சாலையோர மக்களின் நலன் காக்கும் சேவை நாயகி


சாலையோர மக்களின் நலன் காக்கும் சேவை நாயகி
x

சாலையோரங்களில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு, ஆதரவாய் இருக்கிறார் தேவிமணி.

சென்னை முழுவதிலும், சாலையோரங்களில் தங்கி இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவது, மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பது, அங்கு வளரும் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்வது என அவர்களின் நலனில் அக்கறை காட்டுகிறார். அதுமட்டுமின்றி, சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரணாக திகழ்ந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து பாதுகாக்கிறார். சாலையோர மக்களின் நலன் காக்கும் சேவை நாயகியாக வலம் வரும் தேவிமணியுடன் சிறுநேர்காணல்...

* சாலையோர மக்கள் மீதான கரிசனம் பற்றி கூறுங்கள்?

பாதுகாப்பான இடங்களில் வாழமுடியாத சூழலில்தான், சாலையோரங்களில் தற்காலிக டெண்டுகளில் தங்கி இருக்கிறார்கள். இதை உணர்ந்தபோது, அவர்களின் நலனில் பங்கெடுக்க ஆசைப்பட்டேன். அதன் நீட்சியாகவே, இன்று பல முயற்சிகளில் இறங்கி இருக்கிறேன்.

* என்னென்ன செய்கிறீர்கள்?

நான் குரோம்பேட்டையில் வசிக்கிறேன். முதலில் அங்கு சாலையோரங்களில் வாழும் மக்களை சந்தித்து, அவர்களது தேவைகளை உணர்ந்து கொண்டேன். உணவும், மருந்தும் அவர்களது முக்கிய தேவைகளாக இருந்தன. அதேபோல அவர்களுக்கு தேவையான சுகாதார பொருட்களையும் வழங்க ஆரம்பித்தேன். குரோம்பேட்டையை தொடர்ந்து, தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், பெரும்பாக்கம், மேடவாக்கம், புரசைவாக்கம்... என சென்னையின் மிக முக்கிய பகுதிகளில், சாலைகளில் தஞ்சம் புகுந்திருக்கும் சாலையோர மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறேன்.

* நிறைய தன்னார்வ அமைப்புகள் இந்த பணிகளை செய்கின்றனர். உங்களுடைய தனித்துவம் என்ன?

சாலையோரங்களில் வாழும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவச கல்வி உதவிகளை செய்து வருகிறேன். போக்குவரத்து சிக்னல்களில் பொருட்கள் விற்பனை செய்யும் குழந்தைகளின் குடும்பங்களை சந்தித்து, அவர்களது கல்வி, எதிர்காலம் பற்றி பேசுகிறேன். ஆரம்பத்தில் பெற்றோர் சம்மதிக்க தயங்குவார்கள். ஏனெனில் அவர்களது வாழ்வாதாரம், அந்த குழந்தைகளை வைத்துதான் நடக்கிறது. அதனால் அவர்களை சமாளிப்பதில் சில சிக்கல்கள் உண்டாகும். இருப்பினும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி, பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள். மற்ற சேவைகளைவிட, இதுவே எனக்கான தனி அடையாளம்.

* வேறு என்ன செய்கிறீர்கள்?

சாலையோரங்களில், தங்களது வாழ்வாதாரத்திற்காக பிழைப்பு நடத்தும் பெண்கள் மீதும் தனி கவனம் செலுத்துகிறோம். சாலையோரங்களில் தள்ளு வண்டிகளில் பல்வேறு தொழில் நடத்தி வரும் பெண்களுக்கு இலவச இஸ்திரி பெட்டிகள், தட்டு கடை மற்றும் சாட் தொழில் செய்வதற்கான உதவிகளை எங்களால் முடிந்தவரை செய்திருக்கிறோம். அந்தவகையில் தாம்பரம் பகுதியில் நிறைய பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கி இருக்கிறேன். மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனிலும் அக்கறை காட்டுகிறேன். அவர்களுக்கு கல்வி உதவி செய்வதுடன், வேலைவாய்ப்பையும் முன்னெடுக்கிறேன். கடந்த 3 வருடங்களில் மட்டும், 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் படிப்பிற்கு வழிகாட்டியிருக்கிறேன்.

அதேபோல உடல் ஊனமுற்ற பெண்களுக்கான உடைகள், செயற்கை உடல்பாக உபகரணங்களையும் வழங்கியிருக்கிறேன். சமீபத்தில்கூட, 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு செயற்கை உடல்பாகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் தாம்பரம் பகுதி அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு பயனுள்ள சேவைகளையும், மருத்துவ முகாம்களையும் முன்னெடுக்கிறோம்.

* உங்களுடைய லட்சியம் என்ன?

சாலையோரங்களில் பாதுகாப்பின்றி தங்கியிருக்கும் மக்களுக்கு, நிரந்தர வீடு கட்டிக்கொடுக்க ஆசைப்படுகிறேன். அதற்காக, அன்னை அரவணைப்பு கல்வி தொண்டு அறக்கட்டளை என்பதை உருவாக்கி, அதன்மூலம் சாலையோர மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். சாலைகளையே விலாசமாக கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு நிரந்தர விலாசத்தை உருவாக்குவதுதான், என்னுடைய லட்சியம். சில நல்ல உள்ளங்களின் உதவியோடு இதற்கான பணிகளில் செயலாற்றி வருகிறேன்.

* நிறைய சமூக சேவைகளை முன்னெடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் மனநிறைவான சேவை எது?

ஒருமுறை இருளர் இன மக்களுடன் சேர்ந்து பழகக்கூடிய, அதேசமயம் அவர்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான், என் வாழ்க்கையில் மிகவும் மனநிறைவான சேவை. ஏனெனில், அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, மிகவும் எதார்த்தமாக பழகக்கூடியவர்கள். நம்மோடு ஒப்பிடுகையில், அவர்களுக்கு நிறைய தேவைகள் இருந்தாலும், அதை எதுவுமே பொருட்படுத்தாமல் இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் மனப்பக்குவம் கொண்டவர்கள். அவர்களோடு தங்கி அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்தது, எனக்கு மிகப்பெரிய அனுபவ பாடத்தை கொடுத்தது.

* உங்களுடைய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கிறதா?

குடும்பத்திலும், சமூகத்திலும் சிறப்பான ஆதரவு கிடைக்கிறது. எங்களுடைய எல்லா முயற்சிகளிலும் தன்னார்வலர் ஜே.மணி உள்பட நல் உள்ளங்கள் பலர் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். என்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக சேவையாற்ற வழிவகை செய்கிறது.

* உங்களுக்கு கிடைத்த விருது கவுரவங்களை பற்றி கூறுங்கள்?

அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக களபணியாற்றுவதால், அரசு சுகாதார துறையின் மூலமாகவே சிறந்த சமூக சேவகி விருதும், சிறந்த தன்னார்வலர் விருதும் கிடைத்திருக்கிறது. இத்துடன் என்னுடைய சேவையை மையப்படுத்தி நிறைய தனியார் விருது கவுரவங்களும் கிடைத்திருக்கிறது.


Next Story