குறைந்த சூரிய ஒளியிலும் தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் பம்புகள்..! இளைஞரின் கண்டுபிடிப்பு


குறைந்த சூரிய ஒளியிலும் தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் பம்புகள்..! இளைஞரின் கண்டுபிடிப்பு
x

மழைக்காலங்களிலும், வானம் மேகமூட்டமாக இருக்கும் நாட்களிலும் சோலார் பேனல்கள் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யாது. அப்படி உற்பத்தியாகும் குறைந்த மின்சக்தியில் மோட்டார்கள் இயங்காது என்பார்கள். ஆனால், என்னுடைய கண்டுபிடிப்பு, மிக குறைந்த சூரிய சக்தியிலும் இயங்கக்கூடியது.

மிக குறைவான சோலார் பேனல்களை பயன்படுத்தி, தண்ணீர் இறைக்கும் மோட்டார் பம்புகளை வடிவமைத்து அசத்தியிருக்கிறார், ஒரு இளைஞர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த முத்துராஜாவின் அசத்தலான கண்டுபிடிப்புதான் இது. மின்சார செலவின்றி, சூரிய சக்தியில் தண்ணீர் இறைக்கும் இந்த கண்டுபிடிப்பு குறித்து, முத்துராஜாவுடனான சிறுநேர்காணல்...

* எப்படி உருவானது இந்த யோசனை?

பிரச்சினைகள்தான், கண்டுபிடிப்புகளுக்கான பிறப்பிடம் என்பார்கள். அதேபோன்றுதான், நான் சிறுவயதில் இருந்தே எதிர்கொண்ட, கேள்விப்பட்ட விஷயத்திற்கு தீர்வு காணும் முயற்சியாகவே, இதை முயன்று பார்த்தேன். நான் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவன். அங்கு விவசாயம் பிரதான தொழில். நிறைய வயல்வெளிகளும், தோட்டங்களும் இருக்கும். ஆனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என்பது, எங்கள் பகுதி மக்களுக்கு பெரும் சவாலான விஷயமாகவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலான தோட்டங்களில் மின் இணைப்புகள் இருக்காது. அப்படிப்பட்ட தோட்டங்களில், டீசல் மோட்டார் பம்புகளை வைத்து கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து, வரப்புகளின் வழியாக தண்ணீர் பாய்ச்சுவார்கள். ஒருசிலருக்கு டீசலில் இயங்கக்கூடிய ஜெனரேட்டர்களை வாங்கும் நிர்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. நாங்களும், அப்படியொரு சூழலுக்கு தள்ளப்பட்டோம். அதற்கான தீர்வு காணும் முயற்சியில்தான், 'சோலார் வாட்டர் பம்புகள்' பற்றிய சிந்தனை உருவானது.

* இதற்கான திட்டமிடல், தொடங்கியது எப்போது?

நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவே, ஐ.டி.ஐ. படித்தேன். தொழிற்படிப்பின்போதும், சோலார் பம்பு உருவாக்கம் மற்றும் தண்ணீர் தொட்டியின் அளவை கண்காணிக்கும் சென்சார் போன்றவற்றையே, புராஜெக்ட்டாக முன்னெடுத்தேன். அப்படி, 2011-ம் ஆண்டு முதலே, இந்த சோலார் வாட்டர் பம்பிற்கான திட்டமிடுதல் தொடங்கிவிட்டது.

* சோலார் பேனல்களில் இயங்கும் வாட்டர் பம்புகள், நிறைய இருக்கின்றனவே. அப்படி இருந்தும் அதில் நீங்கள் ஆர்வம் காட்டியது ஏன்?

உண்மையாகவே, சோலார் பேனல்களில் இயங்கும் வாட்டர் பம்புகள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும், செலவு மிகுந்தவை. அதை அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் நிறைய செலவுகள் ஆகும். அதனால்தான், நான் மிக குறைந்த சோலார் பேனல்களை பயன்படுத்தி, அதிக தண்ணீர் இறைக்கும் பம்புகளை இயக்கும் வழிமுறைகளை ஆராய தொடங்கினேன்.

* உங்களுடைய கண்டுபிடிப்பு பற்றி விவரியுங்கள்?

