காலம் கடந்தும் பேசப்படும் '16 வயதினிலே'தான் எனக்கு பெரிய படம் - நடிகர் கமல்ஹாசன்


காலம் கடந்தும் பேசப்படும் 16 வயதினிலேதான் எனக்கு பெரிய படம் - நடிகர் கமல்ஹாசன்
x

காலம் கடந்தும் பேசப்படும் ‘16 வயதினிலே’தான் எனக்கு பெரிய படம் என நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படம் 1977-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதில் இடம்பெற்ற செந்தூரப் பூவே, மஞ்சக்குளிச்சு, ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, செவ்வந்திப் பூ ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. தனது சினிமா வாழ்க்கையில் 16 வயதினிலே பெரிய படம் என்று கமல்ஹாசன் மலரும் நினைவுகளாக பகிர்ந்துள்ளார்.

சென்னையில் பிரபுசாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள 'செம்பி' படவிழாவில் பங்கேற்று நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, ''பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை சிரிப்பு எதுவும் வராது. நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டியிருக்கிறார்கள். 16 வயதினிலே படத்தில் என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த படத்தை கொண்டாடு கிறார்கள்.

அதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில்தான் இருக்கிறது. இப்போது 16 வயதினிலே படத்தை பேசுகிறார்கள். அது தான் எனக்கு பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம் என கேட்டால் அது பெரிய படம் இல்லை. ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும். படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போதுதான் சினிமா வளரும். நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள் அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். செம்பி படம் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்" என்றார்.


Next Story