மன அழுத்தத்தின்போது அதிகம் உண்பதை தவிர்க்கும் வழிகள்


மன அழுத்தத்தின்போது அதிகம் உண்பதை தவிர்க்கும் வழிகள்
x

மன அழுத்தமாகவோ, பதற்றமாகவோ, சோர்வாகவோ இருப்பதாக உணரும்போது சிலர் வழக்கத்தை விட அதிகமாக உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றுவார்கள்.

தங்களுக்கு பிடித்தமான உணவாக இருந்தால் சாப்பிடும் அளவு இரு மடங்காகிவிடும். அப்படி சாப்பிடுவது மனம் நிம்மதி அடைந்த உணர்வைத்தரும். ஆனால் அது தற்காலிகமானதுதான்.

மன அழுத்தம் அதிகரிக்கும்போது கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோனின் சுரப்பு அதிகமாகி பசியை தூண்டிவிடக்கூடும். மன அழுத்தத்தின் தாக்கத்தை மூளையும் உணர்வதால் பசி எடுக்காவிட்டாலும் கூட இனிப்பான, காரமான உணவை சாப்பிடும் எண்ணம் மேலிடுகிறது. அதனால் இத்தகைய அழுத்தங்களை புரிந்து கொள்வதும், அதனை கையாள்வதும் முக்கியமானது. இல்லாவிட்டால் மன அழுத்தத்தின்போது அதிகம் சாப்பிடும் பழக்கம் தொடரும். அதனால் உடல் பருமன், நீரிழிவு நோய், கெட்ட கொழுப்பு உடலில் சேர்வது உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மன அழுத்தத்தின்போது சாப்பிடும் எண்ணம் தலைதூக்கினால் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

உணவு பழக்கம்: மன அழுத்தமாக இருக்கும்போது ஏதாவது சாப்பிட்டே ஆக வேண்டும் என்று தீர்மானித்தால், மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் உணவுகளை உட்கொள்ளலாம். முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பிய ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுகளை உட்கொள்வது சிறந்தது. அவை செரோடோனின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மூளையை தூண்டிவிடும். ரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கும் வித்திடும். மன அழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும்.

உடற்பயிற்சி: உடற்பயிற்சி போன்ற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடும்போது டோபமைன் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படும். இது மனதை ரிலாக்ஸாக உணர வைக்கும் தன்மை கொண்டது. நடைப்பயிற்சி, தோட்டக்கலை, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்ட உடல் இயக்கம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் இந்த ஹார்மோன் வெளியீட்டை அதிகரிக்க செய்ய முடியும். அதன் மூலம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கலாம்.

உரையாடல்: நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதற்கு தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். அது மனதை சாந்தப்படுத்தும். சோர்வாகவோ, சலிப்புடனோ இருக்கும்போது விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். புத்தகங்கள் படிக்கலாம். அப்படி கவனத்தை திசை திருப்புவது அதிகம் சாப்பிடும் உணர்வை கட்டுப்படுத்திவிடும்.

அட்டவணை: தினமும் 3 வேளையும் என்ன சாப்பிடப்போகிறோம் என்பதை பட்டியலிடுங்கள். அதன்படி அன்றைய நாளின் உணவுப்பழக்கத்தை கடைப்பிடியுங்கள். அது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தடுக்க உதவும். நொறுக்குத்தீனிகள் மீதான நாட்டத்தையும் குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கவும் உதவும்.

நீர்ச்சத்து: குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் பருகும் பழக்கத்தை பின்பற்றுங்கள். அது உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். குறிப்பாக வயிற்றில் ஏற்படும் வெற்றிடத்தை ஆக்கிரமித்து அதிகமாக உணவு உண்பதை தடுக்கும்.


Next Story