இசை ஆல்பங்களில் அசத்தும் இளைஞர்..!


இசை ஆல்பங்களில் அசத்தும் இளைஞர்..!
x

நடிகர் அஷ்வின் நடித்த ‘குட்டிப்பட்டாசு’ ஆல்பம் பாடலை எழுதியதன் மூலம் பிரபலமடைந்தவர், பாடலாசிரியர் அ.ப.ராசா.

நடிகர் அஷ்வின் நடித்த 'குட்டிப்பட்டாசு' ஆல்பம் பாடல் அதிரி புதிரியாக ஹிட் அடித்தது. இப்பாடலை யூ-டியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 18 கோடி. ஒரு பாடல் திரைப்படத்தில் வெளியாகாமல், ஆல்பத்தில் வெளிவந்து 'ஹிட்' அடித்தது இதுவே முதல்முறை. இப்பாடலை எழுதியதன் மூலம் பிரபலமடைந்தவர், பாடலாசிரியர் அ.ப.ராசா. குட்டிப் பட்டாசை தொடர்ந்து, இவர் எழுதிய 'பேபி நீ சுகரு சுகருமா', 'என்ன வாழ்க்கைடா', 'கூல் டியூட்', 'தவுசண்ட் கிளஸஸ்', 'ஐ மேக் நீ'... போன்ற ஆல்பம் பாடல்கள் 'ஹிட்' அடித்தன.

இதுவரை 83 பாடல்கள் எழுதி இருக்கிறார். இவர் எழுதும் பெரும்பாலான பாடல்கள் ட்ரெண்டிங் ஆவதால், இவருக்கு 'டிரெண்டிங் கவிஞர்' என்ற பெயரும் உண்டு. இனி அவருடன்...

* உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

பிறந்தது, தேனி மாவட்டம் பெரியகுளம். ஏழாம் வகுப்பில் என்னுடன் படித்த காளிதாஸ் என்ற நண்பன்தான் நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தான். பள்ளி ஆசிரியை ஜெயந்தி, அதை வளர்த்தெடுத்தார்.

எங்கள் வீட்டுக்கு அருகில் கவிஞர் வைரமுத்துவின் அத்தை குடியிருந்தார். அவரை பார்க்க வைரமுத்து அடிக்கடி அங்கு வருவார். அவர் மீதான பிரமிப்பு இலக்கியம் மற்றும் திரைப்பாடல்கள் பக்கம் என்னை திருப்பியது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, இனி சென்னையும், பாட்டும் தான் வாழ்க்கை என முடிவு செய்து விட்டேன்.

* எப்படி பாடலாசிரியர் ஆனீர்கள்?

இளங்கலை, முதுகலை படிப்புகளை சென்னையில் தான் படித்தேன். பிறகு, ஊடகங்களில் வேலை செய்து கொண்டே பாடல் வாய்ப்புகள் தேடினேன். ஆரம்பத்தில் டப்பிங் பாடல்கள் எழுதும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. ஏறக்குறைய 200 பாடல்கள் எழுதினேன். பிறகு குட்டிப் பட்டாசு வெளியானது. அதன் மூலம் ஆல்பங்களுக்கும் மக்களிடம் பெரிய வரவேற்பு இருப்பது தெரியவந்தது. பிறகு நிறைய ஆல்பம் பாடல்கள் எழுதினேன். ஆல்பம் பாடல்களின் வெற்றி, இப்போது நிறைய சினிமா பாடல்கள் எழுத வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிது. டிரைவர் ஜமுனா, அறமுடைத்த கொம்பு, தலைக்கூத்தல், லவ், பாபா ப்ளாஷிப், ஃ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடல் எழுத ஆல்பங்களின் வெற்றி தான் காரணம்.

* உங்களுடைய பாடல்களில், டிரெண்டிங் சொற்கள் அதிகமாகவே இருக்கின்றன. இதை எழுதினால் ஹிட்டாகும் என்று ஏதாவது `பார்முலா' வைத்திருக்கிறீர்களா?

சுற்றி நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிப்பது என் பலம். அப்படித் தான், சமூக ஊடகங்களில் பயன்படுத்தும் சொற்களை மெனக்கெட்டு கவனிப்பேன். எல்லோரும் பேசும் பொதுமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டே இருக்கும். அந்த மாற்றங்களை கவனிப்பேன். நானும் இளைஞனாக இருப்பதால் நண்பர்களின் பேச்சில் இருக்கும் வழக்கு மாற்றங்களை கூர்ந்து கவனிப்பேன். இது டிரெண்டிங்காக எழுத உதவுகிறது. மற்றபடி, எதை எழுதினால் ஹிட்டாகும் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. ஆனால், காலம் முழுக்க அதை தேடிக் கொண்டிருப்பேன்.

