வில்வித்தை நட்சத்திரம்...!


வில்வித்தை நட்சத்திரம்...!
x

சென்னையை சேர்ந்த காம்னா ஜெயின், ஒலிம்பிக் போட்டிகளில் வில்வித்தை பிரிவில் தங்கம் வெல்வதையே லட்சியமாக கொண்டிருக்கிறார். அதற்காக தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து, காம்னா ஜெயினுடன் சிறு நேர்காணல்.

* வில்வித்தை மீது ஈர்ப்பு வந்தது எப்படி?

நான் சென்னையை சேர்ந்தவள். தி.நகரில் இருக்கும் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் கல்லூரியில் பி.காம் கார்பரேட் சயின்ஸ் படித்த போதுதான், வில்வித்தை மீது ஈர்ப்பு வந்தது. ஆம்...! எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளர் அபாய் குமார் ஒலிம்பிக் போட்டிகளில் வில்வித்தை பிரிவில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தை முன்வைத்து, பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு பயிற்சிகளில் களம் இறங்கினார். ஏராளமான மாணவிகள், ஒலிம்பிக் பக்கமாக ஈர்க்கப்பட்டு வில்வித்தை பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கினார்கள். அந்தவகையில், நானும் வில்வித்தை போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

* எப்போது தொடங்கியது இந்த பயணம் ?

2017-ம் ஆண்டுதான் வில்வித்தை பயிற்சி பெற தொடங்கினேன்.

* பழக்கமில்லாத விளையாட்டில், பயிற்சி பெற தொடங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

கொஞ்சம் கடினமாகவே இருந்தது என்றாலும், கல்லூரி செயலாளரின் கனவை எட்டிப்பிடிக்கும் ஆசையில், என்னை மிகவும் கடினமான பயிற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டேன். மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில், வில்வித்தை பிரயோகத்தில் இந்தியர்களே தலைசிறந்தவர்களாக விளங்கினர். மகாபாரதம், ராமாயணம்... போன்ற இதிகாசங்களே இதற்கு உதாரணம். இப்படியாக, வில்வித்தையின் பிறப்பிடமான இந்தியாவிலிருந்து, ஒலிம் பிக் போட்டிகளில் இதுவரை யாரும் வில்வித்தை போட்டிகளில் பதக்கம் வென்றதில்லை என்ற வருத்தம், கல்லூரி செயலாளரின் மனதில் உண்டு. அதை போக்கவே, கடினமாக பயிற்சி பெறுகிறேன்.

* இதுவரை எத்தனை போட்டிகளை வென்றிருக்கிறீர்கள்?

பயிற்சி பெற தொடங்கிய முதல் ஆண்டிலிருந்தே (2017) வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். 2017-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடந்த உள்விளையாட்டு போட்டிகளில், கலந்துகொள்ள இந்தியாவின் சார்பாக தேர்வாகினேன். இப்படி தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு, 35 பதக்கங்களை வென்றிருக்கிறேன்.

* உங்களது வில்வித்தை போட்டி அனுபவத்தில் மறக்கமுடியாத வெற்றி எது?

சமீபத்தில் நடந்து முடிந்த சீனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அனுபவங்களை அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது. ஏனெனில் இந்த சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் விளையாடும் நிறைய சீனியர்கள் அங்கம் வகித்தனர். அவர்களுடன் ஜூனியர்களாக பயிற்சி பெற்றதும், ஒருகட்டத்தில் அவர்களையே எதிர்த்து விளையாடி பதக்கம் வென்றதும், சுவாரசியமாக இருந்தது.

* சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி அனுபவங்களை கூறுங்கள்?

