட்களை சாப்பிடுவது கால்சியம் வேகமாக உறிஞ்சப்படுவதற்கு வழிவகுக்கும். வாரத்தில் 6 நாட்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பால் பொருட்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்'' என்கிறார்.


Next Story