* ஒரு பாடல் எழுத எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வீர்கள்?

சில மணி நேரங்களில் முடித்து விடுவேன். பிறகு, இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர்களின் எதிர்வினையை பொறுத்து அவர்கள் கேட்கும் மாற்றங்களை செய்து கொடுப்பேன். மற்றபடி எக்காரணம் கொண்டும் எழுதுவதை தாமதப்படுத்த மாட்டேன். ஒரு படம், பாடல் பதிவில் இருந்து தான் தொடங்கும் என்பதால், எந்த சூழலிலும் பாடல் வரிகளால் ஒரு படத்தின் துவக்கம் தள்ளிப் போய் விடக்கூடாது என்பதில் கவனமுடன் இருப்பேன்.

* பொது இடங்களில் உங்கள் பாடல் ஒலிபரப்பாகும் போது எப்படி உணர்வீர்கள்?

மகிழ்ச்சியாக இருக்கும். பாடல் எழுதும் போது ஏற்பட்ட வலி எல்லாம் அதை கேட்கும் நொடியில் காணாமல் போகும். புதிய போன் நம்பர்களுக்கு அழைக்கும் போது, காலர் டியூனாக என் பாடலை கேட்ட நொடிகளை எல்லாம் மறக்கவே முடியாது. ஆனந்த அதிர்ச்சியாக இருக்கும்.

* ஆல்பங்களில் பாடல் எழுதி விட்டு சினிமாவுக்கு எழுதும்போது, ஏதாவது சிக்கலை எதிர்கொண்டீர்களா?

இல்லை. பாடல் என்பது பொதுவானது. அதற்கு எந்த வேறுபாடும் இருக்காது.

* தற்போது திரைப்படங்களில் பாடல் எண்ணிக்கை குறைந்து வருவதால், எதிர்காலத்தில் பாடல்கள் இருக்காதா?

இல்லை. பாடல்களின் எண்ணிக்கை குறையலாம். ஆனால், முற்றிலும் பாடல்கள் இல்லாமல் தமிழ் படங்கள் வராது. ஏனென்றால் அது நம் பண்பாட்டின் தொடர்ச்சி. சினிமாவில் பாடல்கள் குறைகிற அதே நேரத்தில், ஆல்பங்கள், பல்வேறு இசை நிறுவனங்களில் பாடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும்.

* பாடல்களில் உங்கள் லட்சியம் என்ன?

பாடல்கள், தற்கொலையை தடுத்திருக்கிறது. நொடிந்து போனவர்களை கை தூக்கி விட்டிருக்கிறது. வாழ்க்கை குறித்த நிறைய நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. எனது பாடல்கள் மூலம் இதை எல்லாம் செய்ய விரும்புகிறேன்.

* உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள்?

என் மனைவி விஜய சுதாவும், நானும் சென்னை பல்கலைக்கழகத்தில், மக்கள் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டு குடும்பத்தினரின் பூரண சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் அப்போதிருந்தே உணர்வுப்பூர்வமான புரிதல் உண்டு. எழுதுகிறவனுக்கு மனசு ரொம்ப முக்கியம் என்பதால், குடும்பம் மற்றும் உறவு சார்ந்த பிரச்சினைகளை என் கவனத்துக்கு கொண்டு வர மாட்டார். மகிழினி நறுமுகை, மகரந்தன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

* தற்போது வரும் ஆல்பம் மற்றும் திரைப்படங்களில் நல்ல தமிழ் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நவீன தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள், கால மாற்றம் இந்த மூன்றும் தான் அதற்கான காரணம். அதே நேரத்தில் அழகான தமிழ் பாடல்கள் வராமல் இல்லை. அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. டிரெண்டிங் பாடல்கள் வெகுஜன ரீதியில் பெரிய அளவில் வெற்றி பெறுவதால் அப்படி ஒரு மாயத்தோற்றம் நமக்கு ஏற்பட்டுள்ளது.

* மெட்டுக்கு பாட்டா? பாட்டுக்கு மெட்டா?

நான் எழுதிய எல்லா பாடல்களும் மெட்டுக்குத் தான் எழுதப்பட்டது. பெரும்பாலான பாடலாசிரியர்களுக்கும் இதுவே நிலைமையாக இருக்கும். பாட்டு மெட்டு என்ற கலாசாரம் முற்றிலும் குறைந்து விட்டது.


Next Story