யானைகளை விற்கும் ஜிம்பாப்வே..!


யானைகளை விற்கும் ஜிம்பாப்வே..!
x

தலைப்பைப் படித்ததும் ஆச்சரியமே மேலோங்கும். ஆனால், இதுதான் உண்மை. யானைகளை விற்பதற்காக பிரத்யேகமாக ஒரு ஷோரூமை மட்டுமே திறக்கவில்லை. மற்றபடி ஜிம்பாப்வேயில் யானை விற்பனை வெகு ஜோராக அரங்கேறி வருகிறது. இந்த விற்பனையை அரசே முன்னெடுத்து நடத்துவதுதான் இதில் ஹைலைட்.

''எங்கள் நாட்டில் அதிக எண்ணிக்கையில் யானைகள் இருக்கின்றன. அவற்றை சரியாகப் பராமரிக்க முடியாமல் திணறுகிறோம். நீங்கள் விரும்பினால் குறைந்த விலையில் யானைகளைத் தருகிறோம். ஷிப்பிங் சார்ஜ் இல்லாமல் நீங்கள் சொல்லும் இடத்துக்கும் யானைகளை அனுப்பி வைக்கிறோம். உங்களால் பணம் தரமுடியாத பட்சத்தில் அன்பளிப்பாகக் கூட யானைகளைத் தருகிறோம்...'' இப்படிச் சொல்வது ஜிம்பாப்வேயின் அதிபரான எம்மர்சன் மனங்கக்வா.

ஜிம்பாப்வேயில் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 84ஆயிரம் யானைகள் இருக்கின்றன. ஆனால், அங்கே 50 ஆயிரம் யானைகளுக்கு உரிய உணவு வளங்களும், இடமும் தான் உள்ளன. யானைகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவை செழுமையாக வாழ்வதற்கான வழிவகைகளை செய்வதற்காகவே யானைகளை விற்கிறது ஜிம்பாப்வே.

கடந்த வருடம் மட்டும் 90 யானைகளை துபாய்க்கும், சீனாவுக்கும் விற்றிருக்கிறார்கள். விற்கப்பட்ட யானைகளின் மதிப்பு 20 கோடி ரூபாய். ஆனால், இந்தத் தொகையை காடுகள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்புக்காகவே செலவிடப்போவதாக அறிவித்திருக்கிறது ஜிம்பாப்வே.

இதுபோக உலகம் முழுவதும் யானைத் தந்தங்களை விற்பதற்கு தடையிருக்கிறது. இந்தத் தடையை நீக்கச் சொல்லி ஜிம்பாப்வே, நமீபியா, ஜாம்பியா, போட்ஸ்வானா போன்ற நாடுகள் சர்வதேச வணிக கவுன்சிலிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. உலகிலுள்ள மொத்த யானைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான யானைகள் இந்த நான்கு நாடுகளிலும்தான் உள்ளன.

''இறந்த யானைகளிலிருந்து பெறப்படும் தந்தங்களை விற்றால் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை வைத்து 20 வருடங்களுக்கு வனத்தையும், இங்கே வாழும் உயிர்களையும் பாதுகாக்க முடியும் என்கிறார்...'' எம்மர்சன்.


Next Story