ஜே.இ.இ.தேர்வுக்கு தயாராவது எப்படி?


ஜே.இ.இ.தேர்வுக்கு தயாராவது எப்படி?
x

ஒரு ஆண்டிற்கு, இரு முறை நடத்தப்பட்ட ஜே.இ.இ.தேர்வு, இப்போது 4 முறை நடத்தப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள், நான்கு முறையும் எழுதலாம்.

இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு அவசியமாகிறது. இதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, மிக குறைந்த கட்டணத்தில் உலகத்தரத்திலான கல்வி பெறலாம். கூடவே, பொறியியல் துறையின் தலைசிறந்த நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் பணியாற்றலாம். இத்தகைய சிறப்புமிக்க, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பற்றியும், அதில் வெற்றி பெறுவது குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். படித்து பயனடையுங்கள்.

* தகுதி

பிளஸ்-2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடம் பயின்றவர்கள் யார் வேண்டுமானாலும், இந்த தேர்வினை எழுதலாம். குறிப்பாக சி.பி.எஸ்.இ., அரசுப்பள்ளி, மெட்ரிகுலேஷன்... என எல்லா விதமான பாடத்திட்டங்களில் பயின்றவர்களும், இந்த தேர்வினை எழுதலாம்.

* தேர்வு

ஒரு ஆண்டிற்கு, இரு முறை நடத்தப்பட்ட ஜே.இ.இ.தேர்வு, இப்போது 4 முறை நடத்தப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள், நான்கு முறையும் எழுதலாம். நான்கு தேர்விலும், அதிகபட்ச மதிப்பெண் பெறும் தேர்வினை தகுதியாக எடுத்து கொள்வார்கள்.

* கல்வி நிறுவனங்கள்

மெட்ராஸ் ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. போன்று இந்தியா முழுக்க இருக்கும் 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில, இந்த தேர்வு வழிவகுக்கும்.

* படிப்புகள்

60-க்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர இந்தத் தேர்வு அரிய வாய்ப்பு அளிக்கிறது. பி.டெக். பி.பார்ம், பி.டிசைன், பி.ஆர்க்., போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளில் சேரலாம். எம்.பார்ம், எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற இரட்டை பட்டப்படிப்புகளிலும் சேர்ந்து படிக்கலாம். ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளிலும் சேரலாம்.

* பிளஸ்-2 மாணவர்கள்

ஆம்...! பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள்கூட, எதிர்காலத்தை கட்டமைக்கும் நோக்கில் இத்தேர்வை எழுதலாம். அதேபோல 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இத்தேர்வை எழுதலாம். அதாவது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் ஜே.இ.இ. தேர்வை எழுத முடியும்.

* தேர்வு நடைமுறை

இரண்டு கட்டமாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும். முதல் தேர்வு ஜே.இ.இ. மெயின் (JEE Main) எனப்படுகிறது. இரண்டாம் தேர்வு ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் (JEE Advanced) என அழைக்கப்படுகிறது. இரண்டும் இரு தாள்களைக் கொண்டது. முதலில் ஜே.இ.இ.மெயின் தேர்வே நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம். ஆனால் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வையும் முடித்திருக்க வேண்டும்.

அதாவது... இந்தியாவின் ஒட்டுமொத்த பிளஸ்-2 மாணவர்களில் இருந்து சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்க ஜே.இ.இ. மெயின் தேர்வு உதவுகிறது என்றால், இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மிக சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி. வளாகங்களுக்குள் அனுப்ப ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் வழிகாட்டும்.

* வினாத்தாள் தயாரிப்பு

300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திட்டத்தில் இருந்து, தலா 30 கேள்விகள் கேட்கப்படும். அதில் முதல் 20 கேள்விகள், கொள்குறி வினாக்களாக இருக்கும். கடைசி 10 வினாக்கள் கோடிட்ட இடங்களை நிரப்புவதாக இருக்கும். கேட்கப்படும் 90 கேள்விகளில், 75 கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்.

* தயாராகும் முறை

சி.பி.எஸ்.சி. மற்றும் மாநில அரசுப்பள்ளிகளின் பாடத்திட்ட அடிப்படையிலேயே கேள்வித்தாள் தயாரிக்கப்படும். கேள்வி-பதில்களை மனப்பாடம் செய்வது, இதுபோன்ற நுழைவு தேர்வுகளில் பலன் தராது. அதேபோல ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தயார் செய்தால் போதாது. எந்த விதமான கேள்விக்கும் சுயமாக பதில் அளிக்கும் வகையில் பாடத்தை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.

கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப் பழகுவது அவசியம். பயிற்சி எடுத்துக்கொள்வதற்கு பல மாதிரித் தேர்வுகளை எழுதலாம். இதற்காக சிலர் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்பை மேற்கொள்வார்கள். இது போன்ற பயிற்சி மையங்களில் ஒரு நாளில் இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

* கடினமானதா?

சுலபமான ஒன்றுதான். ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில், கடினமான தேர்வு என்ற தவறான புரிதல் இருக்கிறது. அதனால்தான், ஜே.இ.இ. தேர்வு பற்றி தெரிந்தவர்கள்கூட, அதில் பங்கேற்பதில்லை. இன்னும் சில மாணவர்களுக்கு, இப்படி ஒரு தேர்வு இருப்பதே தெரிவதில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் ஏராளமான மத்திய கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என பிரத்யேக இட ஒதுக்கீடும் இருக்கிறது. இதனால் வருங்கால மாணவர்கள் ஜே.இ.இ.தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில், கடினமான தேர்வு என்ற தவறான புரிதல் இருக்கிறது. அதனால்தான், ஜே.இ.இ. தேர்வு பற்றி தெரிந்தவர்கள்கூட, அதில் பங்கேற்பதில்லை. இன்னும் சில மாணவர்களுக்கு, இப்படி ஒரு தேர்வு இருப்பதே தெரிவதில்லை.


Next Story