ஓவியங்களுக்கு உயிர்கொடுக்கும் இளைஞர்...!


ஓவியங்களுக்கு உயிர்கொடுக்கும் இளைஞர்...!
x

ஓவியக்கலை மூலம் வறுமையை வென்று, தனக்கென தனி அடையாளத்தையும் உருவாக்கி இருக்கிறார், மணிகண்டன்.

ஓவியக்கலை மூலமாக வறுமை வாழ்க்கையை பல்வேறு வண்ணங்களால் நிரப்பிக்கொண்ட புதுமைக் கலைஞன். வறுமையை வெல்ல அடுத்தவர்கள்தான் உதவவேண்டும் என்பதில்லை. ஏன்...? நாம் கூட, நம் வாழ்க்கையை வண்ணங்களால் அழகாக்கலாம்.

மணிகண்டன்

மாஸ்டர் பீஸ் ஓவியங்களுடன்...

டிரெண்ட் ஆன ஐயப்பன் ஓவியம்

ஓவியக்கலை மூலம் வறுமையை வென்று, தனக்கென தனி அடையாளத்தையும் உருவாக்கி இருக்கிறார், மணிகண்டன். தத்ரூபமாக வரையக்கூடிய இவர், சமீபத்தில் சுவாமி ஐயப்பன் படத்தை வரைந்து கவனம் ஈர்த்தார். அவரிடம் சிறுநேர்காணல்...

* உங்களை பற்றி கூறுங்கள்?

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் பேரையூர் என் சொந்த ஊர். இங்குதான் பிறந்து வளர்ந்தேன். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், பல இன்னல்களுக்கு இடையே படித்து, முன்னேற வேண்டியிருந்தது.

* வண்ண தூரிகைகளை கையில் ஏந்தியது எப்போது?

என் கைகளில் தூரிகை ஏந்தியபோது, 14 வயது இருக்கும். வறுமையில் இருந்து தப்பிக்கவே, தூரிகை ஏந்தினேன். சாலையோர சுவர்களில் வண்ணம் தீட்டுவதும், விளம்பரங்கள் எழுதுவதும்தான், ஆரம்பக்கட்ட வேலை. அங்கிருந்துதான், என்னை மெருகேற்றிக் கொண்டேன். ஓவியக்கலையை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டேன். 12-ம் வகுப்பிற்குள் சுவரோவியம் வரையும் அளவிற்கு, ஓவியக்கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டேன்.

* ஓவிய திறனை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

எனக்கு இயல்பாகவே ஓவிய திறன் இருந்தது. அதை சுவர் விளம்பர ஓவிய வேலைகள் மூலம் வளர்த்துக்கொண்டேன். ஒருகட்டத்தில் என்னை ஓவியனாக உணர்ந்தபோது, அதை படிப்பு ரீதியாக, பிரத்யேக பயிற்சி படிப்புகள் வாயிலாக கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். அதனால் சுவர் விளம்பர ஓவிய வேலைகளில் கிடைத்த பணத்தில், படிக்கவும் ஆரம்பித்தேன். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்புகளுடன்.... நான் பெரிதும் விரும்பிய ஓவிய பயிற்சிகளையும் முறையான படிப்பு மூலமாக கற்றுக்கொண்டேன். குறிப்பாக பி.காம் படித்து முடித்த பிறகு, பைன் ஆர்ட்ஸ் கலையில் டிப்ளமோ முடித்தேன். கூடவே கற்பனை திறனை வளர்க்கக்கூடிய மற்ற சில படிப்புகளையும் கற்றுக்கொண்டேன்.

* ஓவிய கலையில் உங்களது தனித்துவம் என்ன?

பென்சில் ஓவியம் வரைவேன். லைன் ஓவியமும் வரைவேன். சுவரோவியம், அக்ரிலிக் பெயிண்ட் ஓவியம், ஆயில் பெயிண்ட் ஓவியம், தத்ரூப ஓவியம், நீர் வண்ண ஓவியம் என எல்லா விதமான ஓவியங்களையும் வரைந்து பழகி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, என் வாழ்க்கைக்கு உயிரூட்டிய ஓவியக்கலையை ஏழை மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக, ஓவிய ஆசிரியர் பயிற்சி படிப்பையும் முடித்திருக்கிறேன். அதன் காரணமாக, சென்னையில் பிரத்யேக ஓவிய குழு ஒன்றை ஒருங்கிணைத்து, ஏழை மாணவர் களுக்கு இலவச ஓவிய பயிற்சிகளை வழங்குகிறேன்.

