சபரிமலையில் பெண்கள் - நடிகை நவ்யா நாயர் எதிர்ப்பு
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு நடிகை நவ்யா நாயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து சபரிமலை கோவிலில் பத்து வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.
நீதிபதிகள் கூறும்போது, “வழிபாடு என்பது ஆண்கள், பெண்களுக்கான அடிப்படை உரிமை. மாதவிடாய் காரணங்களை வைத்து பெண்களின் உரிமைகளை பறிக்க முடியாது. அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை வழிபட சம உரிமை கொண்டவர்கள்” என்று தீர்ப்பளித்தனர். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளன.
நடிகர் கமல்ஹாசன் இந்த தீர்ப்பை வரவேற்றார். அவர் கூறும்போது, “கோவிலுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களை அனுமதிக்க வேண்டும். கடவுள் வழிபாட்டில் அனைவரும் சமம் என்ற கருத்தை இந்த தீர்ப்பு வலியுறுத்தி உள்ளது” என்றார்.
நடிகை நவ்யா நாயர் பெண்கள் சபரிமலை செல்வதை எதிர்த்துள்ளார். அவர் கூறும்போது, “கோர்ட்டு தீர்ப்பை நான் மதிக்கிறேன். ஆனாலும் சபரிமலை கோவிலுக்கு குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் செல்ல கூடாது என்று நடைமுறையில் சில வழக்கம் இருக்கிறது. அந்த வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பது எனது கருத்து” என்றார்.
Related Tags :
Next Story