துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு - சஞ்சய் ராவத்


துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு - சஞ்சய் ராவத்
x

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவு அளித்துள்ளது.

மும்பை,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்தாக வேண்டும். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில், மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு சிவசேனா ஆதரவு அளிக்க உள்ளதாக அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "திரௌபதி முர்மு ஒரு பெண். அவர் பழங்குடியினச் சமூகத்தை சேர்ந்தவர். மராட்டியத்தில் பெரும்பாலாக பழங்குடியின சமூகத்தினர் வசிக்கின்றனர். எங்கள் கட்சியில் பழங்குடியினத்தை சேர்ந்த பல எம்.பி க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த வகையில் எங்கள் கட்சிக்கும், கட்சி தலைவருக்கும் திரௌபதி முர்மு மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.

அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்முவை ஆதரிப்பதாக சிவசேனா தலைவர் தெரிவித்தார், ஆனால், அதே நேரத்தில் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவை சிவசேனா ஆதரிக்கும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story