‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் “இதுவரை பார்த்திராத அஜித்தை பார்க்கலாம்” - டைரக்டர் வினோத் பேட்டி


‘நேர்கொண்ட பார்வை’ படத்தில்  “இதுவரை பார்த்திராத அஜித்தை பார்க்கலாம்” - டைரக்டர் வினோத் பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2019 12:00 AM GMT (Updated: 13 Jun 2019 6:57 PM GMT)

அஜித்குமார் நடித்து, வினோத் டைரக்‌ஷனில், போனிகபூர் தயாரித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

குரல் சேர்ப்பு, படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. படம், ஆகஸ்டு மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டைரக்டர் வினோத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“அஜித் ஸ்ரீதேவியிடம் கொடுத்த ஒரு வாக்குறுதிக்காக உருவாகியிருக்கும் படம், இது. ஸ்ரீதேவி உயிரோடு இருக்கும்போது, அவருக்காக ஒரு படம் நடித்து தருகிறேன் என்று அஜித் அளித்த வாக்குறுதியை மறக்காமல், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில், இந்த படத்தில் நடித்துக் கொடுத்து இருக்கிறார். இது, எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும்.

அஜித் நடிப்பு, இதுவரை பார்த்திராத அளவுக்கு இருக்கும். இதுவரை பார்த்திராத ஒரு அஜித்தை, இந்த படத்தில் பார்க்கலாம். அவருடன் நடிப்பு திறமையும், அழகும் மிகுந்த வித்யாபாலன், மனைவி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக அமைந்து இருக்கிறது.

பொதுவாக பெண்களை ஆண்கள் எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்? என்பதே கதையின் கரு. கணவராகவே இருந்தாலும் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட படம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படம், இது.

அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தை தழுவிய கதை இது என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். அமிதாப்பச்சனை 75 வயது பெரியவராக அந்த படத்தில் காட்டியிருந்தார்கள். தமிழில், அஜித் கதாபாத்திரத்தை 47 வயதுள்ளவராக காட்டியிருக்கிறோம். இதுபோல் கதையில் இருந்து விலகாமல், தமிழ் படத்துக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘பிங்க்’ படத்தில் சண்டை காட்சிகள் கிடையாது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் 2 சண்டை காட்சிகள் உள்ளன.

படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். எல்லோரும் சொந்த குரலில் பேசியிருக்கிறார்கள். பொதுவாக ‘டப்பிங்’ பேசுவதற்கு முன்பு அஜித் படத்தை பார்ப்பதில்லை. ‘நேர்கொண்ட பார்வை’யை ‘டப்பிங்’குக்கு முன்பே பார்த்துவிட்டு, என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார்.”

இவ்வாறு டைரக்டர் வினோத் கூறினார்.

Next Story