கவனச்சிதறலை எப்படி கையாள்வது..?


கவனச்சிதறலை எப்படி கையாள்வது..?
x

கவனம் என்பது நம் வாழ்க்கைக்கு மிக தேவையான ஒன்று என்பதை உணர்ந்து, கவனச்சிதறல் இல்லாமல் காரியத்தை செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.

கவனச்சிதறல், மனதுக்கு கவலை தரும் விஷயம். செய்து கொண்டிருக்கும் செயல்களிலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். எந்த வேலையாக இருந்தாலும் அதனை செய்வதற்கு முன்பும், செய்து கொண்டிருக்கும் போதும் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டியது முக்கியமானது. அப்படி முழு கவனத்தையும் செலுத்தி செய்து முடிக்கும் காரியம்தான் மகிழ்ச்சியான பலனை தரும். அப்படி இல்லாமல் இஷ்டப்படி மனம் நினைப்பதையெல்லாம் செய்வதற்கு முன்வந்தால் கவனச்சிதறல் ஏற்பட்டுவிடும். நம்மை நம்பி காரியத்தை ஒப்படைத்தவர்களின் கோபப்பார்வைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

நாம் என்ன செய்கிறோம், செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் எப்போதும் கவனம் தேவை. அந்த கவனம் ஒரே நாளில் வந்துவிடாது. எந்தவொரு சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தி முழு கவனத்தையும் குவிப்பதற்கு படிப்படியாகப் பயிற்சி செய்ய வேண்டும்.

கார் ஓட்ட ஆரம்பிக்கும்போது முழு கவனமும் அதன் மீது பதிய வேண்டும். கவனமாக கார் ஓட்ட வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது கண்கள் வேறு திசையை நோக்கினால் கவனம் முழுவதும் அங்கு திரும்பிவிடும். அத்தகைய கவனச் சிதறல் விபத்துக்கு வழிவகுத்துவிடும். கண நேரம்தான் கவனம் திரும்பி இருக்கும். அதுவே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். சிலர் கார் ஓட்டுவதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்வார்கள். கவனத்தை சிதறவிட்டு அசட்டையாக செயல்படுவார்கள். வாகனம் ஓட்டுவதில் பல வருடம் அனுபவம் பெற்றவர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்வார்கள். இருப்பினும் கவனம் சிதறும்போது கண் இமைக்கும் நேரத்தில் ஆபத்தை நாமே தேடிச் சென்ற கதையாகிவிடும். பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் பதறியபடியே பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

நீங்கள் திறமைசாலியாக இருக்கலாம். ஆனால் கவனச்சிதறல் உங்கள் திறமையை கேள்விக்குறியாக்கி விடும். உங்களிடம் இருக்கும் திறமைக்கு முழுமையான பலன் கிடைப்பதற்கு மனம் ஒத்துழைக்க வேண்டும்.

அதிகம் பேசுபவர்களும் கவனச்சிதறலுக்கு ஆளாகலாம். முக்கியமான வேலையில் ஈடுபடும்போது தேவையற்ற பேச்சுக்களைக் குறைத்துக்கொள்வது நல்லது. கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு, உடல் சோர்வு இப்படி பல காரணங்கள் கவனச் சிதறல் ஏற்பட வழி வகுக்கும். மனித வாழ்க்கையில் இதெல்லாம் இயல்பான உணர்வுகள் தான். ஆனால் நாம் செய்யும் செயல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நமக்கு முதலில் புரிய வேண்டும். இது ஒரு பயிற்சி. நம் மூளைக்கு அன்றாடம் இந்த பயிற்சியை கொடுக்க வேண்டும்.

ஒரு வேலையை ஆரம்பிக்கும் போது முழு கவனத்தையும் அதன் மீது செலுத்தினால் மூளையும் ஒத்துழைக்கும். சிறுவயதில் ஏற்படும் விபரீதமான நிகழ்வுகள் கூட கவனச்சிதறலுக்கு காரணமாக இருக்கலாம் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. சிறு வயதில் சந்தித்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மனதை வெகுவாக பாதித்து விட்டால் அந்த நினைவுகள் திரும்பத்திரும்ப வந்து கொண்டே இருக்கும். அப்போது மனம் தன்னை மறந்து விடும். பழைய நினைவுகளில் மூழ்கி விடும். இதுபோன்ற கவனச் சிதறல்களை சரி செய்வது கொஞ்சம் சிரமம். ஒரே மனிதன் இருவேறு நினைவுகளில் வாழ்வது விபரீதமானது. இது போன்ற மனநிலையை மனச்சிதைவு என்று குறிப்பிடுகிறார்கள். அதற்கு மனோரீதியான மருத்துவம் தான் சரியான தீர்வாக அமையும்.

மனப்போராட்டங்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதீத கற்பனைகள், கவனத்தை சிதறடித்துவிடும். முழுக் கவனத்தோடு செய்யும் காரியங்கள் பாதுகாப்பானது. மூளையும் செய்யும் செயல்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் அந்த செயல் வெற்றி பெறும். ஆபத்துகள் தவிர்க்கப்படும். கவனம் என்பது நம் வாழ்க்கைக்கு மிக தேவையான ஒன்று என்பதை உணர்ந்து, கவனச்சிதறல் இல்லாமல் காரியத்தை செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக மூளைக்குக் கொடுத்து கவனத்தை வசப்படுத்திக் கொள்ள வேண்டும். கவனத்தோடு செய்யும் காரியம் தான் அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும்.

கவனம் என்பது நம் அறிவின் ஆற்றல். இதனை தியானத்தின் மூலம் பெறலாம். கண்களை மூடி அமைதியாக தியானம் செய்வதற்கு பழகுவதன் மூலம் கவனத்தை ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கலாம். கண்கள் திறந்திருந்தாலும் அதேபோன்ற கவன ஒருங்கிணைப்புக்கு மனம் பழக்கப்பட்டுவிடும். தாமாகவே நம்மை சமநிலைக்கு கொண்டு வந்துவிடும்.


Next Story