கிரிப்டோகரன்சி - எதிர்காலத்தின் பணம்


கிரிப்டோகரன்சி -  எதிர்காலத்தின் பணம்
x

அரசாங்கம் மற்றும் வங்கிகளின் தலையீடு இல்லாத பணமே கிரிப்டோகரன்சிகள் ஆகும். இவை பரவலாக்கபட்ட பணம் எனப்படுகிறது.

நாம் கடைக்கு சென்று ஒரு பொருள் வாங்குகிறோம் எனில் அப்பொருளுக்குரிய பணத்தை கொடுத்து தேவையான பொருளை வாங்குகின்றோம். இங்கு பொருளை வாங்குபவரும் கொடுப்பவரும் இந்த பொருளின் மதிப்பு இவ்வளவு பணம் என ஒப்புக்கொண்டு பரிமாற்றம் செய்கிறார்கள். ஆனால் இத்தகைய பரிமாற்றங்கள் இவ்வாறே இருந்ததில்லை.

பணம் எனும் ஒரு கோட்பாடு உருவாகுவதற்கு முன்னர் மக்கள் தங்கள் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்தனர்?

ஒருவர் தன்னிடம் உபரியாக உள்ள பொருளை கொடுத்து அதே மதிப்பிற்கு நிகரான தனக்கு தேவையான பொருளை வாங்கி கொண்டார். இதனை 'பண்டமாற்று முறை' என்கிறோம்.

பண்டைய தமிழகத்தில் நெல், உப்பு, தேன் உட்பட பல பொருட்களை பண்டமாற்று முறையில் வணிகம் செய்துள்ளனர். மேலும் ரோம எகிப்து தேசங்களுடன் மிளகு, சந்தனம் முதலியவற்றை தங்கம் மற்றும் மரகத கற்களுக்கு பண்டமாற்று செய்துள்ளனர். இவற்றில் தொடங்கி நாம் வெகு தூரம் வந்துவிட்டோம்.

இன்று பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பிற்கான அளவுகோலாக பணத்தை கொண்டுள்ளோம். இவை அரசாங்கம் அளிக்கும் உத்திரவாதத்தை கொண்டு செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக இந்திய ரூபாயின் மதிப்பிற்கு நம் அரசாங்கம் உத்திரவாதம் அளிக்கிறது. மேலும் இன்று நாம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் வங்கிகளை சார்ந்தே உள்ளன. இவ்வாறு அரசு அல்லது பிற நிறுவனங்களை மையமாக கொண்டு இத்தகைய பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன.

இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதே 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் பணம். முன்பு பார்த்த அதே கடைக்காரரிடம் பணத்திற்கு பதிலாக ஒரு துண்டு காகிதத்தை கொடுத்தால் ஏற்றுக்கொள்வாரா? அதுவே அந்த காகிதத்தை கொண்டு அவரால் வேறு செலவுகள் செய்ய முடியுமெனில் வாங்கிக்கொள்வார் தானே? ஒரு பொருளின் மதிப்பு சமூகத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதே ஆகும். இவ்வகையான அரசாங்கம் மற்றும் வங்கிகளின் தலையீடு இல்லாத பணமே கிரிப்டோகரன்சிகள் ஆகும். இவை பரவலாக்கபட்ட பணம் எனப்படுகிறது. இத்தகைய பரிவர்த்தனைகள் பணம் செலுத்துபவரையும் பெறுபவரையுமே மையமாக கொண்டு செயல்படுகிறது.

பிளாக்செயின் எனப்படும் கட்டச்சங்கிலி என்பது ஒரு பொது கணக்குப்புத்தகம் போன்றதாகும். இத்தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டே கிரிப்டோகரன்சிகள் செயல்படுகின்றன. ஒருவர் மற்றொருவருக்கு பணம் அனுப்புகிறார் எனில் இந்த பரிவர்த்தனை அப்பதிவேட்டில் குறிக்கப்பட்டு, பணத்தை பெறுபவர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு இவ்வலைப்பின்னலில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் அதில் இணைந்துள்ள கணினிகளால் உறுதிசெய்யப்பட்டு தொடர் சங்கிலி போன்ற அமைப்பால் இணைக்கப்படுகிறது. இந்த பிளாக்செயினானது எந்த ஒரு இடத்தையும் மையமாக கொண்டு சேமிக்கப்படாமல் வலைப்பின்னலுக்கு பொதுவாக இருப்பதால் இது அதிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனினும், இவற்றின் விலையின் நிலையற்ற தன்மை மற்றும் இதில் சட்டவிரோதமான பரிவர்த்தனைகளை கண்காணிக்க இயலாதது போன்ற காரணங்களால் இவை நடைமுறையில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தற்போது எல் சால்வடோர் போன்ற சில நாடுகள் கிரிப்டோகரன்சிகளை அங்கீகரித்துள்ளன. இந்திய அரசாங்கமும் ரிசர்வ் வங்கி மூலம் இ-ரூபாய் எனப்படும் கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இன்றைய நிலையில் கிரிப்டோ முதலீட்டு வகையாகவே பார்க்கப்படுகிறது. இவை பெரும்பாலும் அன்றாட பரிவர்த்தனைகளுக்காக ஏற்றுகொள்ளப்படுவதில்லை என்றாலும் வரும் காலத்தில் இவை மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரவே கூடும்.


Next Story