நுண்கலையில் அசத்தும் மாணவி..!


நுண்கலையில் அசத்தும் மாணவி..!
x

தமிழர்களால் இசை, ஓவியம், நாட்டியம், சிற்பம், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் இன்றும் உயிர்ப்புடன் வளர்க்கப்படுகின்றன. நம் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிப்பவை நுண்கலைகள்.

* நிறைவான வாழ்க்கை

கலைகளை வளர்க்க நாடு முழுவதும் கலைக்கல்லூரிகள் இருந்தாலும், நுண்கலைகள் தான் நம்முடைய தனித்த அடையாளத்தை வெளிப்படுத்த உதவுகின்றன. நிறைவான வாழ்க்கையை தருகின்ற பண்பட்ட மனதினை நமக்கு தரவல்லது நுண்கலைகள் தான். மேலும் மனித வாழ்க்கைக்கு பயன்படுகிற அனைத்து தொழில்களும் கலைகள் தான். மனம் அமைதியை பெற கலைகளே துணை புரிகின்றன.

இந்த நுண்கலைகளை கற்றுக்கொடுக்க தற்போது பல்வேறு கல்லூரிகள் இருந்தும், தனது சுய திறமையால் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நுண்கலையில் அசத்துகிறார்.

* மனதில் நினைத்த உருவம்

ஆம்! தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்காலை சேர்ந்தவர் சுசி லாவண்யா (வயது 19). இவரது தந்தை மாரியப்பன் கொத்தனார் வேலை செய்து வருகிறார். தாய் அய்யம்மாள் குடும்ப தலைவியாக உள்ளார். இந்த தம்பதியின் இளைய மகளான சுசி லாவண்யா கடையநல்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயது முதலே கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொருளை பிளேடால் செதுக்கிக் கொண்டே இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒரு முறை பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த போது கீழே கிடந்த இலையை எடுத்து, தனது மனதில் நினைத்த உருவத்தை பிளேடால் கீறிக்கொண்டே இருந்தார். அப்போது இலையில் அழகிய பெண்ணின் உருவம் தோன்றியுள்ளது. அதை சக மாணவிகள், ஆச்சரியத்துடன் பார்த்ததுடன் சுசி லாவண்யாவை பாராட்டி உள்ளனர். தொடர்ந்து அதனை ஆசிரியரிடம் காண்பித்துள்ளனர். சுசி லாவண்யாவிடம் அவரை அறியாமலே நுண்கலை மீது அவருக்குள் உண்டான ஆர்வத்தை அறிந்து ஊக்கப்படுத்த தொடங்கினர்.

* கையில் கிடைக்கும் பொருட்கள்

அதன் பிறகு சுசி லாவண்யாவுக்கு நுண்கலை மீது அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொருளை வைத்து அதில் மனித உருவங்களையும், விலங்குகளின் உருவங்களையும் செதுக்க தொடங்கினார். அதாவது பென்சில், இலைகள், சாக்பீஸ் என எந்த ஒரு பொருளையும் விட்டு வைப்பதில்லை. பிறர் வேண்டாம் என தூக்கி எறியும் பொருட்களை எல்லாம் தனது நுண்கலை திறமையால் மதிப்பு மிக்க பொருட்களாக வடிவமைத்தார். 10-ம் வகுப்பு முதல் பென்சிலில் மட்டும் தனது நுண்கலை திறமையை வெளிப்படுத்திய சுசி, 12-ம் வகுப்புக்கு பிறகு இலை, சாக்பீஸ் உள்ளிட்டவற்றில் பல்வேறு வடிவங்களை செதுக்கினார்.

குறிப்பாக இலைகளில் சிவன், பிள்ளையார், பிரம்மா சரஸ்வதி, பசுவும் கன்றும், மணமக்கள், யோகா செய்யும் மனிதன் உள்ளிட்ட பல்வேறு உருவங்களையும், பென்சிலில் திருக்குறள், உயிர் எழுத்துகள், தந்தை-மகன், செஸ் போர்டு போன்றவற்றையும், அரிசியில் எழுத்துகள் உள்ளிட்டவற்றையும் மிக எளிதில் செய்கிறார். இதில் இலையில் மனித உருவத்தை செதுக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்கிறார். அதிகபட்சமாக 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் செய்து முடித்து அசத்துகிறார்.

* திறமைக்கு பரிசு

இதுகுறித்து சுசி லாவண்யா கூறுகையில், ''ஆரம்பத்தில் நான் செய்வது நுண்கலை என்றே தெரியாமல் பென்சிலை எழுத்துக்களாக செதுக்கி திருக்குறள் அதிகாரங்களை வடிவமைத்தேன். அதன் பிறகு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் கூறித் தான், அது நுண்கலை என்பதே தெரியவந்தது. தொடர்ந்து எனக்கு நுண்கலை மீது இருந்த ஆர்வத்தால் எனது பெரியப்பா செல்வம், நுண்கலைக்கு தேவையான பொருட்களை நான் கேட்கும் போதெல்லாம் வாங்கி தந்தார்.

அதன் பலனாக பென்சில், சாக்பீஸ், இலை உள்ளிட்டவற்றில் பல்வேறு வடிவங்களை செதுக்கி உள்ளேன். பள்ளி, கல்லூரியில் எனது திறமையை பாராட்டி பரிசும் வழங்கி உள்ளனர். மேலும் நான் நுண்கலை மூலம் செய்யும் பொருட்களை சிலர் விலை கொடுத்தும் வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் எனது சுய வருமானத்தால் படிக்கவும், நுண்கலைக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் பேருதவியாக உள்ளது. தொடர்ந்து சிறுதொழிலாக செய்து வருகிறேன். இருப்பினும் எனது முழு திறமையை வெளிக்காட்ட அரசு உதவ வேண்டும்'' என்றார்.

நான் நுண்கலை மூலம் செய்யும் பொருட்களை சிலர் விலை கொடுத்தும்

வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் எனது சுய வருமானத்தால் படிக்கவும், நுண்கலைக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் பேருதவியாக உள்ளது. தொடர்ந்து சிறுதொழிலாக செய்து வருகிறேன்.


Next Story