பொதுவாக, தண்ணீர் பம்புகளை இயக்க, குறைந்தது 16 அல்லது 24 சோலார் பேனல்கள் தேவைப்படும். ஆனால், 6 முதல் 8 சோலார் பேனல்களை பயன்படுத்தி, அதில் அதிக சூரிய சக்தியை சேகரித்து அதன் மூலம் தண்ணீர் பம்புகளை இயங்க வைப்பதுதான், என்னுடைய கண்டுபிடிப்பு.

* எப்படி சாத்தியமானது?

ஆரம்பத்தில் நிறைய சவால்களை எதிர்கொண்டேன். சோலார் பேனல்களை கையாள்வதிலும், அதை எனக்கு ஏற்ப மாற்றி மேம்படுத்துவதிலும் நிறைய சிக்கல்கள் இருந்தன. அதை எல்லாம் சோலார் மற்றும் மோட்டார் பம்பு நிறுவனங்களுடன் கலந்து பேசி சிறுசிறு மாற்றங்களை செய்து என்னுடைய கனவு திட்டத்திற்கு உயிர் கொடுத்தேன்.

* சிறப்பாக இயங்குகிறதா?

ஆம்...! எங்களுடைய தோட்டத்தில் இதை முயன்று பார்த்தோம். சிறப்பாகவே செயல்பட்டது. அதைத்தொடர்ந்து, மின் இணைப்பு இல்லாமல், டீசல் மோட்டார்களில் தண்ணீர் இறைக்கும் தோட்டங்களுக்கும் இந்த சோலார் பம்புகளை அமைத்து கொடுத்திருக்கிறேன். அவர்களும், இப்போது சூரிய சக்தி மூலமாக, தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். தமிழகம் முழுக்க இதை முயற்சித்து வருகிறோம்.

* எவ்வளவு செலவாகும்?

இது ஒருமுறை மட்டுமே செய்யக்கூடிய முதலீடு. ஒரு ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, சோலார் பேனல் பம்புகளை கட்டமைப்பதாக இருந்தால் அதற்கு கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் செலவாகும். இதில் சோலார் பேனல்கள், தண்ணீர் இறைக்கும் மோட்டார், பேனல் கட்டமைப்புகள், இடிதாங்கி, எர்த் இணைப்பு வேலைகள்... என எல்லாமே அடங்கிவிடும். மேலும் ஒருமுறை, நீங்கள் முதலீடு செய்துவிட்டால், அடுத்த 15 முதல் 20 வருடங்களுக்கு மின்சார கட்டணம், டீசல் செலவு, மோட்டாரை பழுதுபார்க்கும் செலவு... என எதுவுமே இருக்காது. இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தியே, அடுத்த 20 வருடங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிவிடலாம்.

* மழை காலங்களிலும் இயங்குமா?

மழைக்காலங்களிலும், வானம் மேகமூட்டமாக இருக்கும் நாட்களிலும் சோலார் பேனல்கள் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யாது. அப்படி உற்பத்தியாகும் குறைந்த மின்சக்தியில் மோட்டார்கள் இயங்காது என்பார்கள். ஆனால், என்னுடைய கண்டுபிடிப்பு, மிக குறைந்த சூரிய சக்தியிலும் இயங்கக்கூடியது. மழை பொழிவு இருந்தால் மட்டுமே, மோட்டார் பம்புகள் இயங்காது. மற்றபடி வானம் மேகமூட்டமாக இருக்கும் காலங்களிலும், கிடைக்கும் குறைந்த சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்து, இயங்கக்கூடிய வகையில் இதனை வடிவமைத்திருக்கிறேன்.

* வேறு ஆராய்ச்சிகளிலும் ஆர்வம் காட்டுகிறீர்களா?

ஆம்..! விவசாய தோட்டங்களுக்கான சோலார் மின்வேலி மற்றும் மின்சாரம் இல்லாத தோட்டங்களை ஒளியூட்டக்கூடிய சோலார் விளக்குகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். மேலும் பிளைவீல் தொழில்நுட்பத்தில் மின் உற்பத்தி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன்.


Next Story