வேலைவாய்ப்புகள் நிறைந்த பாராமெடிக்கல் படிப்புகள்..!


வேலைவாய்ப்புகள் நிறைந்த பாராமெடிக்கல் படிப்புகள்..!
x

பாரா மெடிக்கல் படிப்புகள் மருத்துவப் படிப்புக்கு இணையானது என்கிறார் கல்வியாளர் காஞ்சனா கஜேந்திரன்.

''எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., வெட்னரி இவற்றின் வரிசையில் முக்கியத்துவம் பெறுகிறது, பாரா மெடிக்கல் படிப்புகள். பலரும் பாரா மெடிக்கலை இரண்டாம் தர படிப்பாக எண்ணுகின்றனர். அது தவறானது. உண்மையில், மருத்துவப் படிப்புக்கு இணையானது இது. இதிலும் சரியான பிரிவுகளையும், மேற்படிப்புகளையும் தேர்வு செய்து படித்தால் 100 சதவீத வேலைவாய்ப்பு நிச்சயம்'' என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், கல்வியாளர் காஞ்சனா கஜேந்திரன்.

சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவரான இவர், ஆசிரியர் பயிற்சியுடன் பல்வேறு முதுகலை படிப்பையும் முடித்திருக்கிறார். பள்ளி மாணவ-மாணவிகளுக்குப் புதுமையான படிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை, பல ஆண்டுகளாக வழங்கி வருகிறார். அதற்காக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், நம்முடன் பாராமெடிக்கல் துறை பற்றியும், அதில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

''பாராமெடிக்கல், எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாற்றாக அமைந்துவிடாது என்றாலும் மருத்துவத்துறையில் இந்தப் படிப்புக்கான பணி வாய்ப்புகளையும், சமூக அந்தஸ்தையும் நாம் மறுக்க முடியாது. மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ். என்று சொல்லப்படும் ஐந்து ஆண்டு படிக்கும் மருத்துவர்களைப் போலவே அறுவை சிகிச்சை பணிகளில் கூட பங்கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு அந்தஸ்து கொண்ட பாடப்பிரிவுகள் பாராமெடிக்கல் துறையில் உள்ளது'' என்றவர், அதுதொடர்பான படிப்புகளைப் பட்டியலிடுகிறார்.

''பாராமெடிக்கல் துறையில், 1 வருட படிப்பு, 2 வருட படிப்பு மற்றும் 3-4 வருட படிப்பு என, மாணவ-மாணவிகளின் விருப்பத்திற்கு ஏற்ப நிறையப் படிப்புகள் இருக்கின்றன. இ.சி.ஜி.டெக்னீஷியன், மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பிசியோதெரபி டெக்னீஷியன், பேஷன்ட் கேர் அசிஸ்டன்ட், பார்மஸி அசிஸ்டன்ட், டயட்டீசியன், டயபெட்டாலஜி, எமர்ஜென்சி பேஷன்ட் கேர் டெக்னீஷியன், லேப் அசிஸ்டன்ட், எக்ஸ்-ரே டெக்னீஷியன், ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன்... என நிறைய 1 வருட டிப்ளமோ படிப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தும் குறுகிய கால டிப்ளமோ படிப்புகள். இவற்றைப் போலவே, பல புதுமையான 2 ஆண்டு கால படிப்புகளும் இருக்கின்றன.

நர்சிங் அசிஸ்டன்ட், ஐ.சி.யூ.டெக்னீஷியன், பேஷன்ட் கேர், பிசியோதெரபி மற்றும் ஆக்டிவிட்டி தெரபி, அல்ட்ரா சோனோகிராபி டெக்னீஷியன், எக்ஸ்-ரே டெக்னாலஜி, எக்ஸ்-ரே மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, கிரிட்டிக்கல் கேர் மேனேஜ்மெண்ட்... என 2 ஆண்டு கால, படிப்புகளும் இருக்கின்றன.

இவை, வழக்கமான நர்சிங் படிப்புகளில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு, நவீன மருத்துவத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் உதவியாளர் படிப்புகளாக திகழ்கின்றன'' என்றவர், பாராமெடிக்கல் துறையில் இருக்கும் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகள் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

''இளங்கலை பட்டப்படிப்புகளில், மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜி, சயின்ஸ் ஆப் ரேடியாலஜி, சயின்ஸ் ஆப் டயாலிசிஸ், சயின்ஸ் ஆப் ஆப்தோமெட்ரி இவற்றுடன் 4 ஆண்டு கால படிப்புகளான பி.பார்ம் மற்றும் பி.பி.டி போன்றவையும் இருக்கின்றன.