* நிறைய இளைஞர்கள் ஓவியம் வரைகிறார்கள். அவர்களில் இருந்து நீங்கள் வேறுபடுவது எப்படி?

ஓவியக்கலையை, நான் கலையாக கற்கவில்லை. வறுமையில் இருந்து குடும்பத்தை காப்பாற்றவும், என்னை நானே மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சியாகவுமே கற்றேன். அந்த வகையில் நான் சாதாரண ஓவிய கலைஞன் இல்லை. ஓவியக்கலை மூலமாக வறுமை வாழ்க்கையை பல்வேறு வண்ணங்களால் நிரப்பிக்கொண்ட புதுமைக் கலைஞன். வறுமையை வெல்ல அடுத்தவர்கள்தான் உதவவேண்டும் என்பதில்லை. ஏன்...? நாம் கூட, நம் வாழ்க்கையை வண்ணங்களால் அழகாக்கலாம். அதற்கு நான் உதாரணம்.

* எதை லட்சியமாக கொண்டிருக்கிறீர்கள்?

என் வாழ்க்கை மூலம் பல ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையை நம்பிக்கையால் நிரப்ப இருக்கிறேன். அவர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவ திட்டமிட்டிருக்கிறேன். இதற்காக நடனலோகா என்ற ஓவிய பயிற்சி கூடத்தை ஒருங்கிணைத்து, அதன் மூலம் ஓவியக் கலையில் ஆர்வம் காட்டும் ஏழை-எளிய குழந்தைகளுக்கு ஓவியம் வரைய கற்றுக்கொடுத்து வருகிறேன். அதோடு பள்ளி வளாகங்கள், பொது இடங்களில் பிரமாண்ட சுவரோவியங்களை வரைகிறேன்.

* நீங்கள் வரைந்ததில், மறக்கமுடியாத ஓவியம் எது?

சந்தோஷம் முகத்தில் தவழும்படி தவில் வாசிக்கும் சிறுவன் ஓவியம் எனக்கு எப்போதுமே ரொம்ப ஸ்பெஷல். அதீத ஈடுபாடுடன் வரைந்து, வண்ணம் பூசினேன். இருப்பினும், வீட்டு தேவைக்காக, அதை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டேன். அன்றிரவு எனக்கு தூக்கமே வரவில்லை. அதேபோல பரதம் ஆடும் பெண் ஓவியமும், ரொம்ப ஸ்பெஷல்.

* சமீபத்தில் நீங்கள் வரைந்த ஐயப்பன் ஓவியம் மிகவும் டிரெண்டிங்காக இருக்கிறதே. அதுபற்றி கூறுங்கள்?





ஆம்..! இந்தியாவின் கலை பண்பாட்டு துறை அடிப்படையில், பாரம்பரியத்தையும், விரத முறையையும் பின்பற்றி கடவுள்களின் ஓவியங்களை வரைந்து வருகிறேன். அப்படிதான், ஐயப்பன் ஓவியத்தையும் வரைந்து முடித்தேன். அது இணையவாசிகளால், மிகவும் கொண்டாடப்படுகிறது. நிறைய வாழ்த்துக்கள் கிடைத்தன. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பலரும் எனக்கு தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஐயப்பன் மட்டுமல்ல, நிறைய கடவுள்களை தத்ரூபமாக வரைந்திருக்கிறேன். குறிப்பாக, கோவில் கர்ப்பகிரகங்களில் இருக்கும் நிறைய சாமி சிலைகளை வரைந்திருக்கிறேன். இன்னும் அதிகமாக வரைவேன்.

அதுமட்டுமின்றி என்னுடைய ஓவியங்களை பலர் வீட்டில் பூஜைக்கு மற்றும் பிளக்ஸ் போஸ்ட் போன்றவைக்கு பயன்படுத்துவதால் மிகவும் பெருமையாக உணர்கிறேன்.


Next Story