மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறினார்.
‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருக்கு 63-வது படம். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ் ஆகியோரும் உள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் 2 மாதமாக பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். தினமும் விஜய்யை காண படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடுகிறார்கள். மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பின் போது வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர்.
படப்பிடிப்பை முடித்து விட்டு புறப்படும் போது ரசிகர்களை பார்த்து விஜய் கையசைப்பதும் பதிலுக்கு அவர்கள் ஆரவாரம் செய்வதும் தினமும் நடந்தது. அதன்பிறகு காட்டாங்கொளத்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படப் பிடிப்பு நடந்தது. அங்கும் ரசிகர்கள் கூடினார்கள்.
படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் காரில் வீட்டுக்கு புறப்பட்டபோது ஏராளமான ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து தலைவா தலைவா என்று குரல் எழுப்பியபடி சென்றனர். இதனால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்று கார் கண்ணாடியை இறக்கி பின்தொடர்ந்து வரவேண்டாம், பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
ரசிகர்களுக்கு அவர் அறிவுரை சொல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story