வித்தியாசமான கிரிக்கெட் ரசிகர்..!


வித்தியாசமான கிரிக்கெட் ரசிகர்..!
x

உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூரம், வேகமாகப் பரவுகிறது. ‘உலகக்கோப்பை கிரிக்கெட்’ என்றாலே, கொண்டாடி தீர்க்கும் இந்திய ரசிகர்களுக்கு, இம்முறை டபுள் கொண்டாட்டம். ஏனெனில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இம்முறை இந்திய மண்ணில் நடக்கிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உட்பட, 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கும் நிலையில்... வீரர்களை காண, இவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள பெரிய ரசிகர் பட்டாளமே, நட்சத்திர ஓட்டல்களில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த, முகமது ஜமீலுக்கு இந்த கவலை இல்லை. ஏனெனில், இவர் உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர்களுடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

ஆம்...! வி.வி.ரிச்சர்ட்ஸ், கபில்தேவ் காலத்தில் தொடங்கி, இப்போதைய கே.எல்.ராகுல் வரை... அனைவருடனும், புகைப்படம் எடுத்து அப்டேட்டாக இருக்கிறார்.




கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி, கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டினோ, டென்னிஸ் நட்சத்திரங்களான மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ், சதுரங்க வீரர்-வீராங்கனைகள், ஸ்கூவாஷ் விளையாட்டு வீரர்கள்... என இவரது போட்டோ ஆல்பத்தை புரட்ட புரட்ட, நட்சத்திர புகைப்படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

''விளையாட்டு வீரர்களுடன், புகைப்படம் எடுக்கும் பழக்கம், மிகவும் விளையாட்டாக வந்ததுதான். 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்ற தருணம், இந்தியாவில் எல்லா பக்கமும், கிரிக்கெட் மட்டையும், கிரிக்கெட் உபகரணங்களும் விற்பனையில் சக்கைப்போடு போட்டன. அதனால் பொம்மைகளுக்கு மாற்றாக, விளையாட்டு உபகரணங்களை விற்க ஆரம்பித்தேன். அடுத்த 5 வருடங்கள், கிரிக்கெட் ராஜ்ஜியம்தான் இந்தியாவில் நடந்தது. நல்ல லாபம். இந்த நிலையில், ஒருமுறை சென்னை சேப்பாக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவே, நண்பர் மூலமாக விளையாட்டு வீரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி நான் முதன்முதலில் சந்தித்து, புகைப்படம் எடுத்துக்கொண்ட விளையாட்டு வீரர், கவாஸ்கர். அவர் அப்போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டோவை, பிரிண்ட் எடுத்து, என்னுடைய கடையில் ஒட்டினேன். அதைப் பார்க்கவே, தனி கூட்டம் வந்தது. வியாபாரமும் ஜோராக நடந்தது'' என்றவர், இதையே வழக்கமாக்கி கொண்டார். சென்னையை தாண்டி, இந்தியாவில் எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும், அங்கு சென்று விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக்கினார்.

''சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், போட்டியில் பங்கேற்பதற்காக தங்கியிருக்கும் சென்னை நட்சத்திர ஓட்டல்களிலும்தான் நிறைய கிரிக்கெட் வீரர்களை சந்தித்திருக்கிறேன். அதேசமயம், சென்னைக்கு அருகில் வேறு எங்கு சர்வதேச போட்டிகள் நடந்தாலும் கிளம்பிவிடுவேன். இப்படியாக, வீரர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காகவே இலங்கை, இங்கிலாந்து, துபாய்... ஆகிய நாடுகள் வரை பறந்திருக்கிறேன். கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லா கிரிக்கெட் மைதானங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன்'' என்றவர், 1983-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை மொத்தம் 750 கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். இதில் வி.வி.ரிச்சர்ட்ஸ், சச்சின், கங்குலி, மெக்ராந்த் உட்பட கிரிக்கெட் ஜாம்பவான்களும் உண்டு. மொத்தமாக, 64 கேப்டன்களுடன் இவர் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

''எல்லா கிரிக்கெட் வீரர்களிடமும் உரிமையாக, புகைப்படம் எடுக்க அனுமதி கேட்பேன். அவர்களும், போஸ் கொடுப்பார்கள். இந்தப் பழக்கம், தொடரவே, சச்சின், கங்குலி ஆகியோருக்கு நான் மிகவும் பரீட்சயமாகிவிட்டேன். இவர்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம், பெயர் சொல்லி அழைத்து, என்னுடன் புகைப்படம் எடுத்து கொள்வார்கள். இலங்கை வீரர், ரணதுங்கா ஒருமுறை நியூசிலாந்து வீரர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து, அங்கிருந்த எல்லா கிரிக்கெட் வீரர்களிடமும் அறிமுகப்படுத்தினார். அதிரடி ஆட்டக்காரரான சேவாக், எனக்கு உணவு விருந்து கொடுத்திருக்கிறார். பெரும்பாலும், இந்திய ஜாம்பவான்களுக்கு 'ஜமீல் பாய்' என்ற பெயர், ரொம்பவே பரீட்சயம்'' என்றவர், சந்திப்பதற்கு அதிகம் கெடுபிடியான கிரிக்கெட் வீரர்களையும் சந்தித்த கதையை கூறினார்.