இவையின்றி, மொழி குறைபாடு சிகிச்சைக்கான ஆடியாலஜி அண்டு ஸ்பீச் லாங்வேஜ் பேத்தாலஜி, இதயம் தொடர்பான கார்டியாக் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் அண்டு அனஸ்தீஸியா டெக்னாலஜி, மூட்டுத் தொடர்பான புரொஸ்தெட்டிக்ஸ் அண்டு ஆர்த்தோடிக்ஸ், கிளினிக்கல் நியூட்ரிஷியன் என மருத்துவம் சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் உள்ளன. இதே பிரிவுகளில் முதுகலை படிப்புகளும் இருக்கின்றன'' என்றதோடு, கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு பாராமெடிக்கல் டிப்ளமோ படிப்புகள் சிறப்பான வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் என்கிறார்.

''தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் மருத்துவமனைகள், ரத்த பரிசோதனை மையங்கள், எக்ஸ்ரே-ஸ்கேன் மையங்கள், மெடிக்கல்கள் நிறைய இயங்குகின்றன. இதில் பாராமெடிக்கல் படித்த மாணவ-மாணவிகளுக்குத்தான் நிறைய வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

எக்ஸ்ரே எடுப்பது, ரத்த மாதிரி சேகரிப்பது, ஈ.சி.ஜி. எடுப்பதில் தொடங்கி, நோயாளிகளை கவனித்து கொள்வது, அறுவை சிகிச்சைகளுக்கு உதவுவது வரை நிறைய வேலைவாய்ப்புகள், அவரவர் பகுதிகளிலேயே இருக்கிறது. அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள, பாராமெடிக்கல் படிப்புகள் வழிகாட்டுகின்றன.

வெகு குறுகிய கால வகுப்புகளில் தொடங்கி, 4-5 ஆண்டு கால படிப்பு வரை, ஏன்..? சில பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெரும் வகையிலான பாடங்களும் இருக்கிறது'' என்றவர், பாராமெடிக்கல் பிரிவில் சேர்ந்து படிப்பதற்கான கல்வித்தகுதிகளை விளக்கினார்.

''பாராமெடிக்கலில் ஒருசில டிப்ளமோ படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால்கூட போதும். அதேபோல, பிளஸ்-2 வகுப்பில், தேர்ச்சி அல்லது தோல்வியடைந்திருந்தால் கூட படிக்கமுடியும். மேலும் இளங்கலை பட்டம் படித்தவர்கள்கூட, கூடுதல் படிப்பாக இதை படிக்க முடியும்.

மருத்துவ பட்டப்படிப்புகளை படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, பாராமெடிக்கல் படிப்புகள் சிறந்தது. செலவு குறைந்தது.

ரூ.25 ஆயிரத்திற்குள்ளாகவே, இந்த பயிற்சிகளை முடித்துவிடலாம். அதேபோல, இந்த படிப்புகளுக்கு தேவை அதிகம் என்பதால், படித்து முடித்த உடனே, ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரைக்குமான சம்பளத்தில் பணிக்கு சேர்ந்துவிடலாம். வெளிநாடுகளிலும், சிறப்பான வரவேற்பு இருக்கிறது.

''பொறுமை குணமும், சேவை மனப்பான்மையும் கொண்டவர்களுக்கு, பாராமெடிக்கல் படிப்புகள் பொருத்தமானது'' என்ற கருத்தோடு நிறைவு செய்தார்.

'பார்மஸி டாக்டர்' எனப்படும் பார்ம்-டி படிப்பானது 6 வருட காலம் கொண்டதாகும். இந்தியாவில் பார்மஸி சார்ந்த துறையில் நோயாளிகளுக்கு நேரடி சேவை வழங்கும் வாய்ப்பை பெற்றது இந்தத் துறை மட்டுமே.

மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது பற்றி சொல்லிக்கொடுப்பது, ஆக்குபேஷனல் தெரபி.

பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு ஆடியோலஜி. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் படிப்பு 'ஸ்பீச் தெரபி'.

உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை குறித்து அறிவதற்கு, ரேடியோகிராபி படிப்பு. ரேடியோதெரபியில் சில பட்டப்படிப்புகள் (3 ஆண்டு) உள்ளன. சில டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.

நோயைக் கண்டறிதல், பகுத்து ஆராய்தல், நோயை தடுக்க ஆய்வு செய்வது போன்ற பணிகளுக்கு மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட் பணி உதவும். இந்த படிப்பில்தான் உடலில் உள்ள நீர், ரத்தம், ரசாயன அளவு பற்றி கற்றுத்தரப்படும். இப்படி நிறைய படிப்புகள் இருக்கின்றன.


Next Story