'அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உற்சாகம் பரவியுள்ளது' - யோகி ஆதித்யநாத்


அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உற்சாகம் பரவியுள்ளது - யோகி ஆதித்யநாத்
x

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நடைபெறப் போகும் நிகழ்வால் பக்தர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அயோத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தியிலும், உத்தர பிரதேசத்திலும் மட்டுமின்றி, நாடு முழுவதும் உற்சாகம் பரவியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நடைபெறப் போகும் இந்த நிகழ்வால் பக்தர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

இதுவரை அனைத்து ஏற்பாடுகளும் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இதேபோல், 22-ந்தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவும் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும். பொதுமக்களின் ஒத்துழைப்பு, துறவிகளின் ஆசி மற்றும் கடவுள் ராமரின் அருளால் இந்த விழா பாதுகாப்பாக நடைபெறும்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உள்ளூர் நிர்வாகமும், மாநில அரசும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அயோத்திக்கு வரும் பக்தர்களுக்காக கூடார நகரங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

5 நூற்றாண்டுகளுக்குப் பிறகு நடைபெறப் போகும் நிகழ்வு என்பதால், பக்தர்களின் இதயத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்துள்ளது. அதே உற்சாகம் எங்கள் இதயங்களிலும் உள்ளது. அனைவருக்கும் சிறப்பான தரிசனம் கிடைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. அயோத்திக்கு வரும் யாரும் எந்தவித சிரமத்தையும் அனுபவிக்கக் கூடாது.

உள்ளூர் பக்தர்களுக்காக பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. அதேபோல் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்களுக்காகவும் பயண திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


Next Story