சுவாரசியமான அனுபவத்தை தரும் 'மல்டி மீடியா' படிப்புகள்..!


சுவாரசியமான அனுபவத்தை தரும் மல்டி மீடியா படிப்புகள்..!
x

மல்டிமீடியா தற்போது ஒவ்வொரு துறையிலும் ஒரு முக்கியமான அங்கமாகவே மாறிவிட்டது.

இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் அனைவரும் மல்டிமீடியாவில் மூழ்கிவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில், நம்மைச் சுற்றி அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றம் பெற்றதிலிருந்தே அறிந்துகொள்ளலாம். உதாரணமாக, ஆன்லைன் செய்திகளை வாசிப்பது தொடங்கி, திரைப்படங்கள், டி.வி., அனிமேஷன் போன்றவற்றை காண்பது, பொருட்களை விளம்பரப்படுத்துவது மற்றும் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவது வரை அனைத்திலும் டிஜிட்டல் கன்டென்ட்டின் பங்களிப்பு உள்ளது, இது மல்டிமீடியாவின் அங்கமாகும். மல்டிமீடியா தற்போது ஒவ்வொரு துறையிலும் ஒரு முக்கியமான அங்கமாகவே மாறிவிட்டது.

* படிப்புகள்

நிறைய சிறப்பம்சங்களும் வேலைவாய்ப்புகளும் கொண்ட மல்டிமீடியா பற்றிய படிப்புகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். கலை, கல்வி, பொழுதுபோக்கு, இதழியல் (ஜர்னலிசம்), பொறியியல், மருத்துவம், உற்பத்தித்தொழில்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்ற பல்வேறு வெற்றிகரமான துறைகளின் பின்னாலும் மல்டிமீடியா இருந்துவருகிறது. மல்டிமீடியா இந்த உலகத்தினை இணைத்து, எந்தவொரு செய்தியையும் அல்லது விஷயத்தையும் எல்லைகள் கடந்து நொடிப்பொழுதில் பயணித்து அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்கிறது.

சாதாரண டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலிருந்து, விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர் உண்மை) வரை மல்டிமீடியா பயன்பாடுகள் மனிதனுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடைப்பட்ட தொடர்பினை எண்ணற்ற வழிகளில் உருவாக்கியுள்ளது. சந்தைப்படுத்துதல், கல்வி, பயிற்சி மற்றும் பல துறைகளின் பார்வையாளர்களின் கவனத்தை பல்வேறு வழிகளில் ஈர்க்கும் வழிகளை மல்டிமீடியா உருவாக்கி நமக்கு உதவி வருகிறது.

மேலும் தொடர்புகொள்வது, விற்பது, ஈர்ப்பது, கற்பிப்பது, மகிழ்விப்பது, புதுமையினை புகுத்துவது, கற்பனையைக் காட்சிப்படுத்துவது, நினைவுகளைப் பதிவிடுவது, கலாசாரத்தினை சித்தரிப்பது மற்றும் தாக்கத்தை உருவாக்குவது, ஒரு பிராண்டை (வியாபார குறியீட்டை) நிறுவுவது, வியாபாரத்தை மேம்படுத்துவது மற்றும் கடினமான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது போன்ற திறன்களில் மல்டிமீடியா தொழில் வல்லுநர்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

* எதிர்காலம்

மல்டிமீடியா தொழில் வல்லுநர்களுக்கான வருவாய் அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளைப் பொறுத்து மிகவும் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை உள்ள நிலையில், அதே துறையில் படிப்படியாக பணி உயர்வு பெறும்போது அவர்களின் வருமானத்திற்கு எல்லையே இல்லை. இவையனைத்தும் ஒரு தனி மனிதனின் திறமையினைச் சார்ந்தே உள்ளது.

இந்தியாவின் பொழுதுபோக்கு மற்றும் விளம்பரத் தொழில்துறைகள் வளர்ந்து, பன்மடங்காகி மேற்கத்திய நாடுகளின் தொழில்துறைகளோடு போட்டியிடும் அளவில் உயர்ந்து உலகளாவிய மாதிரி வடிவமாகியுள்ளது.

அனிமேஷன் மற்றும் வீடியோ கேம்கள் வளர்ச்சியடைந்து உலகளவில் முதன்மையான கலை வடிவங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, புதுமையான மீடியா சாத்தியக்கூறுகளான ஆகுமென்டட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டீஸ் (AR&VR) போன்றவை எல்லாம் முயற்சிக்கப்படுகின்றன.

* வேலைவாய்ப்புகள்

இதில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில், கிராபிக் டிசைனர், கான்செப்ட் டிசைனர், ஆன்லைன் கன்டென்ட் மேனேஜர், வெப் டிசைனர், வி.எப்.எக்ஸ். டிசைனர், கலரிஸ்ட், கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட், அனிமேட்டர், வீடியோ/ஆடியோ எடிட்டர், ஆர்ட் டைரக்டர், கேம் டெஸ்டர், விஷ்வலைஸர், புரொபஷனல் போட்டோகிராபர், புரசன்டேஷன் டிசைனர் மற்றும் யு.ஐ. டிசைனர் போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. மேலும் பன்னாட்டு நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் பணியாற்றும் வாய்ப்புள்ளது.

மல்டிமீடியா படிப்பை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்..?

* மிகவும் தனித்துவமானது.

* சுவாரசியமான பணி அனுபவம் கொண்டது.

* ஏராளமான வேலை வாய்ப்புகள் உண்டு.

* எப்போதும் தேவை உள்ள ஒரு துறை.

* பகுதி நேரமாக (ஃபிரீலான்ஸ்) பணி செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

* கட்டுப்பாடற்ற தொழில்துறை

* சலிப்பு ஏற்படாத புதுமைகள் நிறைந்த துறை

* நடைமுறை வாழ்க்கையோடு இணைந்து மிகுந்த பயனளிக்கும் துறை


Next Story