கடன் செயலி பயன்படுத்துகிறீர்களா..? -உஷார்


கடன் செயலி பயன்படுத்துகிறீர்களா..? -உஷார்
x

கடன் செயலி மூலம் நடக்கும் மோசடி என்பது புதிதல்ல. இது இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. ஆனாலும் மக்கள் இன்றும் கடன் செயலியினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

கடன் செயலி மூலம் மோசடி செய்பவர்கள் பயனர்களை எவ்வாறு குறிவைக்கிறார்கள்?

கடன் செயலிகளை உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்த பின்னர், அந்த செயலியில், நேரடியாக நாம் வங்கியில் கடன் பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் கேட்பார்களோ, அதை எல்லாம் இந்த கடன் செயலிகளிலும் கேட்பார்கள். உதாரணத்திற்கு உங்கள் புகைப்படம், கைபேசி எண், முகவரி, ஆதார், பான், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற விவரங்களைக் கேட்பார்கள்.

அதை எல்லாம் நாம் அவர்களுக்குக் கொடுத்த பிறகே, அவர்கள் நம்மிடம் கடன் செயலியை இயக்குவதற்கான குறுஞ்செய்தி, கைபேசி காண்டாக்ட் மற்றும் கேலரியை அணுக அனுமதிக்குமாறு கேட்பார்கள். அவர்களை அணுக நீங்களும் அனுமதிப்பீர்கள்.

அதன்பிறகே அவர்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள புகைப்படங்கள், மொபைல் காண்டாக்ட் எண்கள், ஆவணங்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அவர்களுடைய சர்வரில் சேகரிப்பார்கள். பின்னர், அவர்கள் குறைந்த வட்டிக்கு நீங்கள் கேட்கும் தொகையை உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவார்கள். நீங்கள் அந்தப் பணத்தைப் பகுதி பகுதியாகச் செலுத்தி, முழுமையாகப் பணம் செலுத்தி முடித்த பின்னரும் அவர்கள் உங்களை அணுகி ஒரு அதிகமான தொகையை சொல்லி உங்களை அனுப்பச் சொல்லுவார்கள்.

நீங்கள் அவர்கள் கேட்கும் தொகையைச் செலுத்தா விட்டால் அவர்கள் உங் களிடம் இருந்து திருடப்பட்ட புகைப்படங்களை மார்ப்பிங் செய்து உங்கள் காண்டக்ட்டில் உள்ள நபர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி உங்களை அச்சுறுத்தி, உங்களிடம் அதிக பணத்தைப் பறித்துவிடுவார்கள்.

எனவே எச்சரிக்கையாக இருங்கள். எந்தவித கடன் செயலிகளையும் பதிவிறக்கம் செய்யாதீர்கள். குறிப்பாக சீன கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யாதீர்கள், அதனைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் இதுபோன்ற சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும்.

-அ.ஷகில் அக்தர் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி மாணவர், திருச்சி.


Next Story