''வி.வி.ரிச்சர்ட்ஸ், அவ்வளவு சீக்கிரம் யாரையும் அருகில் அனுமதிக்கமாட்டார். பிரைன் லாராவும் அந்த ரகம்தான். இருப்பினும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நான் பெரும்பாலும், புகைப்பட ஆல்பத்தை எடுத்து செல்வேன். அது, எனக்கான விசிட்டிங் கார்டாக மாறிவிடும். இப்படிதான், நிறைய கிரிக்கெட் வீரர்கள், என்னுடைய ஆல்பத்தை வியந்து பார்த்து, கடைசியில் என்னுடன் புகைப்படம் எடுத்து கொள்வார்கள்.

இம்ரான்கான், ஷோயப் அக்தர், கிரண் மோர், ரிச்சட் பிளாய்ட், அலைஸ்டர் கூக், ஷேன் பொல்லாக், இயான் போதம், பிராட்மேன், கார்பீல்ட் சோபர், வாசிம் அக்ரம், முத்தையா முரளிதரன், ஆடம் கில்கிறிஸ்ட், கிறிஸ் கெய்ல், மெக்ராந்த், ஸ்டீவ் வாக், ஆலன் டொனால்ட், கபில் தேவ்... என பழைய ஜாம்பவான்கள் பட்டியல் நீளும். அதேசமயம், இந்நாள் விளையாட்டு வீரர்களுடனும் புகைப்படம் எடுத்திருக்கிறேன். யுவராஜ் சிங், கைப், மகேந்திர சிங் டோனி, பும்ரா, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி... என பலருடன் புகைப்படம் எடுத்திருக்கிறேன். இதில் டோனியுடனான போட்டோ ரொம்பவே ஸ்பெஷல். சென்னையில் போட்டி முடிந்தவுடன், அவர் பந்துவீச்சாளர் ஸ்ரீஷாந்துடன் பைக்கில் ஓட்டல் திரும்பிக்கொண்டிருந்தார். அவரை நான் பின் தொடர்ந்து சென்று, மவுண்ட் ரோட் சிக்னலில் புகைப்படம் எடுத்தேன். அதேபோல, முத்தையா முரளிதரனுடனான நட்பும் ரொம்ப சுவாரசியமானது. அவரை என்னுடைய கடைக்கு அழைத்தபோது, ''நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை சார்'' என்று மறுத்துவிட்டார். இப்படியாக, நிறைய நினைவுகள், எனக்குள் இருக்கிறது'' என்றவர், இப்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகளை மைதானத்தில் காண ஆவலாக இருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால், இந்தமுறையும், 'பேன் போட்டோ' மூமண்ட் தொடரும் என புன்னகைத்தபடியே முடித்தார்.

இவர், கிரிக்கெட் வீரர்களுடன் மட்டுமின்றி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உலகக்கோப்பைகளுடனும், ஐ.பி.எல்.கோப்பைகளுடனும் புகைப்படம் எடுக்கத் தவறுவதில்லை.

இம்ரான்கான், ஷோயப் அக்தர், கிரண் மோர், ரிச்சட் பிளாய்ட், அலைஸ்டர் கூக், ஷேன் பொல்லாக், இயான் போதம், பிராட்மேன், கார்பீல்ட் சோபர், வாசிம் அக்ரம், முத்தையா முரளிதரன், ஆடம் கில்கிறிஸ்ட், கிறிஸ் கெய்ல், மெக்ராந்த், ஸ்டீவ் வாக், ஆலன் டொனால்ட், கபில் தேவ்... என பழைய ஜாம்பவான்கள் பட்டியல் நீளும். அதேசமயம், இந்நாள் விளையாட்டு வீரர்களுடனும் புகைப்படம் எடுத்திருக்கிறேன். யுவராஜ் சிங், கைப், மகேந்திர சிங் டோனி, பும்ரா, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி... என பலருடன் புகைப்படம் எடுத்திருக்கிறேன்.


Next Story