'நாக்-அவுட்' தகுதி போட்டிகளுக்கு, மொத்தம் 16 அணிகள் தேர்வாகின. அதில் நம்முடைய தமிழக அணி, கடைசி இடமான 16-ம் இடம் பிடித்தது. இதில் என்ன சுவாரசியம் என்றால், முதல் 'நாக்-அவுட்' போட்டியானது, டாப்-16 பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கும், கடைசி இடம் பிடித்த தமிழக அணிக்கும்தான். ராஜஸ்தான் மிகவும் பலமான அணி என்றாலும், நாங்கள் சாதுரியமாக இலக்கை தாக்கினோம். யாருமே எதிர்பார்க்காத வண்ணம், 7-5 என்ற புள்ளி கணக்கில், ராஜஸ்தானை வீழ்த்தி முன்னேறினோம். அடுத்ததாக, மகாராஷ்டிரா அணியை, 6-0 என்ற புள்ளி கணக்கில் துவம்சம் செய்தோம். அரை இறுதியில், தேசிய அளவில் மிகவும் திறமையான அணியாக அறியப்படும், ஜார்கண்ட் அணிக்கு, அதிர்ச்சி கொடுத்தோம். இரண்டு சர்வதேச தரத்திலான வீராங்கனைகள் ஜார்கண்ட் அணியில் அங்கம் வகித்தாலும், அவர்களால் ஒரு புள்ளிகள் கூட பெற முடியவில்லை. 6-0 என்ற புள்ளி கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்கு சென்றோம். மேற்கு வங்காள அணிக்கு இடையேயான இறுதிப்போட்டியில், ஒருசில தவறுகள் நடந்ததால், தங்கம் பறிபோனது. இருப்பினும், கடைசி அணியாக நாக்-அவுட் சுற்றுக்குள் உள்நுழைந்து, வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியளித்தது.

* சீனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்பினீர்களா?

பதக்கம் வெல்லும் ஆசை, எனக்கு மட்டுமல்ல எல்லா வீராங்கனைகளுக்கும் உண்டு. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள், எங்களுக்கு மிகவும் குறைவாகவே இருந்தன. ஏனெனில், தமிழக அணி 'நாக்-அவுட்' சுற்றுகளுக்கு முன்னேறியதும், அனுபவமிக்க சீனியர் வீராங்கனைகள் அங்கம் வகிக்கும் சில அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், பதக்கம் வெல்லும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருந்தன. இருப்பினும், தமிழக அணியின் பயிற்சியாளர் ஹுசைனி வழிகாட்டுதலோடு, பதற்றமில்லாமல் போட்டிகளை எதிர்கொண்டோம். வெற்றி கிடைத்தது.

* ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராவது பற்றி கூறுங்கள்?

மற்ற நாட்டு வீரர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய வீரர்-வீராங்கனைகள் மிகவும் திறமைசாலிகள். இலக்கை சாதுரியமாக தாக்கும் சக்தி படைத்தவர்கள். இவ்வளவு திறமை இருந்தும், ஒருவித பதற்றத்தினால் முக்கிய தருணங்களில் வெற்றிவாய்ப்பை தவறவிட்டுவிடுகிறோம். அதனால் திறன் வளர்ப்பு பயிற்சிகளோடு, இப்போது மனதை பக்குவப் படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட தொடங்கி இருக்கிறோம். மைண்ட் டிரைனிங், தியானம், தன்னம்பிக்கை தொடர்பான பயிற்சிகள்... இப்படியாக பல வழிகளில், எங்களை நாங்களே வலுப்படுத்தி வருகிறோம். இவை எல்லாமே, ஒரு இலக்கை மட்டுமே குறிவைக்கிறது. அது, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது.

* தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி மேற்கொள்கிறீர்கள்?

10 மணிநேரம் முதல் 14 மணிநேரம் வரையிலும் கூட சில நாட்கள் பயிற்சி எடுக்கிறேன்.

* பயிற்சியாளர்களின் ஊக்குவிப்பு எப்படி இருக்கிறது?

நான் ஆரம்பத்தில் இருந்தே, தமிழக வில்வித்தை செயலாளர் மற்றும் பயிற்சியாளர் ஹூசைனியிடம் பயிற்சி பெறுகிறேன். அவர்தான் என்னை வில்வித்தை வீராங்கனையாக மாற்றியிருக்கிறார். இப்போது ஒலிம்பிக் வெற்றியாளராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது பயிற்சியும், கல்லூரி நிர்வாகத்தின் ஆதரவும் என்னை சிறப்பாக ஊக்குவிக்கிறது.

உங்களுடைய பலம் என்ன?

என்னுடைய உயரம்தான், என்னுடைய மிகப்பெரிய பலம். இந்தியாவிலேயே நான்தான் மிகவும் உயரமான வில்வித்தை வீராங்கனை. 6.1 அடி உயரம் இருப்பதால், நீண்ட கைகளை கொண்டு அம்புகளை அதீத இழுவிசையுடன் எய்த முடிகிறது. மேலும், வில்வித்தை வீரர்கள் பயன்படுத்தக்கூடிய அதிக எடையுடைய வில்-அம்புகளையே வீராங்கனையான நானும் பயன்படுத்துகிறேன்.


